உடல் சூடு அதிகம் உள்ளதா? இவைதான் காரணங்கள்!

காபி, டீ, சமோஸா, பீட்ஸா, ஃபலூடா, நூடூல்ஸ், பேல்பூரி, பானிபூரி, மசாலாபூரி, தஹிபூரி
உடல் சூடு அதிகம் உள்ளதா? இவைதான் காரணங்கள்!
Published on
Updated on
2 min read

என் வயது 23. நான் ஓரிடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்து எழுந்தவுடன், அதே இடத்தில் வேறொருவர் அமர்ந்தவுடன் 'என்ன இப்படி சுடுகிறது?' என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார். இது எதனால்? ஏன் என் உடம்பு சுடுகிறது? எப்படிக் குணப்படுத்துவது?

- ஹரீஷ், திருச்சி

உடலெங்கும் எரிச்சலை உணர்வது 'தாஹம்' என்றும்; அதிக வியர்வையுடன் அமைதியில்லாமல் ஏற்படும் உடலெரிச்சலை 'ஓஷ:' என்றும்; வியர்வை இல்லாமல், உடலில் ஓரிடத்தில் மட்டும் நெருப்பால் சுட்டது போன்ற எரிச்சலை உணர்வது 'ப்ளோஷ:' என்றும்; வாய், உதடுகள், மேலண்ணம் ஆகிய பகுதிகளில் மட்டும் ஏற்படும் எரிச்சலை 'தவ:' என்றும்; கண், காது, நாக்கு, தோல், மூக்கு, பிறப்புறுப்புகள், ஆசனவாய் ஆகிய அறிவுப்புலன்களிலும், செயல்புலன்களிலும் ஏற்படும் எரிச்சலை 'தவது:' என்றும்; உள்ளங்கை, உள்ளங்கால், தோள்பட்டை ஆகியவற்றில் ஏற்படும் எரிச்சலை 'விதாஹ:' என்றும், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் எரிச்சலை 'அந்தர்தாஹம்' என்றும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

கோபம், சோகம், பயம், ஆயாசம், பட்டினியிருத்தல், செரிமானத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் மிளகு, பட்டை, சோம்பு, கரம் மசாலா, பெருங்காயம், கடுகு, மிளகாய்ப்பொடி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுதல், உணவில் காரம், புளிப்பு, உப்புச்சுவை, ஊடுருவும் தன்மை, சூடான வீர்யமுடையவை, எளிதில் செரிப்பவை, நெஞ்செரிச்சல் ஏற்படுத்துபவை, நல்லெண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, மீன், ஆடு, செம்மறியாடு போன்ற மாமிச வகைகள், தயிர், மோர், சீஸ்(cheese), தயிர்த்தண்ணீர், வெகு நேரமான ஆறிய கஞ்சி, பீர் மற்றும் இதர மதுபான வகைகள், புளிப்பான பழங்கள் போன்றவற்றால், குடலில் சூடு அதிகரித்து, ரத்தத்தில் கலப்பதால், நீங்கள் உட்கார்ந்து எழுந்த இடம் சுடும்.

நல்லவேளையாக தற்காலத்தில் கிடைக்கும் காபி, டீ, சமோஸா, பீட்ஸா, ஃபலூடா, நூடூல்ஸ், பேல்பூரி, பானிபூரி, மசாலாபூரி, தஹிபூரி போன்ற சாட் அயிட்டம்ஸ் பற்றிக் கூறவில்லை என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. மேற்குறிப்பிட்டவை அனைத்தும் ஸூச்ருதஸம்ஹிதையில் காணப்படும் குறிப்புகளாகும். நீங்கள் நினைக்கும் பொருட்கள் அனைத்திலும் ஸூச்ருதர் எழுதிய காரணங்கள் உட்பொருளாகப் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து அவற்றை அறவே நீக்குவதே நலம். சுருக்கமாகச் சொன்னால், வாய்க்கு சுவையூட்டும் பல உணவுப் பொருட்களும் வயிற்றுக்குத் துரோகிகளாகவும், சாப்பிட்டால் வெறுப்பைத் தரும் கசப்பு மற்றும் துவர்ப்புச்சுவை கொண்ட மணத்தக்காளிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, பாகற்காய், வாழைப்பூ போன்றவை வயிற்றுக்கு நண்பர்களாகவும் இருப்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டிய நிர்பந்தமிருப்பதையே உங்கள் கேள்வி சுட்டிக் காட்டுகிறது.

காற்றில் ஈரப்பதம் குறைந்து சூடான காற்றடிக்கும் நாட்கள், சித்திரை }வைகாசி (கோடைப்பருவம்), ஆனி -ஆடி (காற்றடிப்பருவம்), ஐப்பசி-கார்த்திகை (சரத்ருது எனும் பின் மழைப்பருவம்), நடுப்பகல், நடுஇரவு, உணவின் செரிமானம் நடந்து கொண்டிருக்கும் நிலை ஆகியவற்றில் உடல் உட்புறச்சூடு அதிகரித்திருக்கும். அது போன்ற நிலைகளில் முன் குறிப்பிட்ட உணவு மற்றும் செய்கைகளால் உடற்சூடானது நிரந்தரமாகத் தங்கி, மனிதர்களைத் துன்புறுத்தும்.

உடற்சூட்டை உணர்த்துவதற்குக் காரணமாகிய சிறிய நெய்ப்புடன் சேரும் ஊடுருவும் தன்மை, சூடு, லேசான தன்மை ஆகியவற்றிற்கு எதிரான தன்மை கொண்ட சிறிய வறட்சியுடன் சேரும் மந்தமான தன்மை, குளிர்ச்சி மற்றும் செரிமானத்தில் கனமான தன்மை கொண்ட உணவு, செயல் மற்றும் மருந்துகளால் நீங்கள் உடலின் வெப்ப நிலையை மாற்றி விடலாம். 

நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் கொண்ட இனிப்புச்சுவை, வாயு மற்றும் ஆகாயத்தின் வழியாக உருவாகும் கசப்புச்சுவை, வாயு மற்றும் நிலத்தின் ஏற்றம் வழி உருவாகும் துவர்ப்புச்சுவையினால் தயாரிக்கப்பட்ட உணவும், மருந்துமே உங்களுக்கு அனுகூலமானவை. 

இவை சூட்டை அதிகரிக்கும் குணங்களை அடக்குமே தவிர, உடலிலிருந்து வெளியேற்றுவதில்லை. அதனால் அடங்கும் தன்மை கொண்ட குணங்கள் சிறிய காரணங்களால் உடலில் மறுபடியும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருப்பதால், அவற்றை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, நீர்ப்பேதியாக வெளியேற்றிவிட்டால், நீங்கள் உட்கார்ந்து எழும் சோஃபா, நாற்காலி ஆகிய இடங்கள் சுடாது. பேதி மருந்தைச் சாப்பிடுவதற்கான பல மருந்துகள் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருந்தாலும், தனி மனிதனுடைய உடல் தன்மை, குடல் அமைப்பு, பசியின் நிலை, பருவகாலம் ஆகியவற்றை மனதிற்கொண்டே செய்ய வேண்டிய சிகிச்சை என்பதால், அதை இங்கு குறிப்பிடவில்லை.

- பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com