குழந்தையின் மூளை வளர்ச்சி சீராகவும் கூர்மையாகவும் இருக்க இதுதான் ரொம்ப முக்கியம்!

‘என் மகன் ரொம்ப வாலு! கொஞ்சம் கூட அடங்கவே மாட்டான்’
குழந்தையின் மூளை வளர்ச்சி சீராகவும் கூர்மையாகவும் இருக்க இதுதான் ரொம்ப முக்கியம்!
Published on
Updated on
2 min read

ஆரோக்கியமான மூளைவளர்ச்சிக்கு தாய்பால் கொடுங்க!

உலக தாய்பால் வாரம் ஆகஸ்ட் 1 -7

‘என் மகன் ரொம்ப வாலு! கொஞ்சம் கூட அடங்கவே மாட்டான்’ இன்று பெரும்பாலான பெற்றோர்கள் பெருமையாக பேசிக் கொள்ளும் விஷயம்.

குட்டீஸ்கள் சுட்டித்தனமான குறும்பு செயல்கள் செய்வது இயல்புதான்.  அவர்களின் சின்ன குறும்புகள் நம்மை ரசிக்கவும் மகிழவும் செய்யும்.  ஆனால் சில நேரங்களில்  இந்த குறும்புகள் பிள்ளைகளின் இயல்புக்கு மீறியதாக  இருக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளின் இயல்பான செயலுக்கும் மூளை வளர்ச்சிக்கும் தாய்பால் அவசியமாகிறது. சரியான முறையில் சரியான காலத்தில் தாய்பால் குடித்து பழகிய குழந்தையின் மூளை வளர்ச்சி சீராகவும் கூர்மையாகவும் இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது குழந்தை உடலாலும்  மனதாலும் தாயின் துடிப்புடனே இணைந்திருக்கும். அது வெளியே வந்தவுடன் முதன்மை உணவாக தாய்ப்பால் இருக்கும் பட்சத்தில் எந்தவித அசெளகரியமும் இன்றி அதனை உட்கொள்ளும். தாய்பால் தவிர்த்து வேறு  வெளியுலக ஊட்டமோ பிற பாலோ கொடுக்கும் பொழுது, அது மனதாலும் உடலாலும் ஒருவிதமான அசெளகரியத்திற்கு உள்ளாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

அமெரிக்காவை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் 1999-ஆம் ஆண்டு தாய்பாலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வை  மேற்கொண்டனர். அதில் தாய்பால் குடிக்கும் குழந்தைகளை இரண்டுவிதமாக பிரித்தனர். ஒன்று பிறந்து 12 மாதம் வரை தாய்பால் குடிக்கும் குழந்தைகள். இரண்டாவது வெறும் ஆறு மாதம் வரை மட்டுமே தாய்பால் குடித்த குழந்தைகள். தொடர்ந்து நடந்த ஆய்வின் முடிவில் கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்தன

இந்த குழந்தைகளை அவர்களின் 3 முதல் 7 வயதில் கவனித்த போது  12 மாதம் வரை தாய்பால் அருந்திய குழந்தைகளின் அறிவு, புத்திசாலித்தனம்.கிரகிக்கும் தன்மை, கவனம் செலுத்துதல், பழக்க வழக்கம், செயலாக்கத் திறமை, முடிவெடுக்கும் தன்மை, சமூகத்தோடு ஒத்துபோகும் மனோநிலை குடும்பத்தினரோடு இணக்கம் ஆகியவை  மேன்மையாக இருந்தன.

குறிப்பாக குழந்தைகள் தாய்பால் அருந்தும் காலம் அதிகரிக்கும் ஒவ்வொரு மாதமும் அவர்கள் 0.8 சதவீதம் ஒவ்வொரு திறனிலும் மேம்பாடு கண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை இந்த மேம்பாடு காணப்பட்டது. அடுத்து The Promotion of Breastfeeding Intervention Trial (PROBIT) என்ற அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டது.  31 தாய் சேய் மருத்துவமனைகளில் சுமார் 14000 குழந்தைகளை ஆய்வு செய்த போது தாய் பால் அருந்தும் குழந்தைகள் ஐகியூவில் பிற குழந்தைகளை விட அதீத திறனுடன் செயல்படுவது கண்டறியப்பட்டது.

மேற்கத்திய நாடுகளில் தாய்பால் தரும் விருப்பம் குறைந்த சூழலில் Baby-Friendly Hospital Initiative (intervention) முயற்சியை மேற்கொண்டு கர்ப்பகாலத்திலேயே இதன் மகத்துவத்தை எடுத்துக் கூறி தாய்மார்கள் தாய்பால் கட்டாயம் அதிக காலம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது இந்த அமைப்பு. பெற்ற பிள்ளைகளுக்கு தாய்பால் தருவது என்பது எல்லா உயிரினமும் பின்பற்றும் நடைமுறை. அவ்வாறு பின்பற்றும் பொழுது வெறும் சக்தி மட்டும் கிடைப்பதில்லை. தாய்மார்களின் திறனும் உளவியல் பதிவுகளும் குழந்தைக்குள் ஊடுருவுகின்றன. அதனாலேயே தாய்மார்கள் பால் புகட்டும் பொழுதும் ஆரோக்கியமான அமைதியான மனோநிலையை கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன இந்த அமைப்புகள்.

பிள்ளைகள் அறிவார்ந்தவர்களாக சொல் பேச்சு கேட்பவர்களாக சமூகத்தில் அந்தஸ்துமிக்கவர்களாக உருவெடுக்க வேண்டும் எனில் தாய்பால் கொடுப்பது அவசியம். இந்த காலத்தில் அலட்சியம் காட்டிவிட்டு குழந்தை வளர்ந்தவுடன் அது அடங்கவில்லை, கட்டுபாட்டினுள் வரவில்லை. படிப்பு வரவில்லை என்று புலம்புவதை விட மழலைக்கு காலத்தில் தாய்பாலை தவறாமல் புகட்டுங்கள். நீங்கள் தாய்பால் புகட்டும் பொழுது, நினைக்கும் ஒவ்வொரு நல்ல சிந்தனையும் இயல்பாகவே உங்கள் பிள்ளைகளுக்குள்ளும் ஊடுருவி அவர்களை நல்வழிப்படுத்தும் என்பதையும் நினைவில் கொண்டு அன்போடு செயல்படுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com