வெற்றியின் சிகரங்களை அடைய இது உதவும்!

இந்தத் தொடரில் இது வரை பார்த்ததில் ஒன்று தெளிவாக தெரிகிறது. நம் ஆற்றல், சிந்தனைகள், நோக்கங்கள் இவற்றின் விளைவுகள் தான் நம் செயல்களை நிர்ணயிக்கின்றது.
வெற்றியின் சிகரங்களை அடைய இது உதவும்!

23 G பாகம் 6: ‘மாற்றுப் பாதை’

மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?  


இந்தத் தொடரில் இது வரை பார்த்ததில் ஒன்று தெளிவாக தெரிகிறது. நம் ஆற்றல், சிந்தனைகள், நோக்கங்கள் இவற்றின் விளைவுகள் தான் நம் செயல்களை நிர்ணயிக்கின்றது. இந்த அமைப்பே நம் மனப்போக்காகும். மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? என்ற கேள்விக்கு நம் மனப்பான்மையை நம்மால் மாற்றி அமைக்க முடியும் என்பது தான் நிச்சயம். மாற்றி அமைப்பதற்கு முதலில் இந்த அமைப்பு உருவாகும் வகைகளை அறிந்து கொள்வது அவசியம்.

மற்றவர்களின் சொல்லுக்கு அஞ்சி செயல்பட்டு வருகையில், அல்ல நமக்கே சந்தேகங்கள் சூழ்ந்து கொண்ட சூழலில் அவற்றை நீக்க மற்றவரிடம் உதவி கேட்பதற்கு பயம் கவ்விக் கொண்டு விடும் தருணத்தில், அல்ல முன்னால் நிகழ்த்த முயற்சித்துத் தோல்வி பெற்ற அனுபவங்கள் நம் தன்னம்பிக்கையை பாதிக்கையில், இவை நம் மனப்பான்மையைக் குறுக்கி, செயல்களை முன்னேற்றத்தின் பாதையிலிருந்து விலக்கி, நிலை மாறாமல் காத்துக் கொள்ளும் பாதையில் தள்ளி விட்டு விடுகின்றன என்று சென்ற வாரங்களில் பார்த்தோம். இந்த மூன்றினால் நம் மனப்போக்கு மாறாமல், முன்னேறாமல் சலித்துப் போய் விடுகிறது.

இப்பொழுது, நம் மனப்பான்மை எவ்வாறு அமைந்துள்ளது, அது நம் செயல்களை எப்படி நிர்ணயிக்கின்றது என்று நாம் தானாகவே எப்படிக் கண்டு கொள்ள முடியும், எப்படி மாற்ற முடியும் என்பதைப் பார்ப்போம்.

மைன்ட் வாய்ஸ்!

நம்முடைய சிந்தனையும், உணர்வும் ஒன்றுக்கு ஒன்று இணைந்து செயல்படும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் உள்மனது (மைன்ட் வாய்ஸ்) எதைச் சொல்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். நம் மைன்ட் வாய்ஸ், திரும்பத் திரும்ப ‘உன்னால் முடியும்?’ என்று சொன்னால் தான் தைரியத்துடன் செயலை எடுத்துச் செய்வோம்.

அதுவே, ‘தோல்வி பெற்றால், உன் பெயர் கெட்டு விடாதா?’ என்று நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பினால், அது சஞ்சலத்துடன் சந்தேகத்தை எழுப்பிவிடும். சந்தேகம் பிறந்ததும் பயம் ஒட்டிக் கொள்ளும். உடனடியாக, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். ஏதாவது புதியதாக, இல்லை சற்று கடுமையான செயலாக இருந்தால், செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்டுக் கொள்வோம். அதே சமயம், வாய்ப்பு நல்லதாக இருந்தாலும் உறுதி இல்லை என்றால், ஒரு வேளைத் தோல்வி பெற்று விட்டால் அது நம் சுயமதிப்பீட்டை பாதிக்குமோ என்று அஞ்சி நாம் முயற்சிக்கத் தயங்குவோம். இவ்வாறு அணுகுவதைத் தான் மாற்றமில்லாத மனப்பான்மை எனக் கூறப்படுகிறது. தன்னால் முடிந்ததையே செய்து, பெரிய வெற்றி முன்னேற்றம் எதுவும் பெறாமல் தற்காப்பு நிலைமையிலேயே தங்கி விடுவோம்.

