மன்னர் சரபோஜி செய்த சர்ஜரி
இந்த நூற்றாண்டிலேயே, மிக அதிக முன்னேற்றம் கண்ட சிகிச்சைகளுள் ’இது’வும் ஒன்று. ரொம்ப சுவாரசியமான கதையும்கூட. முதன் முதலில் ’இது’ நன்றாகப் பழுத்து கண்களுக்குள் வெள்ளையாகத் தெரியும் போது, பைபிள் போன்ற கனமான புத்தகத்தால், கண்ணில் ஓங்கி ஒன்று போடுவார்களாம். ’இது’ கண்ணுக்குள் விழுந்து விடுமாம். மீண்டும் பார்வை கிடைத்ததா இல்லையா என்பதைப் பற்றி தகவல் இல்லை. சுஷ்ருதா காலத்தில், couching. கண்ணுக்குள் ஒரு ஊசியை நுழைத்து, ’இதை’ உள்ளே தள்ளி விட்டதை விலாவாரியாக எழுதி வைத்திருக்கிறார். உள்ளே தள்ளி விட்ட பின் மூக்கின் எதிர்பக்க நாசியை மூடிக்கொண்டு அறுவைசிகிச்சை செய்த அதே பக்கத்து நாசியால் ”ஹூம்…” என்று சிந்த வேண்டும். சளியாக ’இது’ வெளிவந்து விடும் என்று நம்பியிருக்கிறார்கள். தாய்ப்பாலும் இளஞ்சூட்டில் நெய்யும் தான் ஆபரேஷனுக்குப் பிறகான கண் மருந்து. தலையில் மணல் மூட்டையைக் கட்டி, வாரக் கணக்கில் அசையாமல் படுத்திருக்க வேண்டும். இப்போது ’இதை’ டே கேரில் செய்துகொண்டு, சிலநாட்களில், வேலைக்குத் திரும்புமளவுக்கு வந்து விட்டோம்.
போன பாரா முழுவதும் “இது” என்று குறிப்பிடப்பட்ட அந்த இது தமிழில் கண்புரை என்று அழைக்கப்படும் காட்டராக்ட்.
இன்றளவில், மிக அதிகமாக பொதுமக்கள் அறிந்திருப்பதும், அறிய விழைவதும், நிறைய தவறான கருத்துக்கள் நிலவுவதும் கண்புரை அறுவை சிகிச்சை பற்றித்தான். Phaco முறைப்படி, அறுவை சிகிச்சை செய்து கொண்ட , மெத்தப் படித்தவர்கள் கூட நான் லேசரில் காட்டராக்ட் செய்து கொண்டேன் என்று சொல்லக் கேட்கிறேன்.
கண்ணுக்குள் வைக்கக் கூடிய , லென்ஸ் ( INTRA OCULAR LENS ) இந்த நூற்றாண்டின் மகத்தான அரிய கண்டுபிடிப்பு. ஆங்கிலேயரான, ஹெரால்ட் ரிட்லி, அதை உருவாக்கிய விதம் கூட ரொம்பவே சுவாரசியம். இரண்டாம் உலகப்போரின் போது, விமானிகள் சிலரின் கண்களில், காக்பிட்டின் அக்ரிலிக் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளே போய்விட்டன. அவ்வாறு உள்ளே சென்ற அக்ரிலிக் பொருட்கள், கண்ணுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கம்மென்று இருப்பதைப் பார்த்து, அந்த வகையான பொருட்களைக் கொண்டு ரிட்லி உருவாக்கியதே முதல் லென்ஸ்.
கண் புரை என்றாலென்ன?
முட்டை வடிவமான நம் கண் காமெராவை ஒத்தது. காமெராவைப் போன்று, லென்ஸ் , ஸ்க்ரீன் (retina), ஷட்டர் (iris), அபெர்ச்சர் (pupil) எல்லாம் உண்டு. கண்ணில் இயற்கையாய் அமைந்த லென்ஸ், ஸ்படிகம் போல் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. உடலின் மெடபாலிக் மாற்றங்களால், இத்தன்மையை சிறிது சிறிதாக இழந்து பனி படிந்தாற்போலவோ, பழுப்பு நிறமாகவோ மாறிக்கொண்டே இருப்பதையே புரை என்கிறோம்.
புரையின் அறிகுறிகள் என்ன?
