சுடச்சுட

  
  AYUL

  கடும் கோடை வெயிலில் எனக்கு இனம் தெரியாத ஒரு பலவீனம், கடும் நாவறட்சி, இரவில் புழுக்கம் தாளாமல் தூக்கமின்மை, அதனால் சோர்வு, மனக் கலக்கம், கடும் வியர்வை, தோலில் எரிச்சல், அரிப்பு என வரிசை வரிசையாக பல உபாதைகளால் அல்லல்படுகிறேன். இவற்றை எப்படிச் சாமாளிப்பது? எப்படி வராமல் தடுப்பது?
   - மனோகரன், சென்னை - 17.

  சென்ற ஆண்டில் அனுபவித்ததை விட, இவ்வாண்டில் கோடையின் கடுமை அதிகமோ என்றொரு வியப்பு. சூரியன் பூமியின் அருகில் நெருங்குகிறான். அதனால் தான் வர வர வெப்பம் அதிகமாகிவிட்டது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் சூரியனின் பாதையில் மாறுதல் அவ்வளவு எளிதில் ஏற்படுவதில்லை. நம்முடைய சகிப்பு தன்மைக்குறைவே அத்தகைய உணர்ச்சிகளுக்கு இடமளிக்கின்றது.

  கோடையின் தாக்குதலைத் தணிக்க சில எளிய வழிகள்:

  உடலின் குளிர்ச்சி மற்றும் சூட்டின் சகிப்புத் தன்மையைப் பாதுகாத்து பெருக்கிக் கொள்வதும், உடலின் இயற்கை வலிமையைக் குறையாமல் பாதுகாத்துக் கொள்வதும் மிகவும் அவசியம். மாலையில் வெயில் தணிந்த பிறகு உடலுக்கு மட்டுமோ அல்லது தலைக்கும் சேர்த்தோ குளிர்ச்சி தரும் சந்தனாதி தைலம், ஹிமசாஹர தைலம் ஆகியவற்றில் ஒன்றை மெலிதாகப் பூசி பிடித்துவிட்டு குளிப்பதால் தோலின் அழற்சியும் களைப்பும் நீங்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் கூடும். தோலின் சகிப்புத்தன்மை திடம் பெறும்.

  எத்தனை நாவறட்சி இருந்தபோதிலும் குளிர்ந்த நீரையோ வேறு குளிர்பானங்களையோ அளவுக்கு மீறிக் குடிக்காமல் குளிர்ந்த நீரால் வாய்க் கொப்பளிப்பது, கை, கால் , முகங்களைக் குளிர்ந்த நீரால் கழுவுவது, குளிர்ந்த நிழலில் இளைப்பாறுவது, நல்ல பழங்களையோ, பழச்சாறுகளையோ சுவைத்து சாப்பிடுவதால் உடல் தாபத்தையும் தண்ணீர் தாகத்தையும் ஓரளவு குறைத்துக் கொண்டு அதன் பிறகு குளிர்ந்த நீரை பருக அசதி ஏற்படாது. பசியும் மந்தமாகாது, தெளிவு ஏற்படும்.

  நாவறட்சி ஏற்படுத்தக் கூடிய மாவுப் பண்டம், காரம், புளி, உப்பு அதிகம் சேர்த்தவை, மசாலா பொருள் கலந்தவை, எண்ணெய்யில் பொரித்தவை ஆகியவற்றைத் தவிர்த்து சத்து மிகுந்த சாத்வீக உணவுகளை உட்கொள்ள உடல் பலம் குறையாதிருக்கும். தேவையான புஷ்டி சீராகக் கிடைக்கும்.

  தற்காலத்திய காங்கிரீட் மேற்கூரை தளஅமைப்பினால் சூரிய ஒளிச்சூடு குறையாமல் வீட்டினுள் வருவதால் நடு இரவு வரையில் வெக்கை குறையாமல் இருப்பது மிகப் பெரிய சிரமமாகும். அதனால் மேற்கூரையின் மீது மூலிகைச் செடிகளை தொட்டியில் வளர்ப்பதும், குளிர்ச்சி தரும் கறிகாய்களை வளர்ப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.

  வீட்டினுள் ஜன்னல்களை உள்புறமாக மறைக்கக் கூடிய மெல்லிய வெட்டிவேர் பாய்கள் மறுபடியும் கொண்டு வரப்படுமேயானால் வீட்டினுள் நல்ல குளிர்ச்சியும் நல்ல நறுமணமும் கிடைக்கும். ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட அறையில் இருந்து குளிரூட்டப்படாத அறைக்கு வரும் பொழுது தோலில் அங்குள்ள சூட்டை தாங்கமுடியாத வேதனையைத் தருவதால் இந்த திடீர் சீதோஷ்ண மாற்றம் ரத்தத்தில் காந்தலை ஏற்படுத்துகிறது. மேலும் பல தோல் உபாதைகளுக்கும் காரணமாகிறது.

  மேலிலிருந்து தொங்கும் சீலிங் மின்விசிறி ஒரே வேகத்தில் சூழலும் நிலையில் அதன் கீழ் அமர்ந்திருப்பவரின் தலையை வறளச் செய்கிறது, கீழ் படுத்து தூங்குபவரின் மூச்சுக் காற்றை மேலே செல்ல விடாமல் தனக்கே திரும்ப சுவாசிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது. மற்ற விசிறிகளைப் போல அறையினுள் உள்ள காற்றை வெளிப்படுத்தவோ வெளியிலிருந்து புதிய காற்றை உட்புகுத்தவோ இது உதவுவதுமில்லை. இதுவே தூக்கமின்மைக்கும் உடல் அசதிக்கும் காரணமாகிறது. சகிப்புத் தன்மையைக் குறைக்கக் கூடிய எந்த செயலும் நம்மைப் பாதிக்கக்கூடும்.

  கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் குளிர்ந்த நீரை தலை, முகம் மீது ஊற்றிக் கொள்வதும் குடிப்பதும் மிகவும் கெடுதலாகும். உடல் சாதாரண நிலைக்கு திரும்பிய பிறகே குளிர்ந்த நீரை குடிப்பதற்குப் பயன் படுத்தலாம்.

  எதிரும் புதிருமான நிலையிலுள்ள சூட்டை, குளிர்ச்சியினாலும் குளிர்ச்சியான நிலையில் உடனே சூட்டினாலும் மாற்றி அமைக்க முற்படும் போது நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் பலவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

  நன்னாரி சர்பத், வெட்டிவேர் போட்டு ஊற வைத்த பானைத் தண்ணீர், தலைக்குத் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு, இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையின் தூக்கலான உணவு முறை, பகலில் சிறிது நேரம் படுத்து உறங்க ஏற்படும் வாய்ப்பு கிட்டினால் அதை நன்கு பயன்படுத்திக் கொள்வது, மனதை மகிழ்ச்சியூட்டும் நண்பர்களின் சேர்க்கை, எந்த நிலையிலும் மனதைச் சாந்தமாக அமைத்துக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் போன்றவை கோடையின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சில அரண்களாகும்.

  - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
   ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
   நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
   செல் : 94444 41771

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai