கெஞ்சும் பாதங்களின் வலி நீக்கிக் கொஞ்சும் பீட்ஸ் தெரபி!

இந்த மூன்று நிவாரண முறைகளும் கெஞ்சும் பாதங்களை எளிமையாகக் கொஞ்சிக் கெஞ்சி  சமாதானப்படுத்தும் முழுமையான நிவாரண முறைகளாகும். இந்த முறைகளைப் பின்பற்றுவதால் எதிர்மறை பக்க விளைவுகள் எதுவும் வருவதில்லை.
கெஞ்சும் பாதங்களின் வலி நீக்கிக் கொஞ்சும் பீட்ஸ் தெரபி!

அலுவலகத்தில் இருந்து அலுத்துக் கலைத்து போய் எப்போதடா வீட்டுக்குப் போய்ச் சேரலாம் என்று ஆவலோடு பேருந்து நிறுத்தம் வருகிறீர்கள், நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மழைக்கால ஈசல் போன்ற பெருங்கூட்டத்தை பார்த்ததும் வீட்டுக்குப் போகும் ஆவலையும் மீறிக் கொண்டு கால் மூட்டுகளும், பாதங்களும் ஐயோ! இத்தனை கூட்டமா உட்கார கொஞ்சம் இடம் கிடைத்தால் தேவலாம் என்று கெஞ்ச ஆரம்பித்து விடுகின்றன.

எப்போதாவாது உடனே சீட் கிடைத்து உட்காரப் போனாலும் கூட  பக்கத்திலேயே தள்ளாத வயதில் ஒரு பாட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் இரக்க சுபாவிகள் நாம் மனிதாபிமானத்தைப் பற்றியெல்லாம் யோசித்து ஐயோ பாவம்! என்று அவர்களை உட்கார வைத்து விட்டு நின்று கொண்டே வீடு வந்து சேர வேண்டியதாகி விடுகிறது. எப்படியோ பாதங்களின் கெஞ்சல் ஓய்வதே இல்லை .
 
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பின்னும் கூட பெரும்பாலும் என்ன செய்கிறோம் ?
 
அப்படியே கொஞ்ச நேரம் காலாற உட்காருவோம். பிறகு இருக்கவே இருக்கிறது டின்னர் தயாரித்தல், சாப்பிடுதல், பத்துப்பாத்திரம் தேய்த்துக் கழுவுதல், படுக்கைக்கு ஆயத்தமாகுதல் என்று அப்புறமும் நித்ய கடமைகள் காத்திருக்கின்றன. இதில் எங்கிருந்து பாதங்களின் கெஞ்சல் காதில் விழப் போகிறது. ஆனால் மனதிற்குத் தெரியும், அது அதன் பாட்டில் கால் வலிக்கிறது, கால் வலிக்கிறது கொஞ்சம் ஆயின்ட்மென்ட் தடவேன், கொஞ்சம் வெந்நீரில் காலை முக்கியெடுத்து மசாஜ் செய்து கொள்ளேன், என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கும், நாம் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நமது வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருப்போம். 

இதனால் என்னவாகிறது?!  

இந்நிலை நீடித்தால் ஒருநாள் ஆர்த்தரைட்டிஸில் கொண்டு போய் தள்ளும். 

இது தேவையா? அவ்வப்போது செய்ய வேண்டிய சின்ன சின்ன பயிற்சிகளை செய்தாலே போதும் கால் பாதங்கள் பெருமளவில் வலியிலிருந்து தப்பலாம்.
 
மூட்டு வலி மற்றும் பாதங்களின் சோர்வைப் போக்க வெறுமே காலாற நீட்டி நிமிர்ந்து படுத்து ஓய்வெடுத்தால் மட்டுமே போதாது. அதற்கென்று தனியான பிரத்யேக கவனிப்புகள் தேவைப்படுகின்றன. ஸ்பா போன்ற காஸ்ட்லியான மசாஜ் சென்ட்டர்களுக்குச் செல்லும் அவசியம் இன்றி எளிதாக அலுவலகம் போய் விட்டு வந்து வீட்டிலேயே நாம் செய்து கொள்ளக் கொள்ளக் கூடிய வகையில் மிக எளிமையான நிவாரணமுறைகள் மூன்றை இந்த இதழில் பார்ப்போம்.
 
1 .பாதங்களுக்கு டிசென்டிங் (decending ) முறையில்  மிதமான அழுத்தத்தில் மசாஜ்...


 
இரண்டு பாதங்களையும் தொடர்ந்து வளைத்து  நிமிர்த்தி வளைத்து நிமிர்த்தி இயங்க விடுங்கள், பிறகு மருத்துவர்கள் பரிந்துரைத்த தரமான பாத மசாஜ் கிரீம்களில் ஏதாவதொன்றை உபயோகித்து ஒவ்வொரு பாதமாக... பாத விளிம்புகளில் தொடங்கி பாதங்களின் கணுக்கால் வளைவுகள் வரை இதமாக கீழிருந்து மேலாக அழுத்தி அழுத்தி மசாஜ் செய்ய ஆரம்பியுங்கள், இந்த மசாஜ் பத்து நிமிடங்களுக்கு அழுத்தத்தை கூட்டி குறைத்து தொடரட்டும், பத்து நிமிடங்களின் முடிவில் மெதுவாக இதமாக எல்லா விரல்களையும் இழுத்து சொடக்கெடுத்து மசாஜின் இறுதிக் கட்டம் சுண்டு விரலில் வந்து முடியட்டும். இந்த மசாஜ் சோர்வான பாதங்களின் வலியைப் போக்கி நமது சுறு சுறுப்பை மீட்டெடுத்து  குழந்தைகளின் மாலைப்பொழுது விளையாட்டு நேரங்கள் வீணாகாமல் நம்மை அவர்களோடு உற்சாகமாகப் பங்கேற்க வழி செய்யும் .
 
