மெட்ராஸ் ஐ எனப் பெருமையுடன் வழங்கப்படும் கண்வலி சீசன் முடிவுக்கு வந்த மாதிரியே தோன்றினாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் நோயாளிகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்…
உச்சக்கட்டமாக சென்னைக்கண் பாதிப்பு சில வாரங்களுக்கு முன் இருந்த போது, தினம் ஏராளமானவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் …
எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி,
“உங்களுக்கு எப்படி டாக்டர் வராமலிருக்கிறது/” என்பது தான்……
“கடவுள் புண்ணியத்தில்”, என்று சொன்னாலும் என் அறையிலிருந்து வெளியேறுவதற்குள் அவர்களுக்குக் காரணம் புரிந்துவிடும்….என் கைகளை உடனே கழுவுவது மட்டுமல்லாமல், அவர்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்திய கருவிகள், பேனா முதற்கொண்டு எல்லாவற்றையும், ஸ்பிரிட் கொண்டு துடைப்போம். கதவு கைப்பிடியைக் கூட விடுவதில்லை..
முக்கியமாக, ஆஸ்பத்திரி வளாகத்தில் நானும் என் உதவியாளர்களும் அவரவர் கண்களைத் தொடவோ, கசக்கிக் கொள்ளவோ மாட்டோம்…
இவ்வாறான பரவும் நோய்களைத் தடுப்பதற்கு, மிகவும் கவனம் தேவை. வீட்டுக்குள், தலையணை, துண்டு, டீ.வீ.ரிமோட், திரைச்சீலைகள் போன்ற எல்லாவற்றின் மூலமாகவும் பரவும்.
சில வருடங்களுக்கு முன், இதே போன்றதொரு கண்வலி சீசனின் போது, இரண்டு வயதுக் குழந்தை ஒன்றை, ஒரு வாரமாகியும் கண்வலி சரியாகவில்லை என்று அழைத்து வந்தார்கள்…
அதிசயம் என்னவென்றால் ஒரு கண்ணில் மட்டும் தான் சிவப்பு, வீக்கம்… கண்ணைத் திறக்க முடியாத அளவுக்கு வீக்கம். ஸ்லிட்-லாம்ப் [slit lamp] என்னும் கருவியில் வைத்துப் பரிசோதிக்க, அந்தக் குழந்தை அனுமதிக்கவில்லை..
இது நிச்சயம் கண்வலி இல்லையென்று, என் பட்டறிவு கூறியது. குழந்தையைத் தூங்க வைத்து, ஆபரேஷன் தியேட்டருக்கு தூக்கிச் சென்று, மைக்ரோஸ்கோப்பிற்கு அடியில், கண்ணைப் பரிசோதித்தால்,………
கண்ணின் மேல் இமை உள்புறம், கீழ் இமை உள்புறம், கருவிழி எங்கும், கம்பளிப் பூச்சி என்னும் மொசுக்கட்டையின் முடிகள் செருகிக் கொண்டிருந்தன. ஒன்று இருந்தாலே, முள் போல் ரணமாக அருவும். முப்பதுக்கும் மேற்பட்ட முடிகளை களைந்து எடுத்தேன்….அதற்கப்புறம், குழந்தையின் பெற்றோர் “குழந்தை உறங்கிய தூளியின் கீழே கம்பளிப் பூச்சி கிடந்தது, ஆனால், இது கண்வலியென்று நினைத்ததாலே அதைப் பற்றி நாங்கள் கூறவில்லை” என்றனர்.
இந்த முறையும் ஒற்றைக் கண் கண்வலிகாரர்கள் வந்தனர். கம்பளி முடியும் இருந்தது… அதன்றி, fungal corneal ulcer எனப்படும் கடுமையான கருவிழியில் தொற்று உள்ளவர்களும் கண்வலி என்று நினைத்துத் தாமே தவறான சிகிச்சைகளை செய்து கொண்டு, மிகத் தாமதமாக வைத்தியத்துக்கு வந்தனர்..குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் உள்ளவரிடமிருந்து, வந்து, இரண்டு கண்களையும் தொற்றி, மூன்று நாட்களுக்குள் குறையவும் தொடங்கிவிடும், கண்வலி.
வலி அதிகமாக இருந்தாலோ, தொடர்ந்து ஒரு கண்ணில் மட்டுமே தொந்தரவு இருந்தாலோ, கருவிழியில் வெள்ளையாக ஏதாவது தெரிந்தாலோ, கண்ணை மூடித் திறக்கும் போதெல்லாம் தூசி இருப்பது போல் அருவினாலோ, உடனே கண் மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.
