தொண்டை புண், தொண்டை கரகரப்பு குணமாக்கும் மருந்து
By கோவை பாலகிருஷ்ணன் | Published On : 15th May 2019 10:52 AM | Last Updated : 15th May 2019 10:52 AM | அ+அ அ- |

மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.
தொண்டை சதை வளர்ச்சி குறைய:
வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.
குரல் மாற்றத்தை சரி செய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.
தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப் புண் ஆறும்.
தொண்டை சதை குணமாக:
புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!