தூக்கம் ஒரு சுகானுபவம்! நிம்மதியாக ஆழ்ந்து சுகமாக தூங்கினால் என்ன நடக்கும்?
By சினேகா | Published On : 12th March 2018 04:41 PM | Last Updated : 12th March 2018 04:52 PM | அ+அ அ- |

எந்தத் தகவல் உங்களுக்குத் தேவைப்பட்டாலும், அது உங்களிடமே இருந்து யோசித்து நினைவுப் படுத்திக் கொள்ளும்படியாக உங்கள் அறிவாற்றல் திறன்களை வலுப்படுத்த விரும்புகிறீர்களா? அது சாத்தியம்தான். உறக்கச் சுழற்றியின் மூலம் நீங்கள் புதிதாக கற்றுக் கொண்ட எந்த விஷயத்தையும் நினைவில் ஆழமாகப் பதித்துக் கொள்ள முடியும். தேவைப்படும் சமயத்தில் அந்த தகவல் உங்கள் நினைவின் மேற்பரப்புக்கு வந்து உங்களுக்குக் கைக் கொடுக்கும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். இதை யோக முறைப்படி யோகநித்ரா என்பார்கள்.
மனிதர்களுக்கு சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்கிறார்கள். ஆனால் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பது முக்கியமில்லை. எத்தகைய ஆழ்நிலையில் உறங்கினோம் என்பதுதான் முக்கியம். உடலில் உள்ள உள் உறுப்புகள் யாவும் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் விளங்க நல்ல உறக்கம் தேவை. நன்றாக உறங்கும்போது ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். அதுவே மன அழுத்தங்களை குறைக்கவல்ல ஹார்மோன் ஆகும்.
எட்டு மணி நேரம் தூங்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. அன்றாடம் உங்களுடைய வேலைகளை எப்படி பிரித்து செய்கிறீர்களோ, அது போல தூக்கத்தையும் பிரித்து உறங்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கனவுகளில்லா உறக்கம் என்பது சாத்தியமில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, போலவே ஒருவராலும் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்கவும் முடியாது. உறக்கத்தின் இடையே பல சுழற்சிகள் உண்டு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உறக்கம், விழிப்பு, மீண்டும் உறக்கம் என்னும் சுழற்சி முறையில்தான் உறக்கம் வரும். மேலும் மாதத்தில் ஒரு வாரம் ஆழ்ந்த உறக்கம் அடுத்த வாரம் மிதமான உறக்கம் மீண்டும் அடுத்த வாரம் ஆழ்ந்த உறக்கம் என்றும் சிலருக்கு ஏற்படும். இத்தகைய உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டால் உடல்நல பிரச்னைகள் வரலாம். எனவே இயற்கையான முறையில் நல்ல உறக்கம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானது.
இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உறக்கச் சுழற்சியின் எண்ணிக்கையைப் பொருத்துதான் ஒருவரது அன்றைய தினத்தின் நினைவுத் திறன் அமைகிறது என்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.
ஒரு பரீட்சைக்கு முன்னால் 90 நிமிடங்கள் சிலரை உறங்கச் சொன்னார்கள். மற்றவர்கள் உறங்காமல் நேரடியாக அந்த பரீட்சையை எதிர்கொண்டனர், நன்றாக உறங்கி விழித்த பின் பரீட்சையை வெகு துல்லியமான தரவுகளுடன் அவர்கள் விடைகள் அமைந்திருந்தன. உறங்காமல் நேரடியாக பரீட்சை எழுதியவர்கள் அவர்களை விட சற்று குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தனர். இதிலிருந்து உறக்கச் சுழற்சி முறையினால் மூளைக்குள் சில மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டு நினைவுத் திறன் மேம்படுகிறது என்ற முடிவுக்கு வந்தனர் ஆய்வாளர்கள்.
உறக்க சுழற்சி முறையினால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது, நினைவுத் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது உங்கள் மன அழுத்தங்களை குறைத்து அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும் செய்கிறது.