சரஸ்வதியின் எரிச்சலும், பொறுமையின்மையும் வெளிப்படையாகத் தெரிந்தது.
சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் 25 வயது பெண். இரவு ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்து, சென்னையிலிருந்து தஞ்சை வந்த களைப்பு.
“டாக்டர், நிஜமாகச் சொல்கிறேன். பஸ்ஸில் வரும் போது கண்ணில் தூசி விழுந்து விட்டது. அதை எடுக்கத்தான் வந்தேன். எடுத்துட்டீங்க... தேங்க்ஸ்...”
மருந்து எழுதிக் கொடுத்தேன்.
”கண்ணாடி சமீபத்தில போட்டது. நீங்க, திரும்பித் திரும்பி கேக்கற மாதிரி, எனக்குத், தலைவலி, வாமிட்டிங், கண்ல பனி மாதிரி மறைக்கிறது எதுவுமே இல்லை”
எப்படி விடுவது. தூசி எடுப்பதற்காக வந்தாலும் கண்களைப் பார்ப்பது கடமைஅல்லவா! ஆப்டிக் நரம்புகள், வீங்கிக் காட்சியளித்தன. PAPPILOEDEMA.
இப்போது கேள்வியை மாற்றினேன்.
“காதுல ஏதாவது பிரச்சினை?”
சரஸ்வதி கொஞ்சம் காது கொடுத்துக் கவனிக்கத் துவங்கினாள்.
“காது ஒரு வருஷமாவே ப்ராப்ளம் தான் டாக்டர். ஒரே சத்தம், “ஞொய்னு”. ஒரு காது மந்தமாகவே ஆகிவிட்டது. ஆடியோகிராம் கூட எடுத்துப்பார்த்தேன், காது டாக்டர் சொல்லி, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு என்றார். NEURONAL DEAFNESS.”. மேற்கொண்டு டெஸ்ட் பரிந்துரைக்கவில்லை”
இன்னும் சில சின்னச் சின்ன பரிசோதனைகள், என் டயக்னோஸிஸை கோடி காட்டின. ஸ்கான் உறுதி செய்தது. நான் நினைத்தது போலவே, CP ANGLE TUMOUR எனப்படும், ப்ரைன் ட்யூமர்.
அப்புறம், சென்னையில், அறுவை சிகிச்சை செய்து அது அகற்றப்பட்டு, இன்று சரஸ்வதி, அழகான பெண் குழந்தையுடன் சவுக்கியமாக இருக்கிறாள். தஞ்சை வரும் போதெல்லாம், என்னைப் பார்க்கத் தவறுவதில்லை.
***-***
எப்போதுமே பேஷன்டுகளுக்குப் பொறுமை இருப்பதில்லை. எந்தக் கண் சிவப்பாயிருக்கிறதோ, உறுத்துகிறதோ, அதைத் தவிர, அடுத்த கண்ணை பரிசோதிக்கக் கூட விடமாட்டார்கள். “டாக்டர், அதில் ஒன்றுமில்லை, இந்தக் கண் மட்டும் தான்” என அவசர அவசரமாக நம்மிடமிருந்து விடுபட்டுக் கிளம்புவார்கள்.
“ஒரு கண்ணுக்கு ஒரு கண்ணு டெஸ்டிங் ஃப்ரீதாங்க, சும்மா டெஸ்ட் பண்ணிக்கோங்க!”, என்று நானும் வேடிக்கையாக கூறுவதுண்டு.
பனிரெண்டாவது படிக்கும் நிதியின் கதை வேறுவிதம். கோயமுத்தூரில் படிக்கும் அவள் மே மாத லீவுக்கு, வீட்டுக்கு வந்திருந்தாள். ஒரு வாரமாக, விட்டு விட்டு, கடுமையான தலைவலி.
“படுத்துக் கொண்டே டீ.வீ. பாத்துட்டே இருக்கா மேம், பவர் ஏறியிருக்கும்” என்றார், தாய். பவர் சிறிது ஏறியிருந்தது தான். கொஞ்சம் ஆப்டிக் நரம்பு, சிவப்பாக இருந்தது. [CONGESTED AND HYPEREMIC.] நிதியின் முகமே வாடிப்போய் இருந்தது. எனக்கு அவளைச் சிறு குழந்தையிலிருந்து தெரியும். வியாதியைக் கொண்டாடுகிற டைப் அல்ல. எப்போதும் ஒரே டாக்டரிடம் பார்த்துக் கொள்வதில் உள்ள அட்வான்டேஜ் இது தான். என்னைப் போல் சிறு நகரங்களில், இருபது வருடமாக ப்ராக்டீஸ் பண்ணுபவர்களுக்கு உள்ள சவுகரியம், முக்கால்வாசி நோயாளிகள், குடும்ப நண்பர்கள் போல் ஆகி விடுவர், சிறு மாற்றங்கள் கூட எங்கள் கண்களுக்குத் தப்பாது.
நிதியின் கேசும் அப்படித்தான். ‘kindly rule out idiopathic intracranial hypertension” , என்ற பரிந்துரைக் கடிதத்தோடு, நரம்பியல் டாக்டரிடம் அனுப்பி வைத்தேன். இடையில் வேறு யாரோ குழப்பியதில், மூன்று நாட்கள் தாமதித்ததில், இரண்டிரண்டாகத் தெரியும் 6th nerve palsy, பார்வைக் குறைவு, மங்கல், இன்னும் அதிகத் தலைவலியோடு, classic pappiloedema வந்து விட்டது. MRI SCAN கூட நார்மலாகவே இருந்ததால், என் கருத்தை வைத்தே, நரம்பியல் மருத்துவர் வைத்தியம், தொடங்கி விட்டார்…. ஒரு வாரத்தில் சரியாகி, பள்ளிக்கூடமே போய் விட்டாள். , அமெரிக்காவில் வசிக்கும் நிதியின் டாக்டர் தந்தையோ, எங்கள் நகரத்தில் இல்லாத டெஸ்டின் பேரையெல்லாம் செய்யச் சொல்லி, அங்கிருந்து விடாமல் ஃபோன் பண்ணிக் கொண்டிருந்தார்.
