வயிற்றில் குடல்வாலிலிருந்து மலக்குடல் வரையிலுள்ள பெருங்குடலில் எரிச்சலுடன் தோன்றும் வலி, மருத்துவத்தில் "இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்படுகிறது.
இதனால் தசைகள் இழுத்துக் கொள்ளுதல், அடிவயிற்றில் வலி, வாயுவினால் வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் பொதுவாக ஏற்படுகின்றன. பெரும்பாலும் இந்த வலியானது நபருக்கு நபர் மாறுபடலாம்.
ஐந்து பேரில் ஒருவருக்கு...ஒரு சிலருக்கு இந்த வலியானது நீண்ட நாள்களாக இருக்கும். சில நேரங்களில் இவை அதிகமாகி அதன் பின்னர் முழுவதும் சரியாகி விடுவதும் உண்டு. இளைய தலைமுறையினரில் 5 பேரில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது.
காரணம் என்ன? இந்த நோய் எந்தக் காரணத்தினால் ஏற்படுகிறது என்பது சரியாகத் தெரியவில்லை. நாம் உணவை உண்ணும் போது பெருங்குடலில் அமைந்துள்ள அடுக்கடுக்கான தசைகளால் ஆன சுவர்கள், சுருங்குதல், தளர்ச்சியுறல் போன்ற பணிகளை செவ்வனே ஒருங்கிணைத்துச் செய்வதால் பெருங்குடலின் குழாய் வழியே உணவு தள்ளப்படுகிறது.
இந்த நோய் அறிகுறி காணப்படுமேயானால் சாதாரணமாக சுருங்கி விரியும் தன்மையில் மாறுதல் ஏற்பட்டு, உணவானது அதிவிரைவாகத் தள்ளப்படுவதால் காற்று உருவாகி, அப்பகுதி உப்பலாகி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் எதிர்மறையாக, உணவு தள்ளப்படுவது மெதுவாக ஏற்பட்டால் மலம் இறுகி, கெட்டித்தன்மையுடன், உலர்ந்து விடுகிறது. நரம்பு மண்டலத்தில் அல்லது குடலில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், காய்ச்சல் முதலியவற்றாலும் எரிச்சலுடன் கூடிய குடல் வலி தோன்றலாம்.
நிவாரணம் பெற வழி என்ன? இந்த நோய் எதனால் வருகிறது என்பதைத் தெளிவாகக் கூற இயலாத காரணத்தினால், மேலைநாடுகளில் இந்த அறிகுறிகள் தோன்றும்போது நிவாரணம் பெற சில சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
அதில் நார்ச்சத்துகள் நிறைந்த உணவை உண்ணுதல், இந்த நோயைத் தோற்றுவிக்கக் காரணமாக உள்ள உணவுப் பொருள்களை விலக்குதல், ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருந்துகளையும், சோர்வை நீக்கி, சுறுசுறுப்படைய வைக்கும் மருந்துகளையும் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்தப் பரிந்துரைகளை ஏற்று அதன்படி நடக்கும் பலருக்கு, "இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்' அறிகுறிகள் லேசாகத் தோன்றினாலும், உணவு மற்றும் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் மாற்றங்கள் மூலம் அதிலிருந்து விடுதலை பெறுகின்றனர். இருப்பினும் ஒரு சில நேரங்களில் சிகிச்சை தக்க பலனளிக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.
அக்குபஞ்சர் சிகிச்சை-சிறப்பு அம்சம் என்ன? இந்த நோயால் அவதிப்படுவோருக்கு அக்குபஞ்சர் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இந்த நோய் ஏற்படுவதற்கு அக்குபஞ்சர் சிகிச்சையில் கூறப்படும் காரணம், கல்லீரலில் சக்தியானது தடைபட்டு அதனால் மண்ணீரலில் உணவை செரிமானம் செய்வதற்கான நிகழ்வுகளும் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு கல்லீரல் சக்தி தடைபடுவதால், வாயு உருவாகி வயிறு உப்புசம், மலச்சிக்கல், அடிக்கடி ஏப்பம், மனநிலையில் மாறுதல், எரிச்சல் ஆகியவற்றுடன் உணர்ச்சிவசப்பட்டு கவலையடைதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. மண்ணீரலும் இந்த அறிகுறிகளால் பாதிக்கப்படுமானால் களைப்பு மற்றும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இவற்றில் ஏதேனுமொன்று ஏற்படலாம்.
அக்குபஞ்சர் சிகிச்சையால் கல்லீரல் சக்தியானது, உணவைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு சரி செய்யப்படுகிறது. அத்துடன் செரிமானத்தை மேம்படுத்தி மண்ணீரல் செயல்பாட்டினைச் சரி செய்து வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுத்து அதன் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
வயிறு அல்லது அடிவயிறு ஆகியவற்றில் எரிச்சலுடன் தோன்றும் வலிக்குக் காரணம் வயிற்றில் எற்படும் பல வகையான சமநிலையற்ற தன்மையே ஆகும். இதனால் ஜீரணக் கோளாறு, உட்கொண்ட உணவு சரிவர செரிக்காமல் இருப்பது ஆகிய பிரச்னைகள் தோன்றும். இதனால் வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, ஏப்பம், தலைவலி, வயிற்றுப் போக்கு, அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடலாம். குறிப்பிட்ட வலியை அனுபவித்து உணர்தல் என்பது சூடு, குளிர் போன்றவற்றால் வயிறு எவ்வாறு பாதிக்கப்படுகிறது எனபதைப் பொருத்தே ஒருவருக்கு அமைகிறது. அல்லது வயிற்றின் சக்தி தடைப்படுவதாலும் மேற்கூறிய பிரச்னைகள் எழலாம்.
எனினும் அக்குபஞ்சர் சிகிச்சை முறை இந்தப் பிரச்னையிலிருந்து நிவாரணமளித்து, வருங்காலத்தில் நோய்வரும் அறிகுறிகளைத் தடுத்து, சாதாரண மனிதர்களைப்போல் நோயின்றி நீண்ட நாள்கள் வாழ்வதற்கு வழிவகை செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.