உங்கள் உடம்பில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா? (விடியோ)

குழந்தைகள் முதல் 50 அல்லது 60-களில் இருக்கிற பெண்கள் வரை எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கிற பிரச்னை ஹீமோகுளோபின் லெவல் குறைவு
உங்கள் உடம்பில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா? (விடியோ)


 
குழந்தைகள் முதல் 50 அல்லது 60-களில் இருக்கிற பெண்கள் வரை எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கிற பிரச்னை ஹீமோகுளோபின் லெவல் குறைவு. புரிகிறபடி சொல்ல வேண்டுமென்றால், அனிமியா பிரச்னை. மாதவிடாய், பிள்ளைப்பேறு, சிசேரியன் என்று பெண்கள் ரத்தம் இழப்பதற்கு 3 பெரிய காரணங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர, சரியாகச் சாப்பிடாதது, சரிவிகித சத்தான உணவு எடுக்காதது போன்ற காரணங்களையும் சேர்த்துக் கொள்வோம். உலக சுகாதார அமைப்பு சொல்லியிருக்கிறபடி பெண்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் 12 கிராம் இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் 80 சதவிகிதப் பெண்களுக்கு 9 கிராமுக்கும் கீழேதான் ஹீமோகுளோபின் லெவல் உள்ளது. இந்தப் பிரச்னையின் அறிகுறிகள் என்னென்ன, உணவில் மூலம் சரி செய்ய முடியுமா, சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதன் அளவு என்ன? மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரிடம் கேட்டோம்.

''ஹீமோகுளோபின் லெவலை துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ரத்தப்பரிசோதனை செய்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஹெச்.பி. லெவல் குறைவாக இருக்கிறப் பெண்களுக்கு அடிக்கடி மூச்சு வாங்கும், உடம்பு வெளிறிப் போய் விடும், நடக்க முடியாது, இதயம் படபடப்பாக உணர்வார்கள், தலைச்சுற்றல், அஜீரணம் இருக்கும். தூக்கமும் குறையும்

ஒருவர் சாப்பிடுகிற சாப்பாட்டில் இருந்து பி 12, பி 6, இரும்புச் சத்து ஆகியவற்றை உடம்பு பிரித்து எடுத்துக் கொள்ளும். இதை ஹீம் என்று சொல்வோம். இது உடம்பில் சேர்ந்து ஹீமோகுளோபின் ஆகிறது. உடம்பு இதைச் செய்ய முடியாத போதும் அல்லது உடம்பால் எடுக்க முடிகிற அளவுக்கு உங்கள் உணவில் மேலே சொன்ன சத்துகள் இல்லை என்றாலும் ஹீமோகுளோபின் லெவல் குறையும்.

சாப்பாட்டில் கீரை வகைகள், பீட்ரூட், மாதுளம் பழம், பேரீச்சம் பழம், பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வர ரத்தம் ஊற ஆரம்பிக்கும். ஆனால், ஹீமோகுளோபின் லெவல் 6 கிராம்தான் இருக்கிறது என்றால், இரும்புச் சத்து மாத்திரை தருவோம். இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக் கொண்டால் சில பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்படலாம். அவர்களுக்கு ஐ.வி. ஐயர்ன் சத்தை இன்ஜெக்‌ஷன் மூலம் செலுத்துவோம். தேவைப்பட்டால் ரத்தம் கூட ஏற்றுவோம்’ என்றவர், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்களையும் சொன்னார்.

'கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து தேவையான அளவுக்கு இருப்பது மிக மிக அவசியம். இந்த நேரத்தில் பெண்களுக்கு 12 முதல் 14 கிராம் அளவுக்கு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். ஆனால், நம் ஊரில் 10 கிராமையே தாண்டுவதில்லை பெண்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஆரம்பத்தில் தேவையான அளவுக்கு ஹீமோகுளோபின் கொண்ட கர்ப்பிணிகளுக்குக் கூட, சரியாகச் சாப்பிட முடியாதது, வாந்தி, போன்ற காரணங்களால் ஹெச்.பி. லெவல் குறைய ஆரம்பிக்கும். வேலைக்குப் போகிற கர்ப்பிணிகள், சத்தாகச் சாப்பிடாமல் இந்தப் பிரச்னையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதை பார்க்கிறேன். அதனால், நாங்கள் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைக் கொடுப்பதை கட்டாயமாக்கி விட்டோம்.

தைராய்டு பிரச்னை இருக்கிற பெண்களுக்கும் ஹெச்.பி. லெவல் குறைவாகவே இருக்கும். காரணம், அவர்களுடைய தைராய்டு கிளாண்ட் பலவீனமாக இருப்பதால், உடம்பால் உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாது; உணவில் இருக்கிற சத்துக்களை உடம்பு முழுமையாகக் கிரகிக்கவும் முடியாது. இதனாலும் ஹெச்.பி. லெவல் குறைவாகும்.

இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால், குறைந்தது 3 மாதம் முதல் 6 மாத காலத்துக்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடம்பு தனக்குத் தேவையான இரும்புச் சத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளும். தவிர, iron tablet எடுக்கும்போது ஒரு நாளைக்கு 60 மில்லி கிராம் எடுத்தாலே போதும். சில விளம்பரங்களில் ஒரு மில்லி கிராம் எடுக்கலாம் என்பது போல் காட்டுவதைப் பார்க்கிறேன். அப்படியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், ஒரு நாளைக்கு நம் உடம்பு 60 மில்லி கிராம் இரும்புச் சத்தைத்தான் ஏற்றுக் கொள்ளும். மிச்சத்தைச் சிறுநீர், மலம் வழியாக வெளித் தள்ளி விடும். வருடத்துக்கு இரண்டு தடவை உங்கள் ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று முடித்தார் டாக்டர் வாணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com