ப்ரூ காப்பி விளம்பரம் ஒன்று பார்த்திருப்பீர்கள். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் கார் ரிப்பேர் ஆகி விட, நடந்தே  வீடு வந்து சேர்ந்தேன் என்று சொல்லி விட்டு மனைவி சோபாவில் அலுத்துப் போய் கால்களை மோடாவில் நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கண்களை மூடிக் கொள்வாள். அப்போது ப்ரூ அருந்திக் கொண்டிருக்கும் கணவன் அந்த காப்பியின் இதமான சுவையில் தன் மனைவியின் மீது காதல் பொங்கி வழிய அவளது பாதங்களை ஆதரவாக பிடித்து விடத் தொடங்குவான். பாதங்களை உள்ளார்ந்த அன்போடு இதமாகப் பிடித்து விடுவதும் மசாஜ் தானே! அதிலும் பாதங்களை பிடித்து விடுவது கணவன் என்கையில் மனைவிகளுக்கு வலி பஞ்சாய் பறந்து போகாதோ!

இப்படியான பொன்னான தருணங்களை மீட்டெடுக்க எந்தத் தம்பதிகளுக்கு தான் ஆசை இருக்காது?! ஆகவே கணவர்களே உங்களுக்கான அருமையான வாய்ப்பாக இந்த பாத மசாஜ் நேரங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
 
2. பீட்ஸ் தெரபி...


 
தனக்குத் தானே பாதங்களை மசாஜ் செய்து கொள்ளும் பொறுமை இல்லாதவர்கள் இரண்டாவது வகை நிவாரணமான இந்த பீட்ஸ் தெரபியை பயன்படுத்தி  தங்களது ஐயோ! வலி... வலி என்று கதறும் பாதங்களின் கெஞ்சல்களில் இருந்து விடுபடலாம். இதை ‘கோலிக்குண்டு தெரபி’ என்றும் கூட சொல்லிக் கொள்ளலாம். கை நிறைய கோலிக் குண்டுகளை அள்ளி உங்கள் ஷூக்களில் நிரப்புங்கள். கோலிக்குண்டுகள் நிரப்பிய ஷூக்களை போட்டுக் கொண்டு உங்கள் அறையில் சிறிது நேரம் நடக்க ஆரம்பியுங்கள். கோலிக்குண்டுகளின் சத்தம் முதலில் கொஞ்சம் நாராசமாய் இருந்தாலும் கூட சிறிது சிறிதாக நடக்க நடக்க பாதங்களில் குண்டுகள் அழுத்த அழுத்த வலி போயே போச்!, போயிந்தே, இட்ஸ் கான் என்று பறந்து போகும் போது மிக இதமாக உணர்வீர்கள். தம்பதிகள் என்றால் ஒருவர் மாற்றி ஒருவர் காப்பி விளம்பரத்தில் காண்பிப்பதைப் போல பாதங்களை மசாஜ் செய்து கொள்ளலாம் பேச்சிலர்கள் என்ன செய்வார்களாம். அவர்களுக்கு இது தொல்லையில்லாத எளிய முறையினாலான நிவாரணம் தான் சரியானதாக இருக்கும் இல்லையா?!
 
3 .ஹாட் அண்ட் கோல்ட் வாட்டர் தெரபி...


மேலே சொன்ன  இரண்டு நிவாரண முறைகளையும் பின்பற்ற நேரமில்லாதவர்கள் அல்லது சந்தர்ப்பம் வாய்க்காதவர்கள் இந்த மூன்றாவது முறையைப் பயன்படுத்தி வலி நீங்கப் பெறலாம். இது ரொம்ப சிம்பிள் மெத்தட் இரண்டு வாளிகளில் ஒன்றில் குளிர் நீர் ஒன்றில் இளஞ் சூடான நீர் என்று பாதங்கள் மூழ்கும் அளவில் நீரால் நிரப்புங்கள். இரண்டு வாளிகளிலும் பாதங்களை மாற்றி மாற்றி குறிப்பிட்ட இடைவெளியில் பாதங்களை அமிழ்த்தி வைத்துப் பிறகு எடுங்கள். இந்த முறையை பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்தார் போல செய்யுங்கள். இந்த நிவாரண முறையும் மிக எளிமையானது என்பதோடு வலியில் இருந்து விடுதலையும் அளிக்கக் கூடியது. இளஞ் சூடான நீரில் பாதங்களின் வலியைப் போக்க சிலர் உப்பை கூட கலப்பார்கள்.

இந்த மூன்று நிவாரண முறைகளும் கெஞ்சும் பாதங்களை எளிமையாகக் கொஞ்சிக் கெஞ்சி  சமாதானப்படுத்தும் முழுமையான நிவாரண முறைகளாகும். இந்த முறைகளைப் பின்பற்றுவதால் எதிர்மறை பக்க விளைவுகள் எதுவும் வருவதில்லை. பாதுகாப்பான பயனுள்ள முறைகள் என்பதால் தொடர்ந்தும் பின்பற்றலாம். இதன் மூலம் பல நாட்கள் சோர்வினாலும் அலுப்பினாலும் விட்டுப் போய் கிடப்பில் போட்டிருந்த குழந்தைகளுடனான மாலை விளையாட்டு நேரங்களை மீட்டெடுப்பதோடு, பெட் அனிமல் வளர்ப்பவர்கள் எனில் உங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஒரு அருமையான மாலை நேர வாக்கிங்கைப் பரிசாக்கி அவற்றையும் சந்தோசப் படுத்தி நாமும் வலி நீங்கி நமது மாலை நேரங்களை உற்சாகமாகக் கழிக்கலாம். சரிதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com