ஒரு பெண் பருவமடைவதற்கும், அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளான பிறப்புறுப்பு, மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பைகள் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. உடல் எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை ஹார்மோன்களே கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியாகும் முட்டை ஆணுடைய விந்துடன் இணைந்து கருவாக மாறும் போதும் கருப்பையினுள் தங்கி வளர்ச்சியடையத் தேவையான ஏற்பாடுகளையும் இந்த ஹார்மோன்களே செய்கின்றன. 45 அல்லது 50 வயதை ஒரு பெண் நெருங்கும்போது அவளுடைய உடலில் இந்த ஹார்மோன்களின் உற்பத்தி படிப்படியாக குறைகிறது. இதனால் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதும் நின்றுவிடுகிறது, இதையே ‘மெனோபாஸ்’ (Menopause) என்கிறோம்.