

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில்நுட்பர் (டெக்னீசியன்) பணியிடங்களை நிரப்பாமலேயே, ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆயிரக்கணக்கான டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பப் படிப்பு முடித்தவர்களை பணிக்கு அமர்த்தாமல், பயிற்சி பெற்ற இதர பணியாளர்களைக் கொண்டே டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
டயாலிசிஸ் சிகிச்சைக்கு தொழில்நுட்ப ரீதியாக தகுதியானவர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2005-06ஆம் கல்வியாண்டில் டயாலிசிஸ் தொழில்நுட்பர் பட்டயச் சான்றிதழ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் கட்டமாக திருநெல்வேலி, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், திருச்சி, சென்னையில் உள்ள ஸ்டான்லி, ராஜாஜி அரசு பொது மருத்துவமனை, கேஎம்சி மருத்துவமனை என 9 இடங்களில் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கல்லூரிகளில் ஆண்டுக்கு தலா 20 பேர் சேரும் வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. 12-ஆம் வகுப்பில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தகுதியாகக் கொண்டு இந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
இப்போது, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டுக்கு 200 பேர் தொழில்நுட்பக் கல்வி பெற்று வெளியேறுகின்றனர். இதுவரை, 2018 பேர் இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.
ஆனால், இவர்களுக்கான வேலையை வழங்க அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் தயாராக இல்லை. 1984-ஆம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்காக 2 இயந்திரங்கள் கொள்முதல் செய்தபோதே, இந்தச் சிகிச்சைக்காக 4 தொழில்நுட்பர்கள் தேவை எனக் கூறி புதிதாகப் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. 2 இயந்திரங்களுக்கு 4 பேர் எனப் பணியிடம் உருவான நிலையில், மதுரையில் இப்போது 8 இயந்திரங்கள் உள்ளன. 16 தொழில்நுட்பர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உருவாக்கப்படவில்லை. 1984-இல் தோற்றுவித்த 4 பணியிடங்களுக்கும் சான்றிதழ் பெற்ற தொழில்நுட்பர்கள் நியமிக்கப்படவில்லை.
இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் சிகிச்சைக்காக 600-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் உள்ளன. இந்த இடங்களில் குறைந்தபட்சம் 1,200 பேரை பணியமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், மருத்துவமனையில் செவிலியராக உள்ள நபரோ, ஆய்வகத்தில் உதவியாளராக இருந்த நபரோ சிறிது பயிற்சி எடுத்துக் கொண்டு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தப் பணிக்கென்று தனியாக தரமான தொழில்நுட்ப வல்லுநர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளே உருவாக்கி வருகின்றன. ஆனால், பணியிடங்களுக்கு மட்டும் அவர்களைப் பரிந்துரை செய்வதில்லை.
மருத்துவக் கல்வி இயக்ககமும் டயாலிசிஸ் சிகிச்சைக்கு தகுதியான தொழில்நுட்பப் பணியாளர்களை நியமனம் செய்யாமல் மௌனமாக இருந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளைப் பின்பற்றி தனியார் மருத்துவமனைகளிலும் இந்தப் பணியிடத்துக்கு தகுதியான தொழில்நுட்பர்களை நியமிக்காமல், பயிற்சி பெற்ற தங்களது மருத்துவமனையின் இதர பணியாளர்களையே பயன்படுத்தி வருகின்றனர். சில தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தகுதியான தொழில்நுட்பர்களை குறைந்த ஊதியத்தில் நியமித்துள்ளனர். இதனால், டயாலிசிஸ் சிகிச்சையின் தரம் கேள்விக்குறியாகி வருகிறது.
தற்போது, தமிழகத்தில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளில் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டயாலிசிஸ் சிகிச்சை நடைபெறுகிறது. ஆனால், 6 பேர் மட்டுமே தகுதியான நபர்களாக நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த 6 பேரும், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளான ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர், ராஜாஜி மருத்துவமனையில் 3 பேர், ராயப்பேட்டையில் ஒருவர் என பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதர மருத்துவமனைகள் அனைத்திலும் ஒரு பணியிடம்கூட நிரந்தரமாக இல்லை. தகுதியானவர்களாகவும் இல்லை என்கின்றனர் இத்தகைய தொழில்நுட்பம் பயின்ற மாணவர்கள்.
இதுதொடர்பாக தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் பி.வி. செந்தில்குமார் கூறியதாவது:
மருத்துவப் படிப்பு படிக்காதவர்களை போலி மருத்துவர்கள் எனக் கைது செய்வதைப் போன்று, டயாலிசிஸ் சிகிச்சைக்கான தொழில்நுட்பக் கல்வி பயிலாமல் சிகிச்சை அளிப்பவர்களை போலியானவர்கள் எனக் கருத வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் சிகிச்சைக்கு உரிய சான்றிதழ் பெற்றவர்களை நிரந்தரப் பணியில் நியமிக்க வேண்டும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்கு குறைந்தது 4 மணி நேரம் தேவை. இதனால், நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட்ட ஒருவர் நாளொன்றுக்கு 3 சிகிச்சை அளிப்பதே அரிதான செயல். ஆனால், 30-க்கும் மேற்பட்ட சிகிச்சை நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படியெனில் இதர சிகிச்சை அனைத்தும் தகுதியில்லாதவர்களைக் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது என்பது தெளிவாகிறது. எனவே, இந்தப் பணியிடத்துக்கு உரிய சான்றிதழ் படிப்பை முடித்து காத்திருக்கும் 2,018 பேரில் குறைந்தபட்சம் ஆயிரம் பேரையாவது அரசு மருத்துவமனைகளில் நிரந்தரப் பணியிடத்தில் பணியமர்த்த வேண்டும். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக டயாலிசிஸ் தொழில்நுட்பர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் கல்வி இயக்ககத்தில் முறையிட்டால் மருத்துவமனை தரப்பில் இருந்து கருத்துரு வரவில்லை எனக் கூறுகின்றனர். ஆனால், எந்தவொரு மருத்துவமனையும் இதுவரை தங்களுக்கு இந்த பணியிடத்துக்கான தொழில்நுட்பம் பயின்றவர் தேவை எனக் கோரவில்லை. தமிழக சுகாதாரத் துறை இத்தகைய சிக்கலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
தனி ஆசிரியர்களும் இல்லை!
டயாலிசிஸ் பயின்றவர்களுக்கு வேலைதான் இல்லை என்றாலும், இந்தக் கல்வியை கற்றுத் தருவதற்காக பிரத்யேக ஆசிரியர்களும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நியமிக்கப்படவில்லை. தனியாருக்கு நிகராக அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஈடேற வேண்டும். தரமான தொழில்நுட்பப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். இப்போது டயாலிசிஸ் சான்றிதழ் படிப்பு கற்றுத் தரும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்தச் சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களில் விருப்பமானவர்கள் மட்டுமே தாமே முன்வந்து கல்வி கற்றுத் தருகின்றனர். எனவே, இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தருவதற்கென பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.