இதற்குக் காரணி, நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பும் சந்தேகத்திற்கு தலை வணங்கி விடுவதே. அதன் விளைவாகச் செயலற்று விடுகிறோம். செய்வதற்கு முன் ‘முடியுமா?’ என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் எழும். இதைச் சுதாரிக்க, ‘எவ்வாறு செய்தால் முடியும்?’ என்ற கேள்வி கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. மாறாக, தெளிவு கொள்ளாமல், முடியுமோ முடியாதோ என ஆரம்பித்து, எந்தவிதமான வழிகளையும் தீட்டாமல் சஞ்சலத்தை உட்கொள்வதால் நம்பிக்கை இழந்து, ‘முடியாது’ என்றே முடிவு செய்து விட்டாலோ, இல்லை மற்றவர்கள் கண்முன் நம் பலவீனம் தெரியக் கூடாது என்பதாலோ செயலில் இறங்காமல் இருப்போம். இவ்விதம் நம் மைன்ட் வாய்ஸ் பல கேள்விகளை, நிகழக் கூடிய விளைவுகளை வழங்கும், அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து செயல் படுவதும், செயலற்ற நிலையில் நின்று விடுவதும் நம்மிடம்தான் இருக்கிறது.

இதற்கு இன்னொரு காரணி இருக்கக் கூடும். அதாவது முயற்சி செய்து கொண்டு இருப்போம். ஆனால் வெற்றி பெறாமல் போகலாம். ஏன்? நாம் காரியத்தை துவங்கும் பொழுதோ, அல்ல செயல்படும் பொழுதோ நம் சிந்தனைகள் அனைத்தும் ‘என்ன பயன்? எப்படியும் தோல்வியில் தான் போய் முடியும்’ என்ற மைன்ட் வாய்ஸ் ரீங்காரமாகப் போய்க்கொண்டு இருக்கும். அப்போது கவனம் சரியும், செய்வதில் ஈடுபாடு குறைவாக இருக்கும். நிலமை இப்படி இருக்கையில், வெற்றி அடைவது மிகக் கடினம். இது போலவே நிகழ்வதினால் உள்ளுக்குள் நம்மால் முடியாது என்று தோன்றிவிடும். திரும்பத் திரும்ப இப்படி நிகழ்வதால் வேறு வழிகளைப் பற்றிய சிந்தனை வராமல் போகும். இதுவும் மாற்றாத மனப்பான்மையின் ஒரு விதமாகும்.

வெற்றிகளை விடத் தோல்வி பெற்ற சந்தர்ப்பங்கள்தான் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டால், நினைவூட்டிப் பார்க்கையில் அனுபவங்கள் எல்லாம் கசப்பானதாகத் தோன்றக் கூடும். எதை நினைத்துப் பார்க்கையிலும் தோல்விகளாகத் தெரிய, மேற்கொண்டு அடுத்ததைச் செய்ய மனம் ஒத்துழைப்பு தராது. நாமும் தோல்வியைத் தவிர்ப்பது எப்படி என்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்தாமல் இருந்து விடுவோம். நம் வரலாற்றை மாற்றி எழுதாமல் விட்டு விடுவோம்.

