இதயத்தை பலப்படுத்தும் மகத்தான மருந்து இது!

குடலையும் சிறுநீர்ப்பையையும் சுத்தமாக வைத்திருக்கும்
இதயத்தை பலப்படுத்தும் மகத்தான மருந்து இது!
Published on
Updated on
2 min read

எனது எட்டு வயது மகன் நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வெல்லத்தைத் எடுத்துத் தின்கிறான். எப்படியாவது தெரிந்து கொண்டு திட்டினாலும் அடித்தாலும் திருந்த மாட்டேன் என்கிறான். இது எதனால்? உடலில் ஏதேனும் கோளாறு காரணமாக இப்படி செய்கிறானா?      

 - சுபா, நங்கநல்லூர், சென்னை.

உங்களுடைய மகன் கூடவே பொட்டுக்கடலையையும் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்! வெல்லத்துடன் அதனையும் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் வலுவாவதற்கும் அதே சமயம் ரத்த அணுக்களின் வளர்ச்சிக்கும் உதவிடக்கூடும். உடலில் ஏற்படும் சில பிரச்னைகளைச் சரி செய்வதற்காக இயற்கையே மகனைத் தூண்டிவிடுவதாக நாம் கருதலாம். உருண்டை வெல்லத்தை விட, அச்சுவெல்லம் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும். வெல்லத்தின் மீது குழந்தைகளுக்கு ஏற்படும் மோகம் இன்றல்ல நேற்றல்ல, பல யுகங்களாக நடந்து வரும் சமாசாரம்தான்.

நீங்கள் வாங்கி வைத்திருக்கக் கூடிய வெல்லம், அழுக்கற்ற சுத்தமான வெல்லமாக இருந்து, அதைப் பையன் சாப்பிட்டால், கபம் எனும் தோஷத்தை சளியாக மாற்றி வெளிப்படுத்தி, குடலையும் சிறுநீர்ப்பையையும் சுத்தமாக வைத்திருக்கும்.

ஆனால், நன்கு சுத்தம் செய்யப்படாத வெல்லம், சாக்குப் பைகளில் திறந்த நிலையில் வைத்திருந்து, அதில் ஈ மொய்த்திருந்த நிலையில் உள்ளதைச் சாப்பிட்டால், குடலில் கிருமிகள் வளரும். எலும்புகள், ரத்தம், கொழுப்பு, மாமிச சதைப் பகுதிகள், கபம் ஆகியவை நல்ல வகையில் வளர்ச்சியை அடையாமல் அதிகரிக்கக் கூடும்.

சுத்தமான பழைய வெல்லத்தைச் சாப்பிட்டால் இதயத்தைப் பலப்படுத்தும்; உடம்புக்கு உகந்தது. ஆனால், புதிய வெல்லம் கபத்தை அதிகரித்து, பசியை மந்தமாக்கும்.

கரும்புச் சாறு நன்கு சுண்டக் காய்ச்சப்படுவதால், கெட்டியான வெல்லம் நமக்குக் கிடைக்கிறது. இதில் இனிப்பும் உப்பும் உணரப்படும். கரும்பினுடைய நுனிப்பகுதியும், கணுப்பகுதி நெருக்கமும் முற்றி வளராத இளங்கரும்பும் மூலப் பொருளாக இருந்தால் உப்பு அதிகமாகவே இருக்கும். சூடான வீர்யம், வயிற்றில் வாயு சேரவிடாது. நெய்ப்புடன் உடலுக்குப் புஷ்டி தரும். 

சிறுநீரைப் பெருக்கி அதிகம் வெளியேற்றும். கல்லீரலின் உட்பகுதிகளில் சென்று சுத்தப்படுத்தி அங்குள்ள விஷப் பொருட்களை வெளியேற்றும் திறன் கொண்ட வெல்லத்தை உங்கள் மகன் எடுத்துச் சாப்பிடுவதால் என்ன கெடுதல் நேர்ந்துவிடப் போகிறது?

வெல்லத்தில் பொதிந்துள்ள தாதுப்பொருட்கள் இளம் வயதிலேயே மூப்பை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வெல்லம் சாப்பிடும் மகனுக்கு குடலில் கிருமிகள், புழுக்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் தங்களுக்கு இருந்தால், வாய்விடங்கம் எனும் மருந்தை நன்கு பொடித்து, சிறிய அளவில் வாரமிருமுறையோ, மூன்று முறையோ சிறிது தேனுடன் குழைத்துக் கொடுக்க,   வெளியேற்றிவிடும்.

இப்பழக்கம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் வெல்லத்தின் மீது கொண்ட மோகம் காரணமாக, அவன் அதைத் தொடர்ந்து சாப்பிட்டு, சர்க்கரை நோய் வந்து துன்பப்படுவானோ? என்ற பயமும் தங்களுக்கு இருந்தால், அந்த எண்ணம் சரியானதாக நாம் கருத முடியாது. 

ஒருவரது கணையம், நல்ல முறையில் இயங்கித் தகுந்த அளவு இன்சுலின் அவருக்குக் கிடைக்குமாயின், எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாகவே, பிள்ளைகள் இந்த வயதில் நன்கு ஓடி ஆடி விளையாடக் கூடியவர்கள். அதற்கான நேர அமைப்பை நீங்கள் மகனுக்கு ஏற்படுத்தித் தந்தால், இந்த வெல்லம் சாப்பிடும் பழக்கத்தால் சர்க்கரை உபாதை  வராது.

வெறும் வெல்லத்தை இப்படி சாப்பிடுகிறானே என்று நீங்கள் பயந்தால், வெல்லம் வைத்திருக்கும் பாத்திரத்தை, மகன் எடுக்க முடியாதபடி உள்ள இடத்தில் நீங்கள் வைக்கலாமே? வெல்லம் கலந்த எள்ளுருண்டை, கடலை மிட்டாய், பொட்டுக்கடலை உருண்டை போன்றவற்றை அவனுடைய கண்களில் படுமாறு வைத்தால், அவற்றின் மீது எற்படும் விருப்பம். நாளடைவில் வெறும் வெல்லம் சாப்பிடும் பழக்கத்தை மாற்றி இதுபோன்ற சத்து உருண்டைகளை விரும்பி சாப்பிடத் தொடங்கி விடுவான். அவன் விரும்பும் வெல்லமும் கிடைக்கும், கூடவே ஆரோக்கியமும் நிலைக்கும்!

- பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com