உங்கள் உடலில் நச்சுத்தன்மை உள்ளதா?

நம் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் (toxins)அதிகம் இருந்தால் பல பிரச்னைகள் ஏற்படும்.
உங்கள் உடலில் நச்சுத்தன்மை உள்ளதா?
Published on
Updated on
2 min read

நம் உடலில்  நச்சுப்பொருட்கள் (toxins)அதிகம் இருந்தால் பல பிரச்னைகள் ஏற்படும். அதிலிருந்து மீள ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ் மிகுந்துள்ள உணவுகளை உட்கொள்வது, வாழ்க்கை முறையினை மாற்றிக் கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். உடலில் நச்சுத்தன்மை அதிகரித்தால் உடல் சக்தி இழந்து சோர்வுக்கு உள்ளாகி பலவித நோய் பாதிப்புக்கள் ஏற்படும். ஆனால் முதலில் நச்சுத்தன்மை இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். அதற்கு முன் தற்காப்பாக சில வழிமுறைகள் உள்ளது. உணவுப் பழக்கங்கங்களின் மூலம் நச்சுத்தன்மையை பெரும்பாலும் தவிர்க்கலாம். 

தூக்கமின்மை

பொதுவாக அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவை. ஆனால் உடலில் நச்சுத்தன்மை இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும். இந்த நச்சுத்தன்மையால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ப்ளூரோகுவினோலோன் ஆண்டிபையோடிக் மருந்துகள் இதற்கு காரணமாக இருக்கலாம், ப்ளூரோகுவினோலோன் நச்சுத்தன்மை, கடுமையான மற்றும் நாட்பட்ட தூக்கமின்மை வகைகளை உண்டாக்குகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நமது உடலில் மெலட்ரின் என்ற ஒரு வேதியல் பொருள் சுரக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்க உதவும் ஒன்று. இந்த வேதிப்பொருளை வலி மாத்திரைகளின் வேதி பொருட்கள் பாதிப்பதால் தூக்கமின்மை ஏற்படலாம். அதாவது நச்சுத்தன்மை ஏற்பட்டு பாதிப்படையலாம். 

தீர்வு

மெலடோனின் வேதிப்பொருள் சுரக்க உதவும் உணவுகளை தூங்கப்போவதற்கு முன் உட்கொள்வதால் நிம்மதியான தூக்கம் வரும். செர்ரி, வாழைப்பழம் போன்ற உணவுகளில் மெலடோனினை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது.

ரொட்டி, ஓட்ஸ், போன்ற கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள, உணவுகள் சர்க்கரையை உற்பத்தி செய்து உடலில் இன்சுலினை சுரக்கச் செய்கிறது. இன்சுலின் அதிகமாக சுரக்கும் போது உறக்கம் ஏற்படும். பல ஆண்டுகளாக, நமது முன்னோர்கள் இரவில் தூங்கப்போகும் முன் பால் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தூக்கமின்மையை தடுக்க பாலில் உள்ள ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. இதோடு பாலில் உள்ள கால்ஷியமும் தூக்கத்தை தூண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் சோர்வு மற்றும் உடல் சூடு, திடீர் தொப்பை

உடலில் நச்சுக்கள் அதிகரித்தால் உடலின் வளர்சிதை மாற்றத்தின் செயல் திறன் குறையும். இதனால் வயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பை ஏற்படும். தவிர நச்சுத்தன்மையால் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பையும் அதிகரிக்கும். உடலில் நச்சு அதிகரிக்கும் போது கல்லீரல் செயல்பாடு கடினமாகத் தொடங்கும். இதனால் உடலில் சூடு அதிகரிக்கும். கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் நச்சுக்கள் உடலின் கல்லீரலில் செயல்பாட்டை கடினமாக்குவதன் காரணமாகத் தான் வளர்சிதை மாற்றங்களை உருவாக்கி அதன் செயல்திறன் குறைகிறது. கல்லீரல் சரியாக இயங்கவில்லை எனில் வாயில் துர்நாற்றம் ஏற்படும். உடல் மிகவும் சோர்ந்து போனாலோ, அடிக்கடி மயக்கம் வருவது போலிருந்தாலோ கல்லீரலில் ஏதோ பிரச்னை அது நச்சுத்தன்மையால் பாதிப்பு அடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

தீர்வு

தொப்பைக்கு காரணம் கல்லீரல் கொழுப்பாகவும் இருக்கலாம். இதற்கு உணவு முறையும் ஒரு காரணமாகும். 

க்ரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பாகற்காய், பால் நெருஞ்சில், முழு தானியங்கள், தக்காளி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரல் பிரச்னையை சமாளிக்க முடியும். ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் குடிப்பதும் நல்ல பலனைத் தரும். ரோஸ்மேரி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. அதிமதுரம், டான்டேலியன் போன்ற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பினை குறைக்க முடியும். ஆனால் இந்த மூலிகைகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது.  

பிற அறிகுறிகள்

அடிக்கடி தலைவலி ஏற்படும். சருமப் பிரச்னைகள் உருவாகும். இதற்குக் காரணம் ரத்த ஓட்டப் பிரச்னைகள். மருத்துவரை அணுகும் போது நாக்கை நீட்டச் சொல்வார். நாக்கின் மேற்புறத்தில் மஞ்சள், கருநீலம், வெள்ளை போன்ற நிறங்கள் தென்பட்டால் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்று அவர் கண்டுபிடித்துவிடுவார்.

நச்சுத்தன்மையை சமாளிக்க வைட்டமின் சி உணவு வகைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் தேவை. அது மட்டுமல்லாமல் மனஅழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

சரியான முறையில் உணவைச் சாப்பிட்டால் 80% நச்சுத்தன்மையை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றினால் அது உடலுக்கும் மனத்துக்கும் நல்லது. தேவையான அளவு நுண் மற்றும் நார்ச் சத்துக்களோ உள்ளடக்கிய ஊட்டச் சத்துக்களை சாப்பிடவேண்டும். பாக்கெட் உணவுகள், உணவுக்கு நடுவில் இடை உணவுகள், துரித உணவுகள் போன்ற குப்பை உணவுகளை அறவே தவிர்த்தால் உடல் நலம் மேம்படும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் உடலில் தேவையற்ற நச்சுத்தன்மை அதிகம் சேராது.  தண்ணீர் உடலின் தேவைக்கு ஏற்ப குடிப்பதும் ஆரோக்கியத்துக்கும் உடல் நலத்துக்கும் மிகவும் முக்கியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com