உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடிகை கெளதமியின் நடைப்பயணம்! 

மக்களை பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நோய்களின் பட்டியலில் எய்ட்ஸுக்குப் பிறகு
உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடிகை கெளதமியின் நடைப்பயணம்! 
Published on
Updated on
1 min read

மக்களை பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நோய்களின் பட்டியலில் எய்ட்ஸுக்குப் பிறகு புற்றுநோய்தான் உள்ளது எனக் கூறலாம். காரணம் இது நோயாளிகளுக்கு மரண பயத்தையும் கடுமையான மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும். இன்றளவும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் மக்கள் மத்தியில் ஏற்படாதது வருத்தமான விஷயம்தாம். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த பலர் அதன் பின்னரான வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். திரையுலகிலும் நடிகை லிசா ரே, மணிஷா கொய்ராலா, கோலிவுட்டில் நடிகை கெளதமி போன்றோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும், அதனை எதிர்த்துப் போராடி முழுமையாக குணம் அடைந்துள்ளனர். குறிப்பாக நடிகை கெளதமி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை தனது தொண்டு நிறுவனமான லைஃப் அகெய்ன் ஃபவுண்டேஷன் மூலம் செயல்படுத்திவருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நடிகை கெளதமி இன்று காலை பெசன்ட்நகர் கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயிற்சியை (வால்கதான்) தொடக்கி வைத்தார். இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கெளதமியுடன் நடிகை தேவயானியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் விஜய் இந்நிகழ்விற்கு தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கெளதமி, 'புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும். இந்த நோய் வந்தால் இறந்து விடுவோம் எனப் பயந்து, மனம் தளர்ந்து வீட்டில் முடங்கிப் போய் விடக் கூடாது. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து விட முடியும். பின்னர், தொடர்ந்து சிகிச்சை பெற்றால் நிச்சயம் குணமடையலாம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு புற்றுநோய் வந்தது. அப்போது அதை எதிர்த்து போராடி சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து, இதோ உங்கள் முன்னால் நிற்கிறேன். புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய முடியும் என்பதற்கு நானே சாட்சி. 

இருபது ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் வந்து குணமடைந்து வரும் ஒருவரும் கெளதமியுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் மனம் தளர்ந்து விடக்கூடாது. புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் வசதி உள்ளது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றன. புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி அல்ல, தொடக்கத்தில் கண்டறிந்து போதிய சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயம் புற்றுநோயை வெற்றிக் கண்டுவிடலாம் என்பதை உரக்கச் சொல்லும் விதமாக இந்த நடைப்பயிற்சி விளங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com