உணவு தெய்வத்திற்கு சமமானது! இப்படிச் சொன்னவர் யார்? தொடர்ந்து படியுங்கள்!

மருத்துவர் பிரதாப். சி. ரெட்டியின் புதல்வி. அப்பல்லோ குழுமத்தின் துணைத்தலைவி
உணவு தெய்வத்திற்கு சமமானது! இப்படிச் சொன்னவர் யார்? தொடர்ந்து படியுங்கள்!
Published on
Updated on
4 min read

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்:

மருத்துவர் பிரதாப். சி. ரெட்டியின் புதல்வி. அப்பல்லோ குழுமத்தின் துணைத்தலைவி. உடல் நல சிகிச்சை சம்பந்தப்பட்ட மைக்ரோசாஃப்ட் விருதினை பெற்றவர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தினால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றவர். இவரது உடல் நல சேவைகளுக்காக பல நிறுவனங்களினால் பாராட்டும், விருதும் பெற்ற ப்ரீத்தா ரெட்டி தனது தாயார் பற்றி இங்கு கூறுகிறார்: 


"என் தாயார் பெயர் சுசரிதா ரெட்டி. இன்று நாங்கள் இருக்கும் வாழ்வுக்கு அவர் தான் காரணம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். எல்லோருக்கும் எனது தந்தையாரை தெரியும். நாங்கள் நால்வரும், அதாவது என்னுடன் பிறந்த மூன்று பேர்களும் பெண்கள். நான் ப்ரீத்தா ரெட்டி, எனது சகோதரிகள் சிந்தூரி ரெட்டி, சங்கீதா ரெட்டி, சுனிதா ரெட்டி. ஆனால் எனது தாயாரை பலபேர்களுக்கு தெரியாது. ஆனால் அவர்தான் இந்த பெரிய ஆலமரத்தின் ஆணி வேர் என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவரைப் பற்றி எதை சொல்வது எதை விடுவது என்று எனக்கு தெரியவில்லை. அவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எங்கள் சிறிய வயதை நோக்கி நான் பின்னால் பயணம் போக வேண்டும்.

அந்த காலத்தில் நாங்கள் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்கள். எங்கள் தந்தையார் படிப்பில் சிறந்தவர். அவர் எங்கள் நால்வரையும் நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று மிகவும் விரும்பினார். அதற்காக இரவும் பகலும் உழைக்க தயாராக இருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்தார் எங்களது தாயார். 

குழந்தைகளான எங்கள் நால்வருக்கும் எந்த சிறு பிரச்னை வந்தாலும் (குழந்தையாக இருந்தபோது குட்டிக் குட்டி சண்டைகள்) நாங்கள் எல்லோரும் செல்வது எங்கள் தாயாரிடம் தான். நான் பல முறை வியந்து பார்த்திருக்கிறேன். எந்தப் பிரச்னை என்றாலும் அதற்கு சரியான தீர்வு சொல்லக் கூடியவர் எனது தாயார்தான் . உழைப்பாளர் பிரச்னை என்றாலும் பதில் சொல்வார். குடும்பப் பிரச்னை என்றாலும் நல்லதொரு தீர்வு அவரிடம் இருக்கும். தங்களின் கீழ் வேலை செய்வோரிடம் ஏற்படும் எந்த விஷயம் குறித்தும் அவரிடம் நாம் ஆலோசனை கேட்கலாம். அவரது முடிவு மிகவும் சரியாக இருக்கும். நாங்கள் பலசமயம் தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளும் எந்த ஒரு விஷயத்திற்கும் இவரிடம் மிகவும் சாதாரணமாக அதே சமயம், சரியானத் தீர்வு கிடைக்கும். எப்படி இவருக்கு மட்டும் இந்த வகையாக யோசிக்க முடிகிறது என்று நான் நினைப்பதுண்டு. ஒன்று மட்டும் நிச்சயம் இவரிடம் நாங்கள் நால்வர் செய்யும் வேலையை கொடுத்தாலும் மிகவும் திறமையாக செய்து விட்டு அடுத்தது என்ன என்று எங்களை பார்ப்பார் என்று நான் நினைக்கிறேன். 

சில வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் நான் இரண்டு இடத்தில் இருக்க வேண்டிய நிலை. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இவரைப் பார்த்தால் அவர் வருத்தப்படுவார். அவரைப் போய் பார்த்தால் இவருக்கு கோபம் வரலாம். இந்த மாதிரி இக்கட்டான நிலையில் நான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். விஷயத்தை கேள்விப்பட்ட எனது தாயார் என்னை அழைத்து "நீ கவலை படாதே. யாராவது ஒருவரை இங்கே அழைத்து வந்து என்னிடம் விட்டுவிடு. நீ வரும் வரைக்கும் நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். உண்மையிலேயே நான் சந்தோஷப் பட்டேன். ஒருவரை அம்மாவிடம் விட்டுவிட்டு மற்றவரை சந்திக்க சென்றுவிட்டு வந்தேன். இருவருமே இன்றும் என்னுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

