

டாக்டர் சி.தேவப்பிரசாத்,
குழந்தை இதய மருத்துவ நிபுணர்,
கேஎம்சிஎச் மருத்துவமனை, கோவை.
இதயம் தொடர்பான நோய்கள், மக்களிடையே எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் பொதுவான பிரச்னையாகி உள்ள நிலையில், குழந்தைகளுக்கான இதயக் குறைபாடுகளும் அண்மைக் காலமாக பரவலாகக் கண்டறியப்பட்டு வருகின்றன.
பெரியவர்களுக்கான இதயக் குறைபாடுகளைக் களைய நவீன சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைப் போன்றே பச்சிளம் குழந்தைகளுக்கான குறைகளைக் களையும் மருத்துவ சிகிச்சையும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதே நேரம் குழந்தைகளுக்கான இதயக் குறைபாடுகளை கருவில் இருக்கும்போதே கண்டுபிடிப்பது, பிறந்த சில வாரங்களில் துளை திறவு கோல் ("கீ ஹோல்') சிகிச்சை, அறுவைச் சிகிச்சைகள் மூலம் சரி செய்வதற்கான தொழில்நுட்பங்களும் வளர்ந்துள்ளன.
குழந்தைகளுக்கான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே தொடங்கப்பட்ட புதிய மருத்துவப் பிரிவு ("பீடியாட்ரிக் கார்டியாலஜி') தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் குழந்தைகளுக்கு...: இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 3 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 1,000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 1.80 லட்சம் குழந்தைகள் இயற்கைக்கு மாறான இதயத்துடன் பிறக்கின்றன. இத்தகைய குழந்தைகளில், 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் குழந்தைகள் தீவிரமான இதயப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலான குழந்தைகள் இதய சிகிச்சை நிபுணர்களே இருந்தனர். இதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது குறைவான அளவிலேயே இருந்து வந்தது. ஆனால் இன்று இந்தத் துறையின் வளர்ச்சியும், தொழில்நுட்பமும் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இதனால் பலனடையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பிறவிக் குறைபாடுகள்-இதய துவாரம்: பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்கள் அவர்களின் பிறவியிலேயே ஏற்படுகின்றன. பிறவிக் கோளாறில் முக்கியமானது இதயத்தில் ஏற்படும் துவாரங்கள்தான். இதயத்தில் துளைகள் இருப்பது சாதாரணமான நிகழ்வுதான் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
இதயத்தை வலது, இடது பகுதிகளாகப் பிரிக்கும் தசைச் சுவரில் குழந்தை பிறக்கும் முன்பே சிறிய துவாரங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் 70 சதவீதத் துளைகள் பிறப்பதற்கு முன்னதாகவோ, பிறந்த பிறகோ தாமாகவே சரியாகி விடுகின்றன. விதிவிலக்காக துளைகள் சரிவர மூடப்படாத குழந்தைகளுக்கு அவர்களுக்குத் துளை இருக்கும் இடம், அதன் அளவு ஆகியவற்றைப் பொருத்து அறுவைச் சிகிச்சை அல்லது துளைத் திறவு கோல் சிகிச்சை தேவைப்படும்.
இதயத்தில் ஏற்படும் துளைகளை செகுண்டம் (நங்ஸ்ரீன்ய்க்ன்ம்), பிரிமம் (டழ்ண்ம்ன்ம்), சைனஸ் வேனோசஸ் (நண்ய்ன்ள் யங்ய்ர்ள்ன்ள்) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். செகுண்டம் வகை துளைகள் 10-ல் 8 குழந்தைகளுக்கு ஏற்பட்டு அவற்றில் பெரும்பாலும் தாமாகவே மறைந்து விடுகின்றன. பிரிமம், சைனஸ் வேனோசஸ் வகை துவாரங்கள் அரிதாகவே ஏற்படும். இவை தாமாக அடைபடுவது கடினம்.
இதய வால்வு பிரச்னை: இதயத் துளை பிரச்னைக்கு அடுத்தபடியாக இதய வால்வு பிரச்னை முக்கியமானதாகும். இதயத்தின் ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு, சுருக்கம் ஏற்படுவது ஒரு வகை. ரத்தக் குழாய்கள் இடம் மாறி இருப்பது இரண்டாவது வகை. இதில் ரத்தக் குழாய் அடைப்புகளை பலூன் திறப்பு சிகிச்சை மூலம் சரி செய்துவிட முடியும்.