மாற்றக் கூடியது என்று இருப்பவர்கள் இது வரை விவரித்த விதத்திலிருந்து நேர் எதிராகச் செயல்படுவார்கள். இவர்கள், தங்கள் மைன்ட் வாய்ஸை கேள்விகள் எழுப்ப விடுவார்கள். பதில்களைத் தேடுவார்கள், செயல் செய்வார்கள். மேலும் ‘நான் முயற்சிக்கப் போகிறேன்’, என்ற உறுதி மொழியுடன் ஆரம்பித்துச் செய்வார்கள். எதை செய்யப் போகிறார்களோ, அதை, வெளிப்படையாக ‘எனக்குத் தெரிந்து கொள்ள ஆசை’ என அறிவிப்பார்கள். இப்படிச் செய்வதால் மற்றவர்களுக்கும் இவர்களின் ஆர்வம் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பமாகும். செய்வதற்கான வழிமுறைகள் ‘தேடப் போகிறேன்’ என்று ஆரம்பித்து முடிப்பதற்கு ஒரு காலக்கோடு போட்டுக் கொண்டு, செய்து முடிப்பார்கள். காலக்கோடு, ஒரு வழிகாட்டியாகவும் செயல்களை முடிப்பதற்குக் கருவியாகவும் ஆகும்.

நாம் செய்வதை மற்றவர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டாலே, உடனே இதைச் செய்வதற்கு நம் மூளை அதற்கு ஏற்ற ரசாயனப் பொருளைத் தயாரித்துச் சுரக்க, பயம், சந்தேகங்கள் அல்லாமல் தைரியம் வரும். செயல் செய்ய இறங்குவோம். ஒவ்வொரு முறையும் இப்படி வெற்றிக்குச் சாதகமாக செயலை மாற்றி அமைத்தால், நம் மைன்ட் வாய்ஸை மாற்றிக் கொள்ள முடியும்.

அப்படியே தோல்விகள் நிகழ்ந்தாலும், ‘ஏன் தோல்வி பெற்றோம்?’ என ஆராய்ந்து, ‘தோல்வி பெற்று விட்டோம்’ என்பதற்குப் பதிலாக ‘இந்தத் தவறு செய்தோம் அதனால் வெற்றி பெற முடியவில்லை’ என்பதையே ஆழமாக மனதில் போட்டுக் கொள்வார்கள். இதன் விளைவாக, மறுமுறை முயற்சிக்கும் பொழுது, தோல்வி பெற்று விடுவோமோ என்பதற்குப் பதில் தவறு செய்யக் கூடாது என்று கவனம் செலுத்த மைன்ட் வாய்ஸ் உதவும். அதன் விளைவாக, செயலும் மாறுபடும். செய்வதை மேலும் நன்றாகச் செய்ய, விளைவுகள் வேறு விதமாக இருக்கும்.

வளைந்து கொடுக்கும் மூளை மாற்ற உதவும்!

மாற்றம் செய்வது எந்த வயதிலும் எந்த நிலையிலும் முடியும். நம் மூளை நாம் செயல்படுவதின்படி தன்னை அமைத்துக் கொள்ளும். நம் மூளை வளைந்து அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. அதனால் தான் ஒன்றை விட்டு வேறு ஒன்றைச் செய்யப் பழக்கப் படுத்திக் கொள்ள முடிகிறது. ஆராய்ச்சிகளும் இதைத்தான் சொல்கின்றன.

மாறுவதற்கு வழி அமைத்தால், நம் மூளை அதற்கு ஏற்றாற் போல் இணங்கி அப்படியே நாம் நினைப்பதைச் செய்து தரும். இதுதான் மனப்பான்மையின் மகிமை: மைன்ட் வாய்ஸ் மாற மாற, செயல்களும் விளைவுகளும் கூடவே மாறும். மாற்றத்தைக் கொண்டு வருவது நம்மிடையேதான் இருக்கிறது. இதற்கு, நம் மைன்ட் வாய்ஸ் பயன்படும். நம் உள் மனது சொல்வது போல எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.