“சார், இது அமெரிக்காவல்ல, மேலும், இந்த டெஸ்ட் வருவதற்கு முன்னரேவும் இதைக் கண்டுபிடித்து வைத்தியம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். உங்கள் மகளின் உடல் நிலையை, என் உள்ளங்கையைப் போலறிவேன். பயப்படாமல் இருங்கள்”. என்றேன்.
***-***
ஃபரீதாபேகத்தின் பாடு தான் ரொம்பப் பாவம். ஏற்கனவே, இரண்டு பெருமருத்துவமனைகள் உள்பட, நான்கு பேரிடம் காண்பித்து விட்டார்கள்.
கண் சரியாகத் தெரியவில்லை, என்பது தான் கம்ப்ளெய்ன்ட். நடுத்தர வயது சாதுப் பெண்மணி. அவரது துரதிருஷ்டம், கண்ணில், CSR எனும் வேறு பிரச்சினையும் இருந்தது. அது சரியான பின்னரும், கண் தெரியவில்லை எனும் அதே பாட்டு. தலைவலியில்லை, வேறு எந்தத் தொந்தரவும் இல்லை.. சார்ட்டை வேறு முழுதாக ,கடகடவென்று படித்தாள். முந்தைய கண் மருத்துவர் அறிவுரைப்படி மன நல மருத்துவரிடமும் சென்றாயிற்று.
பெண்கள் பாவம், ஒன்றுக்கு இரண்டு முறை ஒரு தொந்தரவைச் சொன்னால், மனநல பாதிப்பாகவே பார்க்கப் படுகிறது. ஃபரீதா, பாவமாக,” இப்ப அடுத்த கண்ணும் மறைக்குது, டாக்டர்.”, என்றார்.
CSR, இல்லாத கண். எனக்குத் துணுக்கென்றது.
அவசரமாகக், கையால் பரிசோதிக்கும் confrontation field test, bitemporal hemianopia வை, உறுதி செய்ய, ஐந்து நிமிடத்திற்குள், எந்த ஸ்கானும் செய்வதற்கு முன்னரே, பிட்யூடரி ட்யூமர், உறுதியாகி விட்டது. இவரும், ஆபரேஷன் நன்றாக முடிந்து, பார்வையும் தெளிவாகி, நன்றாக இருக்கிறார்.
***-***
ஒரு முறை, சர்க்கரை நோய் இல்லாமல், திடீரென இரண்டாகத் தெரிகிறது, என 6th nerve palsy உடன் வந்த பேஷன்டை , நான் ஸ்கேன் எடுத்து வாருங்கள், ட்யூமர் இருக்கலாம் , என்றவுடன்,
“தேவையில்லாமல், கண் டாக்டர் எதுக்கு ஸ்கான் எடுக்கச் சொல்கிறீர்கள்” எனக் கடுப்படித்துவிட்டுப் போனார். ஆனால், ஒரு மாதம் கழித்து, மொட்டைத் தலையுடன் என்னைப் பார்க்க வந்தார்.
“டாக்டர், நீங்கள் சொன்ன போது அலட்சியப் படுத்தினேன், இப்போது, ப்ரைன் ட்யூமர் உறுதியாகி, நாளை சர்ஜரி, நாளை என்னாகுமோ! இன்று உங்களைப் பார்த்து சொல்லிவிட்டுப் போக வந்தேன்”
நான் மட்டுமல்ல, அனைத்து கண் மருத்துவர்களுமே, பலமுறை மூளைக் கட்டிகளை, பிற மூளைப் பாதிப்புகளை, கண் பரிசோதனையின் போது கண்டுபிடித்து இருக்கிறோம். இது சில சாம்பிள்கள் மட்டுமே. இத்தகைய அநுபவங்கள் ஏராளம்….
இதே போன்று ஸ்ட்ரோக் வரப்போவதைக்கூட தடுமாறும் பார்வையிலிருந்து கண்டு பிடித்து விடுவோம். ரெடினா என்னும் விழித்திரைப் பரிசோதனையில், கொலெஸ்ட்ரால் திப்பிகள் ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, கழுத்தின் ரத்தக் குழாய்களின் டாப்ளர் ஸ்கேன் மூலமாக, கொழுப்பு அடைப்புகளை கண்டுபிடித்து நீக்கி, பெரும் ஆபத்துகள் தவிர்க்கப் பட்டுள்ளது.
கண் பரிசோதனை என்பது, கண்ணாடிக்காக மட்டுமல்ல. தலைவலி உள்ளவர்கள் எல்லோருமே ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதே போன்று, டெஸ்ட் எழுதிக் கொடுத்து, அது நார்மல் என்று வந்து விட்டால், தேவையில்லாமல் டெஸ்ட் செய்யச் சொல்லி டாக்டர்கள் பரிந்துரைத்து விட்டார்கள் என்று குமுற வேண்டாம். இன்றுள்ள சூழ்நிலையில், எந்தத் தலைவலியையும், தீவிரமாக ஆராய்ந்த பின்னரே, வைத்தியம் செய்ய முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.