குழந்தைகளிடையே காணப்படும் பிரச்னை: இதைத் தவிர, குழந்தைகளுக்கு பொதுவாக காணப்படும் மற்றொரு பிரச்னை மைட்ரல் வால்வு பிரச்னை. இடது புறம் உள்ள இரண்டு இதழ்களை கொண்ட மைட்ரல் வால்வுகளில் ஏதேனும் ஒரு இதழோ அல்லது இரண்டுமோ நீளம் அதிகமாக இருக்கும். இதனால் சரியாக மூடாமல், சற்று உள்நோக்கி மடங்கும். இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி படபடப்பு, மயக்கம், பய உணர்வுகள் இருக்கும்.
குழந்தைகளைப் பாதிக்கும் மற்றொரு பிரச்னை கீல்வாதக் காய்ச்சல் ("ருமாட்டிக் ஃபீவர்'). முக்கியமான மூட்டுகளில் வீக்கமும், தொடர்ந்து வலியும் ஏற்படும். மேலும் இந்தக் காய்ச்சல் காரணமாக இதய வால்வுகள் பாதிக்கப்பட்டு ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.
இந்த நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது.
சயனாட்டிக் இதய நோய்: இதய வால்வு பிரச்னையில் சிக்கலானதாகக் கருதப்படுவது ரத்த குழாய்கள் இடமாறி இருப்பதுதான். இதனால் இடது, வலது பக்க அறைகள் ஒன்றாக இணைந்து ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்ûஸடு கலந்த சுத்த-அசுத்த ரத்தம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் நிலை ஏற்படுகிறது. இதய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறும். இது இதய மருத்துவத்தில் "சயனாட்டிக்' எனப்படும். இது போன்ற குழந்தைகள் "ப்ளூ பேபி' என்று அழைக்கப்படுவர்.
இந்த பிரச்னை குழந்தைக்கு இருப்பது கருவில் கண்டறியப்பட்டால் கருக்கலைப்பு செய்வதையே மருத்துவர்கள் அறிவுரையாக வழங்குவர். இருப்பினும் குழந்தை பிறந்த பிறகு கண்டறியப்பட்டாலும் 80 சதவீத குழந்தைகளை அறுவைச் சிகிச்சை மூலம் நிரந்தரமாக குணப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
"ப்ளூ பேபி' பிறந்ததும் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். எனினும் ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவைப் பொருத்தும், குழந்தையின் உடல் நிலையைப் பொருத்தும் சிறிது தள்ளிப் போட முடியும்.
முன் கூட்டியே கண்டறியலாம்: குழந்தைகளுக்கு இதய நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. தாயின் வயிற்றில் கரு உருவான 18-ஆவது நாளில் இருந்து இதயத் துடிப்பு தொடங்கும். இது 55 நாள்களுக்குள் முழு வளர்ச்சி அடைந்து விடும். எனவே கரு உருவான 16-ஆவது வாரத்தில் ஃபீட்டல் எக்கோ ஃபேடல் எக்கோ (ஊங்ற்ஹப் உஸ்ரீட்ர்ஸ்ரீஹழ்க்ண்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்) சோதனை மேற்கொண்டால் குழந்தையின் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை குறித்து 99 சதவீதம் அறிந்து கொள்ள முடியும். இருப்பினும் மிகச் சிறிய பிரச்னைகளை இதன் மூலம் அறிய முடியாது.
