நம்புங்கள்! இந்தப் பயிற்சியை தொடங்கிய மூன்றாவது நாளில் உடல் எடை குறையும்

கடந்த 24 ஆண்டுகளாக உடல் சீரமைப்பு (Body Sculpting) தெரபிஸ்ட்டாக பயணித்து வருபவர் ஜெயா மகேஷ்.
நம்புங்கள்! இந்தப் பயிற்சியை தொடங்கிய மூன்றாவது நாளில் உடல் எடை குறையும்

கடந்த 24 ஆண்டுகளாக உடல் சீரமைப்பு (Body Sculpting) தெரபிஸ்ட்டாக பயணித்து வருபவர் ஜெயா மகேஷ். கோயம்புத்தூரில் வசித்து வரும் இவர் இந்திய பேஷன் உலகில் மாடலாகவும், கடந்த 2016-ஆம் ஆண்டு மிஸஸ் இந்திய எர்த் கிளாஸிக்காகவும் விருது பெற்றவர். மேலும் பல அமைப்புகள் இவருக்கு சாதனைப் பெண் விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை மூலம் ஃபிட்னெஸ் குருவாக அறியப்படும் இவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: 

'அப்பா போலீஸ் கமிஷனராக இருந்தவர். இதனால் சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்யும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. எனவே ஃபிட்னெஸ் என் வாழ்க்கையில் எப்போதும் ஓர் அங்கமாகவே இருந்து வந்தது. 

இதற்கிடையில் 25 வயதில் திருமணம். நான் கர்ப்பமான போது, எனது கர்ப்பப் பையில் பிரச்னை ஏற்பட, எனது கர்ப்ப காலம் முழுவதும். ஏகப்பட்ட பிரச்னைகள் நிறைந்ததாக இருந்தது. இதனால் கண் பார்வை மங்கத் தொடங்கியது. மேலும் உடலில் வேறு சில பிரச்னைகளும் உண்டானது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து என் பிரசவம் நல்லபடியாக முடிந்தது. பிரசவம் பிரச்னைகளுடன் இருந்ததால், பிரசவத்திற்கு பிறகு எனது உடல் எடை 118 கிலோவாக கூடிவிட்டது. இதை குறைக்க வேண்டும் என்று நினைத்த போதுதான், தசைகளை கையாளும் தொழில்நுட்பத்தை (Muscle Manipulation Technic) என்று தசைகளின் அசைவுகளை வைத்து செய்யும் சில உடற்பயிற்சிகளை நானே ஆராய்ச்சி செய்து உருவாக்கினேன். அதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. 

இந்தத் தசைகளைக் கையாளும் தொழில்நுட்பம் என்பது நரம்பியல் மருத்துவத்தில் முடக்குவாத நோயாளிகளுக்கு இந்த பயிற்சி முறைகளைப் பரிந்துரைப்பார்கள். அதில் சில புதிய பயிற்சி முறைகளை ஆராய்ச்சி செய்து நானே கண்டுபிடித்தேன். எனது கண்டுபிடிப்புகளை பலகட்டங்களாக ஆராய்ந்து பின்னர், எனக்கு அதில் டாக்டரேட் பட்டம் வழங்கியது சவுத் அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சிக் கழகம்.

பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளான கர்ப்பப்பை பிரச்னை, பி.சி.ஓ.எஸ், ஓவரி பிரச்னை, வெரிகோஸ், குழந்தையின்மை, சிறுநீரகப் பிரச்னை போன்ற பலவிதமான நோய்களினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு துணை மருத்துவமாக, இந்த தசைகளை கையாளும் பயிற்சிகளைக் கற்றுத் தருவதற்காக மருத்துவர்கள் என்னைப் பரிந்துரைப்பார்கள். அந்த வகையில் கடந்த 24 ஆண்டுகளாக இந்த பயிற்சிகளை பெண்களுக்கு மட்டுமே பயிற்றுவித்து வருகிறேன். இதில் என்னிடம் நிறையப் பெண்கள் பயிற்சிகளை கற்று பயன் பெற்றுள்ளனர். அதுபோன்று இந்த பயிற்சிகள் உடம்பிற்கு மட்டுமேயான உடற்பயிற்சி கிடையாது. மனசுக்கும் இதமான ஒரு பயிற்சி. என்னுடைய பயிற்சியில் முதல் பாடமே மனதை ரிலாக்ஸ் செய்யக் கூடிய கவுன்சிலிங்தான். 

உடல் எடை குறைய என்னிடம் நிறையப் பேர் வருகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சொல்வது இதுதான், 'மேடம் நான் 6 மாதம் ஜிம் போனேன். நன்றாக எடை குறைந்தது. ஜிம் போவதை விட்டவுடன் மீண்டும் வெயிட் போட்டுட்டேன்' என்பார்கள். சிலர், 'யோகா பண்ணினேன். விட்டவுடன் மீண்டும் உடல் எடை கூடிவிட்டது' என்பார்கள். 

அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், ஃபிட்னெஸ் பயிற்சி என்பது நாம் வாழ்நாள் முழுக்க செய்து கொண்டிருக்க வேண்டிய ஒன்று. மேலும், இந்த உடற்பயிற்சிகளை எல்லாம் உங்களுக்காக நீங்கள் செய்கிறீர்கள் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே இதைத் தொடர்ந்து செய்ய முடியும். 

அந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் துணி துவைப்பது, மாவாட்டுவது, அம்மியில் அரைப்பது என எல்லா வேலைகளையும் கைகளாலேயே செய்தார்கள். அவை எல்லாம் அவர்களுக்கு உடற்பயிற்சிகளாக இருந்தன. இதனால் அவர்கள் இயற்கையாகவே ஃபிட்டாக இருந்தார்கள். ஆனால், இன்று எல்லாவற்றிற்கும் மெஷின் வந்துவிட்டது. இதில் நீங்கள் என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள். அதனால்தான் இப்போதெல்லாம் பெண்கள் ஜிம்களையும், யோகா மையங்களையும் தேடிச் செல்ல வேண்டியுள்ளது. 

இதற்கெல்லாம் என்னதான் ஃபேமிலி சப்போர்ட் இருந்தாலும், நமக்கு முதல் சப்போர்ட் நாம் தான். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல், 'எனக்காக நான் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வார்' என்று உங்களை நீங்களே மோட்டிவேட் செய்வதுதான் முக்கியம்.

தற்போது, டயட் பயிற்சி, யோகா பயிற்சி, தியானப் பயிற்சி என நிறையப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. அதில் எது உங்களுக்கு சிறந்த பயிற்சி என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதனுடன் இந்த தசைகளைக் கையாளும் தொழில்நுட்பப் பயிற்சி உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். எடை குறைப்பைப் பொருத்தவரை, நீங்கள் இந்த பயிற்சியை தொடங்கிய மூன்றாவது நாளில் உங்களுடைய பழைய ஆடையை உங்களால் மீண்டும் அணிந்து கொள்ள முடியும். நம்ப முடிகிறதா? நிச்சயம் நடக்கும். 

உதாரணமாக ஒரு சில பெண்களுக்கு இடுப்புக்கு மேல் பகுதி பெறுத்து இருக்கும், ஒரு சிலருக்கு இடுப்புக் கீழ் பகுதி பெருத்து இருக்கும். இதில் அவர்களது உடலில் எந்தப் பகுதி குறைய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அந்த பகுதியை குறைக்க இந்தப் பயிற்சிகள் நிச்சயம் உதவி செய்கிறது. 

அதுபோன்று இந்தப் பயிற்சிகளில் ஒன்று ஃபேஷியல் ஸ்கல்ப்டிங், இது முகத்திற்கான பயிற்சி. இதன் மூலம் முகத்தில் உள்ள தசை, நரம்புகளைச் சீராக்க முடியும். இதனால் சிலருக்கு முகத்தில் தொங்கும் சதை இருந்தால் சரியாகும், சுருக்கங்கள் இருந்தாலும் சரியாகும். 

இந்தப் பயிற்சிகளை இளைஞர்கள் மட்டுமல்ல, 80 வயதுக்காரர்கள் வீல் சேரில் அமர்ந்தபடியும் செய்ய முடியும் அந்த அளவிற்கு மிகவும், சுலபமான பயிற்சிகளைத்தான் நான் கற்றுத் தருகிறேன். 

பொதுவாக பெண்களுக்கு நான், சொல்வது என்னவென்றால், 'உங்களால் முடிந்த சின்ன சின்ன உடற்பயிற்சிகளை தினமும், கட்டாயம் செய்ய மறக்காதீர்கள். காலை நேர உணவை தவிர்க்காதீர்கள், ஏனென்றால் காலை நேர உணவை தவிர்க்கும் போது, நாளடைவில் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துவது முழுமையாக இருக்காது. அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்னைகளை உருவாக்கிவிடும். உடல் சோர்வாக காணப்படுவதற்கும் இதுதான் காரணம். அது போன்று இளம் பெண்கள், 'ஜங்க் ஃபுட்' சாப்பிடுவது, மணிக்கணக்காக டிவி, செல்போன் முன்னால் உட்கார்வதை எல்லாம் தயவு செய்து விட்டுவிட்டீர்கள் என்றால் உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடியும்' என்றார். 

- ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com