ஆரம்ப நிலையில், கூச்சம் (glare), ஒளிச்சிதறல் இருக்கும். சூரிய வெளிச்சத்திலோ, அதிக ஒளி இருக்கும் போதோ, எதிரில் ஆள் வருவது தெரியும், ஆனால், யாரென்று முகம் தெளிவாக இருக்காது. குறைந்த வெளிச்சத்திலும் பார்வை கம்மியாக இருக்கும். போகப்போக, தினசரி வேலைகளைச் செய்ய முடியாத அளவிற்கு பார்வை, மறைக்கத் துவங்கும்.
கண்புரைக்கு தீர்வு என்ன?
அறுவை சிகிச்சையால் மட்டுமே, கண் புரையை நீக்க முடியும். அகற்றியபின் லென்ஸ் பொருத்த வேண்டும். மருந்து மாத்திரைகளால் புரையைக் கரைக்க முடியாது.
எப்போது அறுவை சிகிச்சை தேவை?
உங்கள் அன்றாட வேலைகளை பாதிக்கத் துவங்கும் போது. ஒவ்வொரு கண்ணாக மூடி, தனிப்பட்ட பார்வை குறைகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். பழுப்பு நிறக் காட்டராக்டுகள், பார்வைக்குறைவு அவ்வளவாக இல்லாவிடினும் ,கடினமாகிக் கொண்டே போகும். சாதாரணமாக நுங்கு போல் தன்மையிலிருந்து, புளியங்கொட்டை போன்ற கடினமாகும் தன்மை கொண்டது காட்டராக்ட்.
எந்த மாதிரியான அறுவை சிகிச்சை?
முக்கால்வாசி, தையலற்ற, நுண் துளை எனப்படும் phacoemulsification முறைப்படியே செய்யப் படுகிறது. Ultrasound கதிர்களைக் கொண்டு இயங்குவது, ஃபேக்கோ. சில சிக்கலான தருணங்களில், வேறு முறைகள் உள்ளன. அவையும் மிகப் பாதுகாப்பானவையே.
லென்ஸ்
உள்ளே வைக்கப்படும் லென்ஸ்களில் நாளுக்கு நாள் முன்னேற்றம். Rigid lens, foldable lens, aspheric lens, toric lens, multifocal lens என்று பல வகைகள் உள்ளன. இவற்றின் சாதக பாதகங்களும், உங்களுக்குப் பொருத்தமானது எந்த லென்ஸ் என்பதும் உங்கள் மருத்துவரால் விளக்கப்படும்.
எந்த வகை மரப்பூசி?
சொட்டு மருந்திலேயே மரக்க வைத்து (topical anesthesia), செய்ய முடியும் என்றாலும், நோயாளியின் உடல் நிலையையும், புரையின் கடினத் தன்மையையும் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
வேலைக்கு எப்போது திரும்பலாம்?
செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முறை, நோயாளியின் உடல், கண் நிலை, மற்றும் செய்யும் வேலையின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு வாரத்திலிருந்து, ஒரு மாதம் வரை வேறுபடும். படிப்பது, தொலைக்காட்சி ஆகியவற்றை ஒரு வாரம் தவிர்ப்பது நல்லது.
லென்ஸ் வைத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னரும் கண்ணாடி தேவைப்படுமா?
அவரவர், கண் அமைப்புக்கேற்ப, படிப்பதற்கு தேவைப்படும். Multifocal lens இரண்டு கண்களிலும் வைத்த பின்னர், 90 சதவிகிதம் தேவைப்படாது.
எத்தனை நாள் லென்ஸ் நன்றாக இருக்கும்?
வாழ்நாள் முழுவதும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா?
தாராளமாக. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டு, தாராளமாக செய்து கொள்ளலாம்.
கண் புரை சிகிச்சையின் நவீன முன்னேற்றம் என்ன?
FEMTOSECOND LASER இத்துறையில் கால் பதித்துள்ளது. அறுவை சிகிச்சையின் சில ஸ்டெப்களை , இதன் மூலம் செய்யலாம்.
தஞ்சையின் சரபோஜி மன்னர், பல ஆண்டுகளுக்கு முன் கண் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கியதோடு, அதைப் பற்றிய ஆங்கிலக் குறிப்புகளும் வைத்திருந்திருக்கிறார். அன்றும் ,இன்றும், கண் மருத்துவத் துறையில், உலக நாடுகளின் மத்தியில், இந்தியாவே முன்னணியில் நிற்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