குடும்பத்தில் யாருக்கேனும் இதய பாதிப்பு இருந்தாலோ, ஏற்கெனவே பிறந்த குழந்தைக்கு இதய பாதிப்பு இருந்தாலோ, கர்ப்ப காலத்தில் அதிக மருந்துகள், மது சாப்பிட்டிருந்தாலோ தாய்க்கு சர்க்கரை நோய், ருபேலா அம்மை, நெருங்கிய உறவில் திருமணம், போலிக் ஆசிட் பற்றாக்குறை இருந்தாலோ இந்தப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
குழந்தை இதயத்தில் பிரச்னை-அறிகுறிகள் என்ன? நம் நாட்டில் பெரும்பாலான இதய நோய்கள் குழந்தை பிறந்த பிறகே கண்டுபிடிக்கப்படுகின்றன. எனவே குழந்தைகளிடம் ஏற்படும் சில மாறுதல்கள் மூலம் இதய நோய் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பால் குடிக்கும்போது மூச்சுத் திணறலுக்கு ஆளானாலோ, விட்டு விட்டுப் பால் குடித்தாலோ, பால் குடிக்கும்போது வியர்த்தாலோ குழந்தையை உடனடியாக குழந்தை இதய சிகிச்சை நிபுணரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இதயத் துடிப்பின்போது வித்தியாசமான ஒலி, மாதந்தோறும் சளி பிடிப்பது, எடை அதிகரிக்காமல் இருப்பது, ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை நிமோனியா காய்ச்சல் தாக்குவது, உடலின் ஒரு பகுதியோ முழுவதுமோ நீல நிறத்தில் மாறுவது, குறைவான உணவு சாப்பிடுவது, அடிக்கடி நினைவிழத்தல், முகம்-கால்-மூட்டுகள் வீங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரிடம் செல்வது அவசியம்.
சிகிச்சை முறைகள்: பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் சில இதய நோய்கள் இயற்கையாகவே குணமாகும் தன்மை கொண்டவை. இவற்றுக்கு எந்தவித மருந்துகளோ அறுவைச் சிகிச்சையோ தேவைப்படாது. எனினும் சில குழந்தைகளுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு காலம் தாழ்த்தியே சிகிச்சை தேவைப்படும். குழந்தைகளின் பிரச்னையைப் பொருத்து மருத்துவரின் தீவிர பரிசோதனைக்குப் பிறகு சிகிச்சைக்கான காலம் முடிவு செய்யப்படும்.
துளை திறவுகோல் சிகிச்சை: குழந்தைகள் இதய சிகிச்சைப் பிரிவின் மாபெரும் வரப்பிரசாதமாக துளைத் திறவுகோல் சிகிச்சை உள்ளது. இதயத்தில் இயற்கையாக ஏற்படும் துளை பெரிய அளவில் இருந்தால், துளை திறவுகோல் (கீ ஹோல்) சிகிச்சை அளிக்கப்படும். பிறந்து சில நாள்களான குழந்தைகளுக்கும் இந்தச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் குழந்தையின் தொடை நரம்பில் துளையிடப்பட்டு "பட்டன்' எனப்படும் அடைப்பானை இதயத்துக்கு எடுத்துச் சென்று துளை அடைக்கப்படும்.
அடுத்த 6 மாதங்களில் அந்த பட்டன் இதயத் தசையுடன் கலந்துவிடும். இதற்காக 6 மாதத்துக்கு மட்டுமே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டி வரும். தழும்பு ஏதும் இல்லாத, மிகவும் பாதுகாப்பான இந்தச் சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகள், பிற குழந்தைகளைப் போன்று எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்க முடியும்.
துளைத் திறவு கோல் சிகிச்சை மூலம் இதயத் துளை அடைப்பு மட்டுமின்றி ரத்தக் குழாய் வால்வு, ரத்தக் குழாய் சுருக்கம் ("அயோட்டா') போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். ரத்தக் குழாய் வால்வில் இருக்கும் அடைப்புகளை பலூன் வைத்தும் திறக்க முடியும். இதய வால்வில் குழந்தைகளுக்கு பெரிய அளவில் பிரச்னை வராது. அரிதாக சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்த பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
தடுப்பது எப்படி? முதல் குழந்தைக்கு இதய பிரச்னை இருந்தால், அடுத்த குழந்தைக்கு வருவதற்கு 4 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இதயப் பிரச்னை இருந்தால் கருத்தரித்த பெண்ணுக்கு ஸ்கேன் பரிசோதனை அவசியம்.
குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்ததும் எம்.எம்.ஆர். தடுப்பூசி போட வேண்டும். மேலும் பருவ வயதை அடைந்த இளம் பெண்களும், கருவுற்ற தாய்மார்களும் போலிக் ஆசிட் சத்துள்ள மாத்திரைகளைச் சாப்பிட்டாலே குழந்தைகளுக்கான பெரும்பாலான இதய நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.