

* எனக்கு வயது 40. கடந்த ஆறு, ஏழு மாதங்களாக எனது இடது கண் துடிக்கிறது. கண் துடிக்கும்போது முகமும் உதடு வரை துடிக்கிறது. டென்ஷன் அதிகமானால் துடிப்பு கூடுகிறது. இது எதனால்? ஆயுர்வேதத்தில் சிகிச்சை உள்ளதா?
ராஜி சண்முகம், கோவை.
"உதாவர்த்தம்' என்ற பெயரில் ஓர் உபாதை இருக்கிறது. தலையைச் சார்ந்த சில இயற்கை உபாதைகளான கொட்டாவி, கண்ணீர், தும்மல், ஏப்பம், வாந்தி போன்றவற்றை தடுத்து நிறுத்த முயற்சிப்பதால், மூளையிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் நரம்புகளில் ஏற்படும் தாக்கம், நீங்கள் குறிப்பிடும் துடிப்பு உபாதைக்குக் காரணமாகலாம். மூளைப் பகுதிக்கு வறட்சி ஏற்படாத வகையில் தர்ப்பகம் எனும் ஒரு கபம் செயல்படுகிறது. இந்த கபத்தினுடைய நெய்ப்பினால் நரம்புகளில் குடி கொண்டுள்ள வாயுவின் வறட்சியான குணம் வளர்ந்துவிடாமல் எந்நேரமும் நெய்ப்பை அவற்றின் மீது படரச் செய்து ஒரு கவசம் போன்ற பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேற்கூறிய காரணங்களாலும், உணவில் அதிக காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையைக் சேர்ப்பதாலும், அதிக அளவில் மிளகு, மிளகாய், அத்திப் பிஞ்சு, சுண்டை வற்றல், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் ஏற்படும் உடல் உட்புற வறட்சியானது, இந்த மூளை நரம்புகளின் மேலுள்ள நெய்ப்பு எனும் கவசத்தை வறட்சி எனும் குணாதிக்யத்தால் கழட்டிவிடுகிறது. மிருதுவான மூளை நரம்புகள் வறட்சியின் தன்மையால் தன்னிச்சையாகத் துடிக்கின்றன. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உங்களுக்கு மூளை நரம்புகளுக்கு வலுவூட்டும் நெய்ப்பு சிகிச்சைதான் மிகவும் தேவை என்பதை உணரலாம்.
மூக்கு துவாரம்தான் தலைக்குச் செல்லும் வழி. அங்கு செலுத்தப்படும் மருந்து தலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள சிருங்காடகம் என்னும் இடத்தை அடைந்து அங்கு பரவி, தலை, கண்கள், காதுகள், தொண்டை போன்ற இடங்களில் உள்ள நரம்புகளில் நுழைந்து, கழுத்துக்கு மேல் உள்ள உறுப்புகளில் தோன்றிய எல்லா வகை நோய்க் கூட்டங்களையும் அங்கிருந்து விரைவில் வெளிப்படுத்திவிடுகின்றன.
க்ஷீரபலா 101, தான்வந்திரம் 101, அணு தைலம், கார்ப்பாஸôஸ்த்யாதி தைலம், பலா தைலம் என்றெல்லாம் பல ஆயுர்வேத மூலிகை மருந்துகளைக் கொண்டு மூக்கினுள் செலுத்திக் குணப்படுத்தலாம். இவற்றில் எது உகந்த மருந்தோ அதைச் சரியான அளவில் ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு உபயோகிப்பதே சிறந்தது.
தலையில் எண்ணெய் தேக்கி வைக்கும் முறையான சிரோவஸ்தி எனும் சிகிச்சை முறையும் தங்களுக்கு நல்ல பலனைத் தரும். க்ஷீரபலா தைலம் இந்த உபாதைக்குச் சிறந்தது. இளஞ்சூடாகத் தலையில் ஊற்றி, காது, வாய், மூக்கு இவற்றின் வழியாக வெளிவரும் வரையிலும், வேதனை குறையும் வரையிலும் தலையில் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய இந்த சிகிச்சை முறையும் நல்லதே. ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி இந்த சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும்.
கர்ணபூரணம் எனும் காதுகளில் வெதுவெதுப்பாக ஊற்றி நிரப்பும் எண்ணெய் சிகிச்சைமுறையும், கண்களில் மூலிகை நெய்யிட்டு நிரப்பும் சிகிச்சையும், வாயினுள் எண்ணெய் விட்டுக் கொப்பளிக்கும் கபள - கண்டூஷ சிகிச்சையும் நல்ல பலனைத் தரக் கூடியவை.
தசமூல ரஸôயனம் எனும் லேகிய மருந்தை சுமார் 10 கிராம் இரவு படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும். உணவில் பொதுவாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை ஏற்றவை. பால், நெய், தயிர், வெண்ணெய், இனிப்பு மாதுளை, வாழைப் பழம், மாம்பழம், திராட்சை, அரிசி, கோதுமை, உளுந்து இவை உணவுக்கு ஏற்றவை. அதிக உடற்பயிற்சியும், இரவில் கண் விழித்தலையும் தவிர்க்கவும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.