மைன்ட் வாய்ஸ் நம் எண்ணத்தைப் பதிவு செய்யும். பல வகையில் திரும்பத் திரும்பக் கேள்விகள் எழுப்பும். அதற்கு நாம் தரும் பதிலைப் பதிவு செய்து கொண்டு, நம் மூளை இந்த எண்ணத்திற்கு இதுதான் பதில் என உறுதி செய்துவிடும். அதிலிருந்து ஒவ்வொரு முறையும் அந்தச் சூழல் எழ, நம் மூளை அதே பதிலை உணரும் போது, நம்முடைய செயல்பாடும் அதற்கு ஏற்றவாறு இருக்கும். உதாரணத்திற்கு, ஒன்றைச் செய்ய ஆரம்பிக்கும் போது, இதற்கு முன் அதைச் செய்த நினைவலைகள் வரும். அப்போது, செய்யும் போது நமக்கு கசப்பான அனுபவமாக இருந்திருந்தால் இப்போது அதைச் செய்ய தயங்குவோம். இந்தத் தயக்கமே தோல்வியின் அஸ்திவாரமாக அமைந்து விடலாம்.

மைன்ட் வாய்ஸ் சரியாக மட்டும் இருந்தால் போதாது. நம்மால், மாற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருப்பது மிக அவசியமாகும்.

மன உறுதி

மன உறுதி வளர்த்துக் கொள்ளப் பல வழிமுறைகள் உள்ளன. மிகச் சுலபமான வழி: இது வரை செய்யாதது  ஒன்றை எடுத்துக் கொண்டு செய்து பார்க்கலாம். முயற்சிப்பது சற்று சிறியதாக இருக்க வேண்டும். மாணவர்களாக இருந்தால், இது பாடதிடங்களாக இல்லாமல் இருந்தால் நன்கு.

ஒன்றே ஒன்று எடுத்துச் செய்ய முயற்சிக்கவும். எடுத்ததைச் செய்ததும், ‘முடிக்க முடிந்தது’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும். நாம் நமக்கே சொல்வதினால் மன உறுதியை வளர்க்க ஓர் அரிய வாய்ப்பாகும். நாம் செய்ததையும் அதன் முடிவையும் நாமே அடையாளம் கண்டு கொள்வதினால், நம்மால் முடிகிறது என்றதை ஊர்ஜிதம் செய்து கொள்கிறோம். தோல்வி பெற்றால், ஏன் தோல்வி அடைந்தோம் என ஆராய்ந்து, மாற்றிச் செய்து, வெற்றி பெற்றதும் ‘தோல்வியை வெற்றியாக மாற்ற நம்மால் முடியும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டும். இதே போல் மேலும் மேலும் செய்து வந்தால், நம்முடைய விடாமுயற்சியை உணருவோம் அதிலிருந்து, மன உறுதி பெறுவோம்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தக் கருத்தின் மீது ஆராய்ச்சி செய்தார்கள். அதில் முக்கியமாகக் கண்டது, நம் திறமையை விடக் கொஞ்சம் அதிகமாக, ஆனால் நம்மால் செய்யக் கூடிய அளவிற்கு வேலை செய்தால், உற்சாகத்துடன் செயல்படுவோம் என்பதைக் காட்டினார்கள். அதுவே நம் திறமைக்கு மிகவும் மீறி இருந்தால் பதற்றம் தான் விளைவாகும். இத்துடன் தோல்வி கண்டதால், முயற்சிப்பதில் பயன் இல்லை என்று தோன்றி விடுவதால், செயலற்ற நிலையில் இருந்து விடுவோம். அதனால்தான் நாம் பூர்ணமாக ஒன்றை முடித்தபின், அடுத்ததை எடுக்கும் போது, முன்னதாக செய்ததை விட ஓர் சிறிய அளவிற்கு உயர்த்திச் செய்ய முயற்சிக்க வேண்டும். சிறிய அளவென்பதால் நம்மால் தன்னை அந்த அளவிற்கு உயர்த்திக் கொள்ள முடியும். இப்படி, ஒவ்வொரு முறையும் சிறிது அளவு உயர்த்திக் கொள்வதில், வெற்றியையும் காண்போம், அதே நேரத்தில் திறமையும் உயரும்!

அதன் இன்னொரு பெயர், விடாமுயற்சி! இதையும், மன உறுதியும், நம் குணாதிசயங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இவை, வெற்றியின் சிகரங்களை அடைய உதவும்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com