பிறக்கும் 700 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மனநலக் குறைபாடு (டவுன் சின்ட்ரோம்) பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று மெடிஸ்கேன் நிறுவன இயக்குநர் டாக்டர் இந்திராணி சுரேஷ் கூறினார்.
மெடிஸ்கேன் நிறுவனம் சார்பில் சர்வதேச ’டவுன் சின்ட்ரோம்' தினம் (மார்ச் 21) சென்னையில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டாக்டர் இந்திராணி செய்தியாளர்களிடம் கூறியது:
பொதுவாக ஒரு குழந்தை உருவாகத் தந்தை, தாயிடம் இருந்து தலா 23 ஜோடி குரோமசோம்களின் பங்களிப்பு இருக்கும்.
இந்த குரோமசோம்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடுவதால் பிறக்கும் குழந்தைகள் மனநலக் குறைபாட்டோடு பிறக்கின்றன.
பிறக்கும் குழந்தைகளில் 700-இல் ஒரு குழந்தைக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வயது முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்தக் குறைபாடு ஏற்படும் என்று கூற முடியாது.
ஏனென்றால் மனநலக் குறைபாட்டோடு பிறக்கும் 70 சதவீதம் குழந்தைகள் இளம் தாய்மார்களுக்குப் பிறந்தவை. இளம் தாய்மார்கள் இனப்பெருக்கத்துக்கான சரியான வயதில் இருப்பதால் அவர்களுக்குக் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால் பாதிப்பும் அதிகமாகக் காணப்படும்.
இந்தக் குறைபாட்டை கர்ப்பக் காலத்தின் தொடக்கத்திலேயே கண்டறிவது சிரமம். எனினும் மரபணுப் பரிசோதனைகள் மூலம் 85 சதவீதம் பாதிப்பைக் கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியும் போது மனநலக் குறைபாட்டோடு குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்க முடியும்.
மனநலக் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளுக்கு பல உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இருப்பினும் முறையான சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள், பயிற்சிகள் மூலம் அவர்களும் சமுதாயத்தில் இயல்பான வாழ்க்கை வாழமுடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.