

சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் நா வறட்சி குறைவதில்லை. நா வறட்சியைப் போக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள்
நல்லெண்ணெய் மற்றும் தேங்காய்ப்பாலை வாயில் விட்டுக் கொப்பளித்துத் துப்புவதால் வாய் வறட்சியையும் நாக்கு வறட்சியையும் போக்கிக் கொள்ள முடியும். எள்ளை மென்று வெகுநேரம் வாயில் வைத்திருந்து பிறகு உமிழ்ந்து கொப்பளிப்பதும் நல்லதே.
இரவில் சாப்பிடும் உணவு மாவு வகைகளாகிய இட்லி, தோசை என்று அமைந்திருந்தால், நடு இரவில் நாக்கு உலர்ந்துபோய் அதிக தண்ணீரின் தேவையை உணர்த்தக் கூடும். மாவினுடைய அம்சம் ரத்தத்தில் கலந்திருக்கையில் அதை நீர்க்கச் செய்து, செரிமானம் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உடல் ஆட்படும்போது, நீரின் தேவைக்கான உத்தரவை நீர் வேட்கையின் மூலம் உத்தரவிடுகிறது. அதனால் நீங்கள் மாவுப் பண்டங்களை இரவில் சாப்பிடாமல், கோதுமையை உப்புமா, சப்பாத்தி என்ற வகையில் மாற்றி அமைத்துச் சாப்பிடவும்.
பகல் வேளைகளில் ஆடை சத்து முழுவதும் எடுத்துக் கடைந்த தயிரில் நிறைய நீர் சேர்த்து, நீர் மோர் தயாரித்து கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை உப்பு சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. நல்ல குளிர்ச்சியானது. நா வறட்சியைப் போக்கும்.
இரவில் அதிகம் தண்ணீர் பருகினால், சிறுநீரின் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் தூக்கம் கெட்டுவிடக் கூடும். தூக்கம் குறைந்தால் அனேக உபாதைகள் தலைதூக்கிவிடும். அதனால் உலர்ந்து போய்விட்ட நாக்குக்கு வெட்டி வேர் போட்டு ஊறிய மண் பானைத் தண்ணீரை, நாக்கின் மீது படர விட்டு, சிறிதுநேரம் வைத்திருந்து சிறிய அளவில் பருகினால், மேலும் மேலும் ஏற்படக் கூடிய நாவறட்சியை எளிதில் போக்கிக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.