உடலில் வியர்வை வெளியேறுவது போன்று ரத்தம் வெளியேறும் அதிசயம்! தீர்வு காண முடியாது தவிக்கும் மருத்துவர்கள்!

சிறுமிக்கு எடுத்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நார்மலாகவே இருந்தன. பரிசோதனை முடிவுகளின் படி சிறுமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை ஆயினும் சிறுமியின் உடலில் ரத்தக் கசிவு ஏற்படுவது நிற்கவில்லை.
உடலில் வியர்வை வெளியேறுவது போன்று ரத்தம் வெளியேறும் அதிசயம்! தீர்வு காண முடியாது தவிக்கும் மருத்துவர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்த சிறுமி அர்ச்சனா, அங்கு கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றும் நாகராஜின் மகள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு மாத காலமாக இச்சிறுமியின் உடலில் கண், காது, மூக்கு, கை, கால் பகுதிகளில் இருந்து வியர்வை வெளியேறுவதைப் போன்று ரத்தக் கசிவு வெளியேறுவதைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து நாகராஜ் தன் மகள் அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு பெங்களூரு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று நெடுநாட்கள் சிகிச்சை அளித்தார். அப்போது சிறுமிக்கு எடுத்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நார்மலாகவே இருந்தன. பரிசோதனை முடிவுகளின் படி சிறுமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை ஆயினும் சிறுமியின் உடலில் ரத்தக் கசிவு ஏற்படுவது நிற்கவில்லை. இது மருத்துவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

நாகராஜ் இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் மேலாக தமது மகளின் சிகிச்சைக்காக செலவளித்தும் அதனால் எந்தவித பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிய முடியாமலும், மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப் பணமில்லாமலும் தவிக்கும் நாகராஜ், ‘நான் போகாத மருத்துவமனை இல்லை, போகாத கோயில் இல்லை, எங்கே போனாலும் நார்மல், நார்மல் என்று தான் சொல்கிறார்கள். இதற்கு மேல் என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்கள் மகளின் உடலில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்த வழி சொன்னால் அதுவே எங்களுக்குப் போதும். அதற்காக அவர்கள் எங்கே போகச் சொன்னாலும் செல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். நல்ல முறையில் சிகிச்சையளித்து என் மகளுக்கு குணமானால் அதுவே எனக்குப் போதும்’ என்கிறார் நாகராஜ்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரையின் பேரில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறுமி அர்ச்சனாவுக்கு பல்வேறு விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவளது உடலில் ஏற்படும் ரத்தக் கசிவுக்கான காரணத்தை மட்டும் எத்தனை முயன்றும் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை என கூறப்படுகிறது.

ஆங்கில சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போன்று சிறுமி அர்ச்சனாவின் உடலில் திடீர், திடீரென வெளியேறும் ரத்தக் கசிவு கண்டு பள்ளியில் அவளது சக மாணவர்கள் அவளை நெருங்கித் தோழமையுடன் பழக அச்சப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் வளரிளம்பருவத்தைச் சேர்ந்த அர்ச்சனா, இத்தனை இளம் வயதில் தனக்கிருக்கும் விந்தையான குறைபாட்டால் கடும் உளவியல் சிக்கலில் மாட்டிக் கொண்டு திணறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அர்ச்சனா அந்த நிலையை அடையும் முன் அரசும், சுகாதாரத்துறையும் அந்த மாணவியின் பிரச்னையில் சற்று அதிக கவனம் செலுத்தி அவரை குணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அர்ச்சனாவின் தந்தை நாகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மருத்துவத்துறைக்கு சவால் விடும் இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்பது சிறுமி அர்ச்சனாவுக்கான தீர்வு மட்டுமில்லை இதுபோன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் வராமல் இருப்பதற்கான தீர்வாகவும் இது அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com