அடுத்ததாக மிக முக்கியமான பிரச்சினை கண் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை. பெரியவர்களுக்கு சாதரணமாக சுற்றுப்புறத் தூசியின் காரணமாக வரும்.. கண் பாதுகாப்புக்கான கண்ணாடி அணிந்தாலே குறைந்து விடும்.
குழந்தைகளுக்குச் சற்றுக் கடுமையாக இருக்கும். வருடக்கணக்கில் குழந்தைகள் அலர்ஜியால் அவதியுறுவர். ஆண் குழந்தைகளுக்கு அதிகமாகக் காணப்படும். ஒரு வயதில் கூட ஆரம்பித்து விடும். சாதாரணமாக பதினாலு, பதினைந்து வயது வரை இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண்கள், பழுப்பு, அழுக்கு நிறமாக இருக்கும். கண்ணைக் கசக்கிக் கொண்டே இருப்பார்கள். சில பருவ காலங்களில் அதிகமாக இருக்கும். இதை, vernal conjunctivitis அல்லது spring catarrh என்போம்.
பூக்களின் மகரந்தத்திலிருந்தும், தூசியிலிருந்தும் இந்த அலர்ஜி அதிகமாகப் பரவுகிறது. அலர்ஜி என்று வந்து விட்டாலே, ஒரு முறை மருந்து போட்டு குணமாகி விடாது. திரும்பத் திரும்ப ஒவ்வாத பொருளைத் தொடவோ, நுகரவோ நேரும் போது, மறுபடி வரும். கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1.மருத்துவரின் சீட்டுகளை, தொகுத்து பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், இது தொடர்கதையாக இருப்பதால்..
2. உபயோகிக்கும் மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு. ஆகவே, என்னென்ன மருந்துகள், எவ்வளவு உபயோகித்திருக்கிறோம் என்று தெரிய வேண்டும். மருத்துவர் அநுமதியின்றி, பழைய சீட்டை வைத்துத், திரும்பத் திரும்ப மருந்தை வாங்கிப் போடுவது ஆபத்தானது.
3.கண்ணாடி பவர் இருந்தால், தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டும். சமயத்தில், பவர் இல்லாவிடினும் கூட, அலர்ஜியிலிருந்து பாதுகாப்பதற்காகவே, கண்ணாடி அணியச் சொல்வோம்.
4. கண்களை கசக்கக் கூடாது. அரிக்கும் போது, குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் கண்களை ஒத்திக் கொள்ளலாம். அதிகமாகக் கசக்குவது பெரும் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மிக அதிகமாகக் கசக்குவதால் சிலருக்கு, கருவிழியின் வடிவமே மாறிப்போய், கூம்பு போல் ஆகி, [KERATOCONUS] நிரந்தரப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு விடுகிறது.
தொற்று மற்றும் ஒவ்வாமை தவிர, கண் சிவப்பாக இருப்பதற்கான வேறு காரணங்களும் இருக்கின்றன. இவை புண் எனக் கூறப்படும் inflammatory disorders. யுவியைடிஸ், ஸ்கிளீரைடிஸ்[uveitis, scleritis] போன்றவை ஏற்படும் போது, இவை உருவாக உடலில் வேறு காரணங்கள் உள்ளனவா என்று பல பரிசோதனைகள் செய்து பார்ப்போம்.. Tuberculosis எனப்படும் காசநோயைக் கூட, கண்களில் ஏற்படும் புண் சமயத்தில் காட்டிக் கொடுக்கும்.
அதே போன்று, கண் கட்டிகள், திடீர் வீக்கத்தையும், வலியையும் சிவப்பையும் ஏற்படுத்தும்.. முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது கண்கட்டிகள் ஏற்படுவதற்கான முதற் காரணம்.
கம்பளி போர்வையும், விரிப்புகளும் உபயோகிப்பதாலும் கண்கட்டி சிலருக்கு வரலாம். கண்கட்டி அடிக்கடி வந்தால், சர்க்கரை நோய் உள்ளதா என்பதையும், கண் பவர் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கண்ணில் சுருக்கென்ற வலியுடன், லேசான வீக்கத்துடன் கண்கட்டி ஆரம்பிக்கும் போதே, சுத்தமான் துணியை, வெந்நீரில் நனைத்து , கண்ணை மூடிக்கொண்டு, அந்த கட்டியின் மேல் ஒத்தடம் கொடுத்தால், உடனே குறைந்து, மறைந்து விடும்.
ஆகவே, கண்வலி போன்ற தொற்று நோய்களைத் தவிர்க்க, பொது இடங்களில் இருக்கும் போது, கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
கண்கள் சிவப்பானாலே கண்வலி என்று முடிவு செய்து, நீங்களாக மருந்தை வாங்கிப் போட்டுக் கொண்டேயிருக்கக் கூடாது. தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.