இவர்களின் வெற்றிக்கு அஸ்திவாரம் என்ன?

தெளிவாகப் பரிசோதித்து, கூர்மையாகவும், முழுமையாகவும் ஆராய்ந்தால், பிடிப்பு கூடும்!
இவர்களின் வெற்றிக்கு அஸ்திவாரம் என்ன?
Published on
Updated on
3 min read

மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?

பாகம் 5: வளர்ச்சிக்குத் தெளிவே உறுதுணை!

தெளிவாகப் பரிசோதித்து, கூர்மையாகவும், முழுமையாகவும் ஆராய்ந்தால், பிடிப்பு கூடும்! அத்துடன், செய்வதை ரசித்துச் செய்தால் வளர்ச்சி தானாக ஏற்படும். இலக்கை அடைவது மிக எளிதானதாகும்!

சென்ற வாரம் இப்படிப்பட்ட அகண்ட பார்வை உள்ளவர்களை மையமாக வைத்தே விவரித்து வந்தோம். இப்படி இருப்பவர்கள் ‘பரந்த மனப்பான்மை’ உள்ளவர்களாக இருப்பது நிதர்சனம். இப்பொழுது, இவர்களைப் பற்றிய விவரங்களைப் பேசலாம்.

நாம் நடந்து கொள்ளும் முறை நம் உணர்வுகளையும் சிந்தனையையும் நிர்ணயிக்கும். இவை ஒட்டுமொத்தமாக நம் மனப்பான்மையாகும். அப்படியானால் மனப்பான்மை மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? இந்தத் தொடரின் முதல் பாகத்தில் மாற்றமில்லாமல் இருப்பது எதனால் என்பதைப் பார்த்துவிட்டு, கேள்வியின் இரண்டாவது  புறமான மனப்பான்மை மாற்றிக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி இப்பொழுது பார்த்து வருகிறோம்.

தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாதவர்கள் அடுத்தவர்கள் சொல்லுக்கு ஏங்கி, பிறர் தரும் சபாஷில் ஊக்கம் பெற்று, எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள அஞ்சி, நாட்களைக் கடத்துவார்கள். மன உறுதி மிக மங்கியதாக இருக்கும்.

உதாரணத்துக்கு : சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் பொழுது: ‘நாம் கீழே விழக் கூடாது, அடிபடாமல் கற்றுக் கொள்வேன்’ மனப்பான்மை மாற்றமில்லாதது என எண்ணுவோரின் கையாளும் விதமாக இருக்கும். ஏதாவது செய்யும்போது சாவதானமாக இருப்பது நல்லது தான். எல்லாவற்றுக்கும் சாவதானம் கொள்வதால் சவால்களைப் புறக்கணிப்பார்கள். முன்னேற்றத்தைப் பாதிக்கும். இப்படி அவர்கள் பலவிதமான ‘கவசம்’ அணிவதைப் பற்றியும் பேசி வந்தோம். இவர்கள், மற்றவர்கள் சொற்படி செயல் படுவார்கள்.

அதற்கு மாறாக, அதே மாதிரியான சூழலில் (சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் பொழுது), ‘அடி படலாம்’, ‘விழக்கூடும்’, என்று ஒப்புக் கொண்டு, கற்க வேண்டியதை எவ்வாறு மேம்படுத்துவது ‘எப்படி என்று பார்க்கலாம்?’ என்று அணுகுவார்கள். இதைத்தான் பறந்த மனப்பான்மை என்கிறோம். எந்த ஒரு தடையின்றி, எதிர்பார்ப்புகளை முன் வைக்காமல் இருப்பவர்களாக  இயங்குவார்கள்.

மனப்பான்மை மாற்றி அமைக்க முடியும் என்பவரே இப்படிச் செய்வார்கள். மனப்பான்மை மாற்றி அமைக்க முடியும் என்ற கண்ணோட்டம் உள்ளவர்கள் எப்போதும் எதையும் செய்யச்செய்ய, சபாஷைவிட முயற்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள்.

