மாதவிலக்கின் போது ஏற்படும் அதீத வலி! நிவாரணம் தருமா பெயின் கில்லர் மாத்திரைகள்?
By DIN | Published On : 04th October 2017 11:49 AM | Last Updated : 04th October 2017 11:49 AM | அ+அ அ- |

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கின்போது உதிரப்போக்குடன் வலி வேதனைகளும் ஏற்படும், ஒரு சிலருக்கு இந்த வலியின் தாக்கம் மிக அதிகமாகவும் இருக்கும்.
பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவு அதிகமாக இருப்பதே இது போன்ற மோசமான வலிக்குக் காரணம். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பெண்கள் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். சிலர் வீட்டு இயற்கை வைத்தியம், வேறு சிலர் மருத்துவரை ஆலோசித்து தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வது என எப்படியாவது இந்த வலிக்குத் தீர்வுகாண முயல்கிறார்கள்.
சமீபத்தில் மருத்துவ இதழ் ஒன்றில் இந்த வலியின் தாக்கத்தை குறைக்கச் சிறந்த வழியாக ஐபூபுரோஃபன் (Ibuprofen) என்கிற வலி நிவாரண மாத்திரையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது கடுமையான வலியாக இருந்தாலும் அதற்கான சிறந்த தீர்வாக இது அமையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரையில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஸ்டெராய்டின் (Steroid) அளவு குறைவாக இருப்பதோடு மாதவிடாயின் போது உடலில் உற்பத்தியாகும் ரசாயனத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது.
இந்த மாத்திரையைக் கட்டாயம் உணவு உட்கொண்ட பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு இந்த மாத்திரியை எடுத்துக்கொள்வது நல்லது.