ஆரோக்கியத்துக்கு உதவும் வில்வம் இலை, காய், பழம்!

நம் உணவில் பல சத்துக்கள் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்யக் கூடிய பழவகைகளை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள முடிவதில்லை.
ஆரோக்கியத்துக்கு உதவும் வில்வம் இலை, காய், பழம்!
Updated on
2 min read

கோடை தொடங்கிவிட்டாலே எனக்கு உடல்சூடு அதிகரித்து மலச்சிக்கல், ஆயாசம் ஏற்படுகிறது. மூல உபாதையாலும் கஷ்டப்படுகிறேன். கைகால் பிடிப்பு, உடல் வலி ஏற்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவை அடிக்கடி ஏற்படுகின்றன. இவை குணமாக என்ன வகையான பழங்களைச் சாப்பிடலாம்?

- சூரியநாராயணன், தேனி.

நம் உணவில் பல சத்துக்கள் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்யக் கூடிய பழவகைகளை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. காரணம், அவற்றின் விலை உயர்ந்திருப்பதுதான். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் தாம் உயர்ந்த சத்துள்ளவை என்று நினைக்கிறோம். இது உண்மையல்ல. உள்ளூரிலேயே எத்தனையோ பழங்களில் இந்த மாதிரி சத்துக்கள் நிரம்ப இருக்கின்றன. அந்தப் பழங்கள் சாதாரணமாக எங்கும் எப்பொழுதும் கிடைக்கக்கூடியவை. அவற்றில் ஒன்று வில்வப்பழம்.

வில்வமரம் நந்தவனங்களிலும், கோயில் பிரகாரங்களிலும் மிகுதியாய் பயிரிட்டிருக்கக் காணலாம். இது சிரமமின்றி வளரும் நாட்டு மரமாகும். இது முட்களைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் முக்கிளையாக இருக்கும். இதன் இலை, காய், பழம், வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன. வில்வக்காய் உருண்டையாகவும், நீள் உருண்டையாகவும் இருக்கும். இதன் ஓடு கனமாய் இருக்கும். உள்ளே இருக்கும் சதை பாகத்திலே ஒரு வித பிசின் சேர்ந்திருக்கும். அது மங்கலான மஞ்சள் நிறமுடையது. அதிக துவர்ப்பானது. அப்பழம் குடல் கோளாறுகளை நீக்கிவிடுகிறது. தோட்டக்கால் நிலங்களில் பயிரான வில்வத்தின் பழம் மணமாகவும், சாப்பிடுவதற்குச் சுவையாகவும் இருக்கும். பழத்திலே விதைகளும் அதிகமாக இருக்காது. நன்றாகக் கனிந்த பழத்தைச் சாப்பிட்டால், சரீர வெப்பத்தைத் தணித்து, மலச்சிக்கலை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. மூல ரோகத்தைக் கண்டிக்கிறது, சரீரத்திற்கு நல்ல பலத்தைத் தருகிறது.

வில்வப் பழத்தின் மருத்துவப் பயன்களை வைத்தியர்கள் நன்குணர்ந்து பேதி, சீதபேதி, ரத்தபேதி, மற்றும் குடற்கோளாறுகளுக்கும் உபயோகிக்கிறார்கள். ஆயுர்வேத வைத்தியர்கள் உபயோகிக்கும் வில்வமே பிரதானமானதாகும்.

நல்ல கனிந்த வில்வப் பழத்தைக் கொண்டு சர்பத்தாகப் பருகுவதிலே ஐரோப்பியர்களுக்கு அதிக ஆனந்தமாகும். சுகமாக மலங்கழிவதற்கும், சுறுசுறுப்புக்காகவுமே அவர்கள் வில்வப் பழ சர்பத்தை விரும்புகிறார்கள்.

ஆப்பிள், மாதுளை, பழங்களில் இருக்கும் அளவு சத்தைவிட அதிகம் வில்வப் பழத்திலும் உண்டு. இதைத் தவிர்த்து வில்வப்பழத்தில் தசை வளர்ச்சிக்கு உதவும் பெக்டின் என்ற சத்தும் சர்க்கரை டானின் அமிலமும் விசேஷமாக உள்ளன.

பழுக்காத நிலையிலும் பாதி பழுத்த நிலையிலுமுள்ள வில்வக் காய்களை ஓட்டுடன் துண்டு துண்டாக உடைத்து வெய்யிலில் உலர்த்திவிட வேண்டும். பிறகு அவற்றை இடித்துத் தூய்மையான வெள்ளைத் துணியில் சலித்துச் சூர்ணத்தைப் பத்திரப்படுத்த வேண்டும். சீதபேதி, ரத்தபேதி முதலிய குடற் கோளாறுகளிலே இந்தச் சூர்ணத்திலே இரண்டு தேக்கரண்டி அளவெடுத்து கொதித்த நீரில் போட்டு கெட்டியாகக் கூழ் போன்ற நிலைக்கு வரும்போது இறக்கி, ஆறின பின் சாப்பிட வியக்கும்படியாக குணமாகும்.

வில்வப்பூ கஷாயம் அதிசாரம், கபம், கிராணீ, வாந்தி, குமட்டல் முதலியவற்றைக் குணப்படுத்தும். வில்வவேரின் கஷாயம் கர்ப்பசூலை, வாதம் முதலியவற்றைக் குணப்படுத்தும்.

வில்வ இலைக் கஷாயத்தைப் பருகினால் கை,கால் பிடிப்பு, உடல் வலி முதலியன குணமாகும். வில்வ இலையைக் கோமூத்திரம் விட்டு இடித்து வடிகட்டி வேளைக்கு 50 கிராம் வீதம் காலை, மாலை இரு வேளைகளிலும், ஒரு வாரம் சாப்பிட இரத்த சோகை, காமாலை முதலிய நோய்கள் குணமாகும். இதற்குப் பத்தியம் இருத்தல் அவசியம்.

வில்வப்பழத்தைப் பாலுடன் கலந்து கொஞ்சம் மிளகுப் பொடி சேர்த்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட தாது விருத்தி உண்டாகும், மூலரோகமும் நீங்கும்.

வில்வ இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்படும் வில்வாதி தைலமும் வில்வ இலை, வேர், பட்டை கொண்டு தயாரிக்கப்படும் வில்வாதி லேகியமும் ஆயுர்வேத மருந்துகளிலே மிகவும் முக்கியமானது. நீங்கள் மேற்கண்டவற்றில் ஒன்றைக் கடைபிடித்தால் எளிதில் குணம் காணலாம்.

(தொடரும்)

தினமணி கதிர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com