Enable Javscript for better performance
காலையில் எழும்போது கை மரத்துப் போய் விடுகிறதா? இதோ தீர்வு- Dinamani

சுடச்சுட

  
  neck_pain

  தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தே உறங்கிப் பழகியதால், காலையில் எழும்போது கை மரத்துப் போய் விடுகிறது. தலையணை வைத்துப் படுக்கும் பழக்கமில்லாமல் போனதால், அதை வைத்துப் படுத்தால், தூக்கம் வருவதில்லை. தரையில் துண்டு விரித்தோ, பாயைப் போட்டோ படுத்தால் நிம்மதியாக உறங்குகிறேன். இது நல்லதா? கெட்டதா? குஷன் மெத்தையில் படுக்க விருப்பமில்லை.
   -ஆதித்யன், செஞ்சி.

  தலையணையின்றிப் படுத்தல் நல்லதல்ல; தலையணையின் உயரம் பற்றிய பதார்த்த குண சிந்தாமணியின் குறிப்பும் தங்களுக்கு உதவிடக் கூடும்: 'கழுத்திற்கும் தோளிற்குங் கண்ட உயர்வாய், கழுத்து நீளத்தில் வைத்த மட்டாய் இழைத்த நறும் பஞ்சின் தலையணைக்கு' என்கிறது. இடது அல்லது வலது பக்கமாக ஒருக்களித்துப் படுக்கும்போது தளத்திற்கும் தலைக்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்பும்படி, கழுத்திற்கும் தோளின் வெளிப்புறத்திற்கும் இடையே உள்ள உயரமுள்ளதாய் நீளமுள்ளதாய் அது அமைதல் நலம். விரிந்த தோளுள்ளவர்களுக்கு அதிக உயரம் தேவை. அவரவருக்குத் தக்க உயரமுள்ள தலையணையை அமைத்துக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கையை முட்டுக்கொடுத்தே பழகிவிட்டதால், இந்த அறிவுரை இனி பயனளிக்குமா? எனத் தெரியவில்லை.

  கைகளை முழங்கைப் பகுதியில் மடக்கி தலை வைத்து படுப்பவர்களை விட, நீட்டி அதன் மீது தலை வைத்துப் படுப்பவர்களுக்கு பின் விளைவுகள் சற்று குறைவாகவே ஏற்படும். மணிக்கட்டு, முழங்கைப் பகுதி, தோள்பட்டை ஆகிய கைகளின் பகுதிகள் மர்ம ஸ்தானங்கள் எனப்படும் முக்கிய இடங்களாகும். அவற்றுக்குத் தொல்லை கொடுக்கும் விதத்தில் வைத்துக்கொண்டு செயல்பட்டால், நீங்கள் குறிப்பிடும் மரத்துப்போவதும், குடைச்சலும், செயலிழப்பதுமாகிய நிலைக்கு கைகள் பாதிக்கப்படலாம். கழுத்தின் தண்டுவடப் பகுதியிலிருந்து தோள்பட்டை வழியாக கைகளுக்குள் செல்லும் நரம்புகள், ரத்தக்குழாய்கள், தசை நார்கள், கைகளிலுள்ள எலும்புகள் போன்றவை, முட்டுக்கொடுக்கும் நிலையில், கடும் அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றன. இரவில் திருமண மண்டபத்தில், ரயில் பயணத்தில் தலையணை கிடைக்காமல் பலரும் தான் கொண்டு வந்துள்ள துணிப்பையை அது மேடுபள்ளமாக இருந்தாலும் வைத்துக்கொண்டு உறங்கிவிட்டு, மறுநாள் காலை தலையைத் திருப்ப முடியாமல் கடும் கழுத்து வலியால் அவதிப்படுவதைக் காண முடிகிறது. வலி நிவாரணக் களிம்புகளைப் பூசிக் கொள்வதும், வெந்நீரில் குளிப்பதற்காக அல்லல் படுவதையும் காணும்போது, குறைந்தது வாயினால் காற்று ஊதி மூடிவிடும் தலையணையாவது இவர்கள் கொண்டு வரக் கூடாதா? என்று தோன்றுகிறது.

  தலைக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், கழுத்துத் தண்டுவட நரம்பு அழுத்தம் குறையவும், சிறு துணியை மட்டுமே தலைக்கு முட்டுக் கொடுத்து உறங்கும் பழக்கமுள்ளவர்கள், முன் குறிப்பிட்ட பதார்த்தகுண சிந்தாமணியின் குறிப்பை அறிந்து அதன்படி செயல்படுதல் நலம். அதனால் நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட பழக்கத்தினால் ஏற்பட்டுள்ள உபாதையைச் சிறிது சிறிதாக மாற்றி, தலையின் கனத்தால் அழுந்தி விலகி பள்ளம் ஏற்படாதவாறு இலவம்பஞ்சு திணித்த மென்மையுள்ள தலையணையைப் பயன்படுத்த முயற்சி செய்யவும். கழுத்து நரம்புகளும் தசைகளும் இறுகாமல் தளர்த்தி உடற் களைப்பைப் போக்கிட உதவும்.

  தரையில் துண்டு அல்லது பாய் போட்டுப் படுப்பது இயற்கையானது என்றாலும் மிகவும் மென்மையான பட்டுப்பாய் எனும் கோரைப்பாயில் தூங்குவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது கோடை காலத்திற்கும் ஏற்ற விரிப்பு. இதில் நீங்கள் படுத்தெழுந்தால் பசி நன்றாக எடுக்கும். காங்கை எனும் உடற்சூடு குறையும். உடல் வறட்சி ஏற்படாது. இந்தப்பாயின் மீது துண்டு போட்டும் படுக்கலாம்.

  உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் பலருக்கும் குஷன் படுக்கையில் படுத்து உறங்குவதில் தான் ஆனந்தம் அடைகின்றனர். தற்சமயம் வரும் குஷன் மெத்தைகள் பலவும் நல்ல தரமாகவும் உடலுக்கு இதமாகவும் இருக்கின்றன. எலும்புகளில் அதிக வலியை உணருபவர்கள் தரையில் பாய் போட்டுப் படுப்பதை விட குஷன் மெத்தையில் படுப்பதே நல்லது. ஆனால் அந்த மெத்தை அதிகம் அமுங்கக் கூடாது.

  குஷன் படுக்கையில் படுக்கும் பழக்கமுள்ள பலரும் தலையணையை தவிர்த்து, தலையை நேரிடையாகவே மெத்தையில் வைத்துப் படுக்கும் பழக்கமுள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்கள் குளிரூட்டப்பட்ட ஏஸி அறையில் இவ்வாறு படுத்து உறங்கினால், கழுத்துத் தண்டுவட வில்லைகளில் அழுத்தம் ஏற்பட்டு, எழும் போது தலைச்சுற்றலை உணர்வது தற்சமயம் அதிகரித்துள்ளது.

  பழக்கத்தை அவ்வளவு எளிதாக மாற்ற முடியவில்லையே என்று வருந்துபவர்களுக்கு, நல்லதின் மீது ஏற்படும் பற்று காரணமாக, சிறிது சிறிதாக முயற்சி செய்து, கெடுதலைத் தரும் பழக்கத்திலிருந்து விடுபட்டு நன்மை தரும் பழக்கத்திற்கு மாறுவதால், உடல் பாதுகாப்பு காப்பாற்றப்படுகிறது.
   
  பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
  செல் : 94444 41771
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai