அரைஞாண் கயிறு ஏன் அணிகிறோம் தெரியுமா?!

ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ எந்தக் குழந்தையா இருந்தாலும் அவங்கவங்க
அரைஞாண் கயிறு ஏன் அணிகிறோம் தெரியுமா?!

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எந்தக் குழந்தையா இருந்தாலும் அவங்கவங்க வசதிக்கு தக்கபடி தங்கம், வெள்ளி, வெறும் கறுப்புக் கயிறுன்னு குழந்தை பிறந்த சில நாட்களில் அதனோட இடுப்புல கட்றோமே அரைஞாண் கயிறு,  அத ஏன் கட்றோம்னு தெரியுமா உங்களுக்கு ?!
 
ஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அந்தாலும் சரி !!!
 
எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களை கேட்டுப் பாருங்கள். அப்போதெல்லாம் புழக்கத்தில் இருந்த வேடிக்கையான ஒரு பழமொழி, ஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அந்தாலும் சரி என்று சொல்லிக்கொண்டே, மார்கழி குளிரில் சில்லென்று இருக்கும் தொட்டித் தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிக்கொள்வார்களாம். அப்போதெல்லாம் விறகடுப்புதானே! வீட்டிற்கு நான்கைந்து குழந்தைகள் எனில், ஆளாளுக்கு தனித் தனியாய் யார் வெந்நீர் வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பிள்ளைகளுக்கு?!
 
இந்தப் பழமொழியில் அரைஞாண் கயிறு ஏன் வருகிறது? அரைஞாண் கயிறு ஏன்  அறுந்து விழ வேண்டும் என்று யோசித்தீர்களா? குளிரில் உடல் விறைக்கும்போது இடுப்பில் கட்டி இருக்கும் அரைஞாண் கயிறு இறுக்கமாகி அறுந்து விழும் சூழல் வரலாம்.  


கைக்குழந்தைகளின்  போஷாக்கை அளக்க உதவும் அரைஞாண் கொடிகள்!

குளிரில் உடல் விறைத்தால் மட்டுமே அரைஞாண் கயிறு அறுந்து விழுவதில்லை, உடல் பருமன் அதிகரித்தாலும்கூட இடுப்பின் சுற்றளவு மிகுந்து அதனாலும் கயிறு அறுந்துபோகும் சூழல் வரும். வெறும் கறுப்புக் கயிரென்றால் அறுந்து விழும். தங்கமோ வெளியோ என்றால், இடுப்பைச் சுற்றி தழும்பாகும் அளவுக்கு இடுப்பை இறுக்கிப் பிடிக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது?! இந்த அரைஞாண் கயிற்றின் தத்துவம் பற்றிய ஆராய்ச்சியை அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டால், குழந்தை பிறந்த சில நாட்களில் அதன் எடையை அளவிட நம் முன்னோர்கள் இந்த அரைஞாண் கயிறு அணியும் வழக்கத்தை கண்டுபிடித்திருப்பார்கள். இந்த தகவலை டாக்டர்ஹே மந்த் மற்றும் டாக்டர் அர்ச்சனா அவர்கள் உலக குழந்தைகள் நலத்திற்காக வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வுப் புத்தகம் நமக்களிக்கிறது .

மருத்துவமா? மூடநம்பிக்கையா!

இந்தியாவில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் குழந்தை பிறந்து ஏழாம்நாளில் இந்தக் கயிற்றை அணிவிக்கிறார்கள், ஆண்கள் என்றால் அவர்களது இறப்பு வரை இந்த கயிற்றை அணியும் வழக்கம் நீடிக்கிறது. பெண்களுக்கு அவர்கள் பூப்படையும் பருவம் வரையிலும் தொடரும் இந்த வழக்கம், பிறகு அற்றுப்போய் விடுகிறது.
 
குழந்தைகளை திருஷ்டியில் இருந்து காக்க  தாயத்துகளில் அடைக்கப்படும் தொப்புள்கொடிகள்!

தொப்புள் கொடி உறவு - தொப்புள் கொடி உறவு என்று  தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சென்ட்மென்ட் வசனம் பேசுகிறார்களே அந்த தொப்புள் கொடிக்கும், இந்த அரைஞாண் கயிறுக்கும் ஒரு பந்தம் உண்டு,  தாயின் வயிற்றில் இருக்கும் வரை குழந்தைக்கு சாப்பாடெல்லாம் எந்த வழியாகச் செல்லும் தெரியுமா? அம்மா என்ன சாப்பிட்டாலும் ப்ளாசண்டா என்று சொல்லப்படற இந்த தொப்புள் கொடி வழியாகத்தான் குழந்தைக்கு அந்த உணவு போய்ச் சேரும்.

அம்மாவின் கருப்பையில் குழந்தை போஷாக்கா வளர உதவற இந்த தொப்புள் கொடியை, குழந்தை பிறந்து மண்ணில் விழுந்த அடுத்த கணமே நறுக்கி நீக்கிடறாங்க. அப்படி நீக்கப்படும் தொப்புள்கொடியை நம்ம மக்கள் காலங்காலமா சென்டிமென்டலா என்ன செய்றாங்கன்னா, வெள்ளியிலோ தங்கத்திலோ சின்னதா ஒரு தாயத்து செய்து, அதில் இந்த தொப்புள் கொடியை வைத்து மூடி குழந்தையோட அரைஞாண் கயிற்றில் கோர்த்து அதன் இடுப்பில் கட்டிவிடறாங்க. இப்படி கட்டிவிடறதன் மூலமா குழந்தையை காத்து, கருப்பு, திருஷ்டி போன்ற தீய சக்திகள் அணுகாதுன்னு நம்பறாங்க. இந்தப் பழக்கம் இப்பவும் நம்ம ஊர்களில் தொடருது. சிலர் அரைஞாண் கயிற்றில் கட்டி விடுவாங்க. சிலர் குழந்தையோட கழுத்திலும் இப்படி தாயத்துகளை கட்டி விடுவது உண்டு. இது ஒருவிதமான   நம்பிக்கை.

{pagination-pagination}

அரைஞாண் கயிற்றின் அறிவியல் பயன்பாடு
 
சரி அறிவியல் முறைப்படி நம்ம முன்னோர்கள் அரைஞாண் கயிறு கட்டற பழக்கத்தை ஏன் ஆரம்பிச்சாங்கன்னு ஆராய்ஞ்சு பார்த்தா, அதுக்கும் சுவாரஸ்யமான ஒரு காரணம் இருக்கு. இந்தக் காரணம் ஆக்கபூர்வமானது மட்டுமல்ல, நம்பகமான முறையாகவும் இருக்கு. அது என்னன்னு பார்க்கலாமா?!
 
இப்போதெல்லாம் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குழந்தையின் எடை காட்டும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் (weighing  machine) பல மாடல்களில் நிறைய காணக் கிடைக்கிறது. முன்பெல்லாம் நமது தாத்தா பாட்டி காலங்களில் இந்த எலக்ட்ரானிக் எடை காட்டும் கருவிகள் எல்லாம் கிடையாது. குழந்தை வளர வளர அதன் எடை கூடுகிறதா? குறைகிறதா?! குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது போன்ற விபரங்களை எல்லாம் அவர்கள் இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை வைத்துத்தான் அளந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?! ஆனால் இதுதான்  நிஜம்.
 
இடுப்பின் நடுவில் கட்டப்படும் அரைஞாண் கயிறு நாளாக நாளாக இறுகி இறுக்கமாகிக்கொண்டே போனால், குழந்தை போஷாக்காக வளர்கிறது, அதன் எடை அதிகரிக்கிறது என்றும், அரைஞாண் கயிறு லூசாகி இடுப்பிலிருந்து கழன்று கால் வழியாக கீழே விழும் நிலை வந்தால், குழந்தை மெலிந்து எடை குறைந்துகொண்டிருக்கிறது என்றும் அன்றைய மக்கள் கணித்தார்கள். 
 
இந்த அரைஞாண் கயிற்றை வேறு என்னென்ன காரணங்களுக்காக எல்லாம் அந்நாட்களில் உபயோகித்திருக்கிறார்கள் என்று பாருங்கள் :
 
கிராமப்புறங்களில் நீச்சல் கற்றுத்தர அரைஞாண் கயிற்றில் சேலை அல்லது வேட்டியை கட்டி முடிச்சிட்டு நீச்சல் பழக்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீரில் மூழ்கிவிடும் வாய்ப்பிருந்தால், மறுமுனையைப் பற்றி வெளியில் இழுக்க அரைஞாண் கயிறுகள் உதவினவாம்.

சாவிக்கொத்து, முள்வாங்கி, ஓட்டைக் காலணாக்கள் போன்றவற்றை கோர்த்துவைக்கவும்கூட இந்தக் கயிறுகள் பயன்பட்டிருக்கின்றன. பெரும்பாலும், தாயத்துகள் கோர்த்து இடுப்பில் கட்டுவதற்கு அரைஞாண் கயிறு பயன்பட்டிருக்கிறது.

பெல்ட் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த காலத்தில், மனிதனின் முக்கிய அரையாடையாக இருந்த கோவணம், இடுப்பிலிருந்து நழுவாமல் இருக்க அரைஞாண் கயிறு உதவி இருக்கிறது. அந்தக் காலத்தில் மானம் காத்தது அரைஞாண் கயிறு என்று சொன்னால் மிகையில்லைதான்! அத்துடன், இன்னொரு பயனும் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஆண்கள் வயல்வெளிகளில்தான் அதிகம் வேலை செய்வார்கள். வயல் பகுதிகளில் பாம்புகள் அதிகம். சில சமயங்களில் பாம்பு கடித்துவிட்டால், ரத்த ஓட்டத்தில் விஷம் கலந்து உடல் முழுதும் பரவுவதைத் தடுக்க, பாம்பு கடித்த இடத்துக்கு அருகில் கட்டு போட கயிறு தேவைப்படும். அந்தச் சமயத்தில் கயிறை எங்கே தேடுவது. அப்போது, இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை அறுத்து காலில் கட்டிக்கொண்டு, ஆஸ்பிடலுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆக, உயிர் காக்கும் ஒன்றாகவும் அரைஞாண் கயிறு இருந்திருக்கிறது.

