

பிறந்த குழந்தையின் கண்கள் சிறியதாக இருக்கும். குழந்தை பெரும்பான்மையான நேரத்தில் உறக்கத்தில் இருக்கும். பிறந்தவுடன் குழந்தைகளின் கண்கள் தூரப் பார்வை என்ற நிலையில் இருக்கும். வெளிச்சத்தைப் பார்க்கையில் கண்கள் கூசுவதைப் போல சுருக்கும். சிலசமயம் குழந்தைகளின் கண்கள், திடீரென்று மாறுகண் போல கண்களை உள்நோக்கி வைத்துக் காண்பிக்கும். இதற்கெல்லாம் பயப்படவேண்டாம். பச்சிளம் குழந்தையின் கண்களின் வளர்ச்சி, உடம்பில் உள்ள மற்ற பாகங்களை விட வேகமாகவே இருக்கும். நான்கு வயதிற்குள் 80 சதவிகத வளர்ச்சி இருக்கும். கண்ணின் உருவ வளர்ச்சி ஏற்படும் போதுதான், அது இயல்பான நிலையை எட்டும்.
குழந்தை பிறந்து 6 மாதத்திலிருந்து 9 மாதம் வரை தங்களது கண்களை, மூக்கை நோக்கி கொண்டு செல்வது மிகவும் இயல்பு. அது வளர வளர இது குறைந்து கொண்டே வந்து பின்னர் இயல்பாகி விடும். மேலும் குழந்தை அழுதால், 3 மாதங்கள் வரை சத்தம்தான் வரும் கண்ணீர் வராது. சில சமயம் அதன் கண்களில் கண்ணீர் வந்தால் அநேகமாக இது கண்ணீர்ப்பை அடைப்பு இருந்தால் வரும். கண்ணீர்ப்பை என்பது மூக்கும் கண்ணும் சந்திக்கும் இடத்தில் இருக்கும்.
கண்ணீர்ப்பை அடைப்பு ஏற்படும்போது, குழந்தையின் கண்ணில் கண்ணீர் தேங்கி நிற்கும். சில நேரம் வடியும். கண்களில் பூளை தள்ளும். இமையெல்லாம் ஒட்டிக் கொள்ளும். உடனடியாக கண் மருத்துவரை அணுகினால், அவர் சில சொட்டு மருந்துகளைக் கொடுத்து, கண்ணீர்ப்பையை மசாஜ் செய்வது எப்படி என்று சொல்லித் தருவார். இதைச் செய்துகொண்டே இருந்தால், பாப்பா வளர வளர, சரியாகிவிடும். ஒன்பது மாதத்திற்குப் பின்னரும் கண்களில் நீர் வடிந்தால் கண் மருத்துவரிடம் தூக்கிச் செல்ல வேண்டும். அதன்பிறகு பட்டு பாப்பா பளீரென்ற கண்களுடன் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.
சில குழந்தைகள் வளரும் போது தன் நகத்தால் தன் கண்களை குத்திக் கொள்ளும். கண்கள் சிவந்துவிடும். இதனால் ஒன்றும் ஆகாது. மருத்துவர் பரிந்துரைக்கும் சொட்டு மருந்துகளை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் போட்டு வர, சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குள் கண் பரிசோதனை செய்து கொள்வது அத்யாவசியமானதாகும். குழந்தையின் கண்கள் பார்ப்பதற்கு அழகாகவும், இயல்பாகவும் தெரிந்தாலும் கூட மூன்றிலிருந்து ஐந்து வயதிதுக்குள் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் எவ்வளவோ பார்வை இழப்பை நாம் தடுக்க முடியும். குழந்தைகளின் கண்களில் உள்ள குறைபாட்டை ஐந்து வயதிதுக்குள் கண்டுபிடித்து சரி செயதுவிட வேண்டும். பார்வை குறைபாடுகள் இருந்தால் கண்ணாடி போட்டு, தெளிவான பார்வை கண்நரம்பில் விழுமாறு செய்ய வேண்டும்.
காது
காது வழியாக நாம் சப்தத்தைக் கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகள் சப்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. பிறவியிலேயே செவிடாகப் பிறக்கும் குழந்தை ஊமையாகிவிடுவதும் இதனால்தான்.
காது அடைப்பு.. காது வலி எதனால் ஏற்படுகிறது என்றால் ஒரு சப்தம் உண்டாக்கப்பட்டவுடன், அந்த சப்தம் காற்றில் பரவி வந்து நமது வெளிக்காதின் வழியாக உள்ளே நுழைந்து காதுக்குள் ஒரு பேப்பரின் திண்மை அளவே உள்ள ஜவ்வை அசைக்கிறது. உடனே அது நடுக்காதிலிருக்கும் மனித உடலின் மிகச் சிறிய எலும்புகளான மெல்லன்ஸ், இன்கஸ், ஸ்டெப்ஸ் என்கிற மூன்று எலும்புகளை அசைக்கிறது. அதில் ஸ்டேட்டஸ் எலும்பினால் அதிர்வு தரப்பட்டு உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. அப்போது செவி நரம்பு தூண்டப்பட்டு அதிலிருந்து மின்சார பாய்ச்சல் மூலமாக டம்ளர் விழுந்த சப்தம் நம் மூளைக்கு வந்து நாம் அந்த சப்தத்தை உணர்கிறோம்.
எப்பொழுதும் நம் வெளிக் காதுக்கும் உள் காதுக்கும் என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் அழுத்தம் மாறினால் காது அடைச்சலும் வலியும் ஏற்படுகிறது.
குழந்தை தொடர்ந்து வீறிட்டு அழுதால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
காதுகளைப் பாதுகாக்க ...
காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியாகிவிடும். அதனால், காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் பண்ணுதல் கூடாது. குழந்தையை குளிப்பாட்டியவது துண்டின் நுனியால் மென்மையாக அழுக்கை நீக்கிவிடவேண்டும். காதுக்குள் குடைவது கூடாது.
காதுகள் 80 லிருந்து 85 டெசிபல் வரைதான் சப்தத்தை தாங்கும் சக்தியுள்ளது என்பதால் அதற்கும் அதிகமான சப்தத்தை குழந்தைகள் அருகே தவிர்ப்பது நல்லது.
சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றாலும் காது பாதிக்கும் என்பதால் இப்பிரச்னைகளை உடனே கவனிக்க வேண்டும்.
பயணத்தின் போது ரேடியோ, டேப் போன்ற இரைச்சலான சப்தத்தை தவிர்க்க வேண்டும்.
எதாவது பிரச்னை என்றால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.