எதைச் செய்தாலும், மிகைப்படுத்தி செய்வார்கள்!

தன் தகுதி நிலையை உயர்த்தல்!

பறந்த மனப்பான்மை உள்ளவர்கள் வெளி மனிதர்களுடன் போட்டி இட மாட்டார்கள். இவர்களுக்கு, போட்டியாளர், தனக்குத் தானே வகித்துக் கொள்ளும் தகுதியே! ஒவ்வொரு முறையும் எதைச் செய்கிறார்களோ அதனுடைய தரத்தை ஓர் படி அளவிற்கு உயர்த்திக் கொள்ள முயற்சிப்பார்கள். ஒரு விதத்தில் அது அவர்களின் திறன்களுக்கு ஏற்றவாறே இருக்கும்.

இதிலிருந்து தெளிவாக தன்னைப் பற்றிய புரிதல் அமைவது கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது இதுவெல்லாம் செய்ய முடியும், இதுவோ செய்ய முடியாது எனத் தெரிந்து செயல்படுவது மிக முக்கியமான பங்கு. இன்னொரு விதத்தில் பார்க்கையில், இவர்கள் தங்களைப் பற்றி எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருப்பதால் இந்த அறிதல் ஏற்படுகிறது என்றும் தெரிகிறது. மேலும், ஏற்றவாறு செயல் படுகிறார்கள் என்பதிலிருந்து அவர்களுள் உள்ள பக்குவத்தை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

நம்மை நாமே அறிந்து கொண்டால், மேம்படுத்திக் கொள்ள வழிகளை அமைத்துக் கொள்வோம். அதனால் தான் மற்றவர்களுடன் போட்டியிட வேண்டும் என்றே இல்லை. மாறாக ஒவ்வொரு முறையும் செய்ததைவிட மேம்படுத்திக் கையாளுவதாலும், செய்வதில் முழு கவனத்தை செலுத்துவதாலும் முடிவு நன்றாக அமையும். அவர்கள் செய்யும் வகைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், முடிப்பதற்கு அல்ல.

இவர்களுக்கு விளைவுகள் முக்கியமற்றவை. அவர்களைப் பொருத்தவரை, கொடுத்த வேலையை அவசரமாகச் செய்வதிலோ, இல்லை முடித்து வெற்றி அறிவிப்பதோ இவர்களின் குறிக்கோள் ஆகாது. இவர்கள் செய்வதில், செய்யும் பொழுது அதில் ஏதோ ஒன்று தெரியவில்லையோ இல்லை புரியவில்லையோ என்றால், அவற்றை கற்றுக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள். தோல்விகளை, இடையூறுகளை ஒரு புதிராகக் கருதிச் செய்வதால் பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அதனால் பல விஷயங்களைப் பற்றி தெரிந்திருக்கும்.

இதுதான் அவர்கள் தரத்தை அதிகரித்து வைப்பதற்கு ஓர் காரணியாகும். அதாவது ஒன்று செய்கையில் அதன் பல விவரங்களைப் புரிந்து கொள்ள வேண்டியதாகலாம். ‘எதற்காக இவையெல்லாம்?’ என்று இல்லாமல் இதையும் அறிந்து கொள்ள வாய்ப்பு என்று கருதி கற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் இவர்களைப் பொறுத்தவரை ஒளவையார் சொன்ன 'கல்லாதது உலகளவு' என்ற மனப்பான்மையினால்.

இதன் இன்னொரு பிரதிபலிப்பு, மற்றவரின் பாராட்டுக்கு மட்டும் இணங்கிச் செய்யமாட்டார்கள். கடுமையாக உழைத்து, உதவி நாடி, முன்-பின் இருக்கும் தவற்றைத் திருத்தி, நிவர்த்தி செய்து வேலையை முடிப்பார்கள். தனக்குத் தானே சபாஷ் சொல்லிக் கொள்வார்கள். அதாவது அவர்களாகவே தங்களுக்கு தாமே தரத்தை வகிப்பதுண்டு. இவ்வாறு வகித்துக் கொண்ட தரத்தை அடைந்து விட்டார்கள் என்றால் அதை ஆமோதித்துக் கொள்வதில் எந்த வித ஆட்சேபனைப் பட மாட்டார்கள். இப்படிச் செய்வதில் எந்தவிதமான கர்வப் படுவதும் அல்ல.