இது தவிரவும், கூகுள் buzz-ல் அரைஞாண் கயிறு தொடர்பாக நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களில் ஒன்று, யோகாசன வகுப்புகளில் வீராசனம் எனும் ஆசனப் பயிற்சியில் கைகளை மூடி வயிற்றுக்கு அடியில் வைத்து அழுத்திக்கொண்டு முன்னோக்கிக் குனிந்து பயிற்சி செய்யச் சொல்வார்களாம். இந்தப் பயிற்சியின் பலன் ஜீரண உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருப்பதற்காகவாம். சற்றேறக் குறைய, இடுப்பில் அணியும் அரைஞாண் கயிறும், வயிற்றை அழுத்தும் வேலையைத்தான் செய்கிறது. யோகா முறைப்படி இப்படி ஒரு பலனையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்துமத சம்பிரதாயப்படி அரைஞாண் கயிறு அணிந்தவனே முழு மனிதன்.{pagination-pagination}
 
இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானில் சில பகுதிகளிலும்கூட அரைஞாண் கயிறுகள் அணியும் வழக்கம் உண்டாம். இந்து மத வழக்கப்படி அரைஞாண் அணிந்த மனிதனே முழு மனிதனாகக் கருதப்படுகிறான். மூடநம்பிக்கை என்று கருதி இன்றைய நவீனவாதிகள் சிலர் அரைஞாண் அணியும் பழக்கத்தை புறக்கணித்திருக்கலாம். அவர்களுக்கு ஒரு செய்தி -


 
அரைஞாண் அணிவதை  மத ரீதியாகவோ சம்பிரதாய ரீதியாகவோ மட்டுமே அணுகி அதை ஒரு மூடநம்பிக்கை என்று புறம் தள்ளாமல் இருப்பது நல்லது. காரணம், அரைஞாண் கயிறு அணிவது இன்றைய தலைமுறையினருக்கு தலையாய பிரச்னையாக உள்ள அதீத உடல் பருமன் (Obesity ) பிரச்னையையும் தீர்த்துவைக்கிறது. இடுப்பில் கட்டப்பட்ட கயிறு இறுக்கமாகி அழுத்தும்போது நமது உடல் எடை வழக்கத்தைவிட கூடுகிறது என்பதை  நாம் உணர்ந்துகொள்வோம்தானே?
 
மரங்களின் வயதைக் கணக்கிடுவதற்கு, அதன் தண்டுப் பகுதியை குறுக்குவாட்டில் வெட்டி தண்டின் மேற்புறத்தில் வட்டமான மேற்பகுதியில் இருக்கும் வளையங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதை வைத்து மரத்தின் வயதைக் கணிப்பார்களாம். அதுபோலத்தான் இடுப்பின் நடுவில் பெல்ட்போல அணியப்படும் இந்த கயிறுகளைக் கொண்டு நமது உடலின் பருமனை நாம் கணக்கிடலாம்.

கார்டியாக் சிண்ட்ரோம் எக்ஸ் குறைபாட்டை தடுக்கும் அரைஞாண் கயிறு!

மற்றெல்லாக் காரணங்களையும் விட இந்தக் காரணம் ஏற்புடையதுதான். எப்போதெல்லாம் அரைஞான் கயிறு இறுக்கமாகி இடுப்பை அழுத்துகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கையாகி உடனே உடல் பருமனை குறைக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடலின் எடை கூடாமல் காக்கலாம். பெரிதாக உபாதைகள் இல்லாதவரை ஒபிசிட்டியினால் பிரச்னை இல்லை. ஆனால் சென்ட்ரல் ஓபிசிட்டி என்று சொல்லப்படுகிற அப்டாமினல் ஒபிசிட்டியால் உடலில் அப்டமன் (இடுப்பு) பகுதிகளைச் சுற்றி அதிகப்படி கொழுப்பு படிவதால் இதய சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். அப்டாமினல் ஒபிசிட்டி, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் வேலைக்கு இடையூறு செய்வதால், ரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்பட்டு கார்டியாக் சிண்ட்ரோம் எக்ஸ் எனும் குறைபாடு ஏற்படுகிறது.

அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால், இந்தப் பிரச்னை வரும் முன் எச்சரிக்கை அடையலாம் என்று ஒரு மருத்துவ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆக, இத்தனை பலன்கள் இருக்கிறதென்றால், குழந்தைகளுக்கும் வளரிளம் வயது சிறுவர் சிறுமிகளுக்கும், ஏன் ஆண் - பெண் பேதமின்றி, பெரியவர்களும் கூட அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லதுதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com