வேலை செய்வதில் எனது தாயாருக்கு நிகர் எனது தாயார்தான். சளைக்காமல் வேலை செய்வார். அவருக்கு மற்றவர்கள் வேலை செய்வதைப் பார்க்கவும் பிடிக்கும். சரியாக செய்யவில்லை என்றால் நாசுக்காக அதை சுட்டிக் காட்டி திருத்தவும் தெரியும். யாரையும் அதட்டி நான் பார்த்ததில்லை. இன்று கூட அவரால் சும்மா உட்கார முடியாது. காலை சுமார் 8 மணிக்கு கிளம்பினார் என்றால் இரவு 8 மணிக்குத்தான் அவரால் வீட்டிற்கு வந்து சேர முடியும். ஒரு முறை நாங்கள் ஒரு புதிய ஆஸ்பத்திரிரையை கட்டிக் கொண்டிருந்தோம். அந்த ஆஸ்பத்திரியில் எந்த வசதிகள் எங்கெங்கு இருக்கவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தோம். குறிப்பாக எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை போன்ற வசதிகளை மாடியில் வைத்திருந்தால் அது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். அப்பொழுது அங்கு வந்த எனது தாயார் என்னை சைகை செய்து அழைத்து வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த அறைக்கு சென்றவுடன் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கீழ் அறையிலேயே, அதாவது தரை தளத்திலேயே இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? நம்மிடம் தங்காதவர்களும் தேவை என்றால் கீழேயே தங்களுக்கு தேவையான விஷயங்களை செய்துகொண்டு செல்ல சௌகரியமாக இருக்கும் இல்லையா என்றார். இந்த சிறிய விஷயம் கூட அன்று எங்கள் மனதிற்கு தோன்றவில்லை. இன்று எங்கள் அப்போலோ மருத்துவமனை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இடம் இருந்தால் தரை தளத்திலேயே இந்த வசதிகளை செய்துள்ளோம். மக்கள் செளகரியமாக வந்து செல்லவும், எங்களிடம் தான் தங்கவேண்டும் என்று இல்லை. எங்களிடம் உள்ள தரமான விஷயங்களை அவர்கள் உபயோகித்துக் கொண்டால் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.

எனது தாயார் தெய்வ பக்தி கொண்டவர். ஒரு நாளும் தெய்வத்திற்கு பூஜை செய்யாமல் அவரால் இருக்க முடியாது. உடல் சோர்வாக இருந்தாலும் சரி, அன்று ஒரு ஐந்து நிமிடங்களாவது வீட்டில் உள்ள பூஜை அறைக்கு வந்து, அவருக்கு தெரிந்த ஸ்லோகத்தை சொல்லி இரண்டு பூக்களை கையால் போடாமல் போகமாட்டார். அதே போன்று சென்னையில் இருந்தால் செவ்வாய், வெள்ளி, இந்த இரு தினங்களிலும் எங்கள் அப்போலோ ஆஸ்பத்திரியில் உள்ள கோயிலில் எனது தாயாரை எல்லோரும் பார்க்கலாம். காலை, மாலை இரு வேளையும் வந்து இவர் பூ போட்டு ஆண்டவனை வணங்குவது தவறாமல் நடக்கும். மற்ற தினங்களில் மற்ற மருத்துவமனைக்கும் இவர் செல்வார். இவரது இந்த பக்தியினால் தான் நாங்கள் எல்லோரும் இன்றும் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

சமையலில் எனது தாயார் எக்ஸ்பர்ட். எங்களது குழந்தைப் பருவ புகைப் படங்களைப் பார்த்தாலே தெரியும். நாங்கள் எல்லோருமே குண்டாக இருப்போம். எங்களை எல்லாம் சரியான நேரத்திற்கு உணவளித்து, ஒரு முறைக்கு இருமுறை பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து ஊட்டுவார். தெலுங்கு சமையல் அனைத்தும் அவருக்கு அத்துப்படி. அதில் அவருக்கு தெரியாத சமையல் வகைகளே இல்லை என்று நான் நினைக்கிறேன். அதனால் மற்ற வகை சமையல் அவருக்கு தெரியாது என்று இல்லை. அவரது கைப் பக்குவம் எல்லா வகையான சமையலுக்கும் பொருந்தும். 

ஒருமுறை நான் கோபத்துடன் எனது தட்டில் வைக்கப்பட்ட உணவு வேண்டாம் என்றேன். அப்பொழுது எனது தாயார் என்ன சொன்னார் தெரியுமா? "உலகில் கோடான கோடி பேர் இந்த உணவு கூட இல்லை என்று வருத்தப்படுகிறார்கள். நீ ஏன் வேண்டாம் என்கிறாய்? உணவு தெய்வதிற்கு சமமானது. தட்டில் வைக்கப்படுவதற்கு முன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். வைத்தபின் சாப்பிட வேண்டும். எந்த ஒரு உணவுப் பண்டத்தையும் நாம் வீணாக கொட்டக் கூடாது'' இந்த எண்ணம் எனது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. இன்றும் நான் எந்த இடத்திற்கு சென்று சாப்பிட்டாலும் தேவைப்படும் அளவிற்கு மட்டுமே எடுத்துக்கொண்டு சாப்பிடுவேன்.

உணவை பற்றி சொல்லும் போது எனது தாயார், உணவு வகைகளை பற்றி இரண்டு புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்கள். அந்த புத்தகத்தின் பெயர் 'நாஸ்டால்ஜியா - குசின்' இரு தொகுதியாக வெளியாகி உள்ளது.

ஒரு முறை நான் உடல் நலமில்லாமல் இருந்தேன். மற்றவர்களைப் போல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல், என்னைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டு, சரியான நேரத்துக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து என்னை சரியாக்கிய தெய்வம் எனது தாயார்தான். ஆண்டவன் என் முன் தோன்றி ஒரு வரம் தருகிறேன் என்ன வேண்டும் என்று கேட்டால், நான் கேட்பது ஒன்றுதான். இதே பெற்றோரின் வயிற்றில் மீண்டும் பிறக்க வேண்டும் என்றே கேட்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com