குழந்தையின் மென்மையான காதுக்குள் காட்டன் பட்ஸ் வேண்டாம்!

பெற்றோர்களின் முக்கியமான கவனத்துக்கு! குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும்
குழந்தையின் மென்மையான காதுக்குள் காட்டன் பட்ஸ் வேண்டாம்!
Published on
Updated on
2 min read


பெற்றோர்களின் கவனத்துக்கானது இந்தக் கட்டுரை! குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் என நினைத்து நீங்கள் பயன்படுத்தும் காட்டன் பட்ஸ் நன்மை செய்வதை விட அதிக கெடுதல்களையும் உண்மையில் கடுமையான பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

1990-லிருந்து 2010 ஆம் ஆண்டு வரை கடந்த 21 வருட காலத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 2,63,000 குழந்தைகள் மருத்துவமனைக்கு காது சார்ந்த பிரச்னைகளுக்காக அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதாவது தினமும் குறைந்தது 34, ஒரு வருடத்துக்கு 12,500 குழந்தைகள் காது வலியால் அவதியுற்றிருக்கிறார்கள் என்கிறது இந்தத் தரவு.

அமெரிக்காவில் உள்ள நேஷன்வைட் சில்ரன்ஸ் ஹாஸ்பிடலைச் சேர்ந்த மருத்துவரரான கிறிஸ் ஜடானா கூறுகையில், ‘இரண்டு தவறான நம்பிக்கைகள் இது குறித்து நிலவுகின்றன. முதலாவதாக காதுகளை வீட்டில் கிடைக்கும் பொருட்களால் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொள்வது, இரண்டாவதாக காட்டன் பட்ஸ் அல்லது அது போன்று கடைகளில் கிடைக்கும் குச்சிகளை வைத்து காதை சுத்தப்படுத்தலாம் என்று நம்புவது. இவை இரண்டுமே தவறு’ என்றார் அவர்.

காதில் உருவாகும் மெழுகு போன்ற அழுக்கை எடுக்கக்கூடாது. காரணம் வேக்ஸ் போன்ற அதுதான் உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காது ம்ற்றும் அதன் உட்பகுதி பெரும்பாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் இயல்புடையவை. குச்சியில் சுற்றப்பட்ட பஞ்சு துடைப்பான்கள், பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் போது அது அழுக்குகளை வெளியேற்றுவதற்கு பதில் செவிப்பறைக்குள் சென்று அழுக்குடன் அதன் துகள்களும் இணைந்து  அடைத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இதனால் சிறிய அல்லது பெரிய பாதிப்புக்கள் நாளாவட்டத்தில் ஏற்படும்’ என்றார் ஜடானா.

குழந்தைகளுக்கு நாம் பட்ஸ் பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்வது பெரும் தவறு. பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி பிஞ்சுகளின் காதுகளை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக சேர்ந்து அழுக்கு அங்கே படர ஆரம்பித்துவிடும். உடனடியாக இப்பழக்கத்தை நிறுத்திவிடுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுகையில், 'காட்டன் கூர் முனை கொண்டவற்றை காதுக்குள் விடும்போது அது காதுகளை சுத்தப்படுத்துவதில்லை. மாறாக காயப்படுத்திவிடுகின்றன (73 சதவிகிதம்) சிலர் காது குடையும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். (10 சதவிகிதம்) சிலர் குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்துகையில் அது உடைந்து காதுக்குள் தங்கிவிடுகிறது (9 சதவிகிதம்). குழந்தைகள் தாமாகவே காதுக்குள் இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் (77 சதவிகிதம்). சில சமயம் குழந்தையின் பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் அவர்களின் காதை சுத்தப்படுத்த முயற்சிக்கையில் ஊறு விளைவித்துவிடுவார்கள் (16 சதவிகிதம்)

இந்தப் பிரச்னையில் மருத்துவமனைக்கு வரும் மூன்றில் இரண்டு குழந்தைகள் எட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். 40 சதவிகித நோயாளிகள் மேற்கூறிய எல்லா பாதிப்புக்களுக்கும் உள்ளானவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

8-17 வயது குழந்தைகள் காதுக்குள் ஏதோ இருப்பது போலிருந்தது அதனால் தான் அதை வெளியே எடுக்க முயற்சி செய்தேன் என்பார்கள். ஆனால் மிகவும் மென்மையாக இருக்கும காது ஜவ்வுப் பகுதிகள் என்பது தெரியாமல் தங்களுக்குத் தானே தீங்கு செய்ய ஏதுவாக அமைந்துவிடுகிறது. காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி இவர்கள் தவறாக அழுத்திக் குத்துவதால் பாதிக்கப்படும்.

மேற்சொன்ன பாதிப்புக்களுக்காக மருத்துவமனைக்கு வரும் 99 சதவிகித குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்த பின் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சற்று பெரிய பாதிப்புக்கள் இருக்கும்பட்சத்தில், அதாவது செவி மடல், அல்லது உட் செவி அல்லது செவிப்பறை என இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதன் தொடர்ச்சியாக காது செவிடாகிவிடும் அபாயங்கள் உண்டு.

வெளிப்படையாக பார்க்கும் போது சாதரணமாக இருக்கும் இந்த காது துடைப்பான்கள் உண்மையில் செவிப்பறைக்கு பெரிய ஆபத்துக்களை விளைவிக்கும் அபாயகரமானவை. எனவே ஆரம்பத்திலேயே கவனத்துடன் செய்லபட்டு ஈடு செய்ய முடியாத இழப்புக்களை அடைய வேண்டாம் என்றார் ஜடானா.

இந்த ஆய்வு முடிவுகளை தி ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com