எடுத்ததை முடிக்க முடியும் என்றே அணுகுவார்கள். இங்குப் போட்டிக்கோ, பொறாமைக்கோ, தன்னலத்துக்கோ, கசப்புக்கோ துளியும் இடம் இருப்பதில்லை. இவர்களின் யுக்தி, இதற்கு முன் தாம் செய்ததை விட ஒரு படி மேம் படுத்தப் பார்ப்பார்கள்.

இவர்களின் வெற்றிக்கு அஸ்திவாரம் இன்னொன்று உண்டு. தாங்கள் செய்வதை மற்றவருடன் ஒப்பிட மாட்டார்கள். அவர்களின் சூழ்நிலையை அறிந்து கொள்வதால் இப்படி அணுகுவது சாத்தியமாகிறது. இதன் விளைவாக, யதார்த்த கணிப்பும், தன் நம்பிக்கையும் கை கொடுக்கிறது.

தம் குறைபாடுகளை புரிந்து சரி செய்வதால் இப்படி இயங்க முடிகிறது! இதனாலேயே, இவர்களிடம் கர்வம், அகம்பாவம் துளியும் இருக்காது. தோல்வியைச் சந்தித்தால் 'எதை மிஸ் பண்ணோம்?' என்று தேடுவார்கள். இப்படி வளைந்து கொடுக்கும் தன்மையினால் பாதுகாப்பின்மை இருக்காது. இதன் முக்கியமான விளைவு, மற்றவர்களின் செயல்பாட்டை புகழ்வார்கள். தாராளமாகச் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதும் சேரும்.

கவசம் காப்பாற்றவோ, புகழுக்காகவோ ஏக்கமோ இருக்காது. சமநிலையில் இருப்பதால் மற்றவரும் சுலபமாக இவர்களிடம் சந்தேகங்கள் கேட்பார்கள். இவ்வாறு, சுதந்திர மனப்பான்மை உள்ளவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தாராளமாக அவர்களின் வகுப்புத் தோழர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். உதாரணமாக, தனக்கு எழும் சந்தேகங்களை வகுப்புத் தோழர், டீச்சர்களிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வார்கள். தேவையானால், இன்டர்நெட், நூலகம் போன்ற இடங்களில் தேடி தெளிவு படுத்துவார்கள். கேட்பதிலும் சரி, தெரிந்து கொள்வதிலும் சரி, ஏற்றத்-தாழ்வு என எண்ணம் எந்நாளும் இருப்பதில்லை. சுதந்திர மனப்பான்மையே வெற்றியைத் தருகின்றது!

இதனாலேயே, பல சமயங்களில் இவர்கள் வரம்புகளுக்கு அப்பால் செயல் படுவார்கள்! மதிப்பெண் தான் என் பிரதிபலிப்பு என்று கருதவே மாட்டார்கள். தெரியல-புரியல என்றால் கேட்டு-அறிவது தான் இவர்களின் அட்டை, அடையாளம். புது இடம் செல்ல வேண்டுமானால், இவர்களே சரியான ஜோடி!

நாம் கவனித்தோமானால், இவர்கள் வாழ்க்கையில், வெற்றி கூடிக் கொண்டே இருக்கும். அதைச் சத்தம் போடாமல், வெளிப் படுத்தாமல், தன் புகழை பாடாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

பயமில்லாமல், தன்நம்பிக்கை நிறைந்தவராக, வாய்ப்புகளைப் பூர்ணமாக உபயோகித்து, தன்னை வளர்த்துக் கொள்ள எந்த விதத்தில் செயல்படுவது என்பதைப் அடுத்த வாரங்களில் பார்வையிடலாம்.

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com