உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!  

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை. மிகவும் நேர்த்தியாக உடையணிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த அந்த இளைஞ
உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!  

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை. மிகவும் நேர்த்தியாக உடையணிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த அந்த இளைஞர் வண்டியை மெதுவாக்கி ஓரம் கட்டும் போதே வண்டியோடு சரிகிறார். பரபரப்பாக சீறிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகி அவரிடம் நெருங்க, சிக்னலில் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த டிராபிக் காவலரும் விரைகிறார். கூடி நின்ற மக்கள் தண்ணீர் தெளிக்கிறது.

எங்கிருந்தோ ஒரு ஆட்டோகாரர்  வந்து நிற்கிறார் 'வண்டியிலே ஏத்துங்க பக்கத்துல தான் ஆஸ்பத்திரி’ என்று  பதற்றக் குரல் வீச 'நல்ல வேளை ஸ்லோ பண்ணி விழுந்தாப்பலே வந்த வேகத்துல விழுந்திருந்தா சிதறி இருப்பாப்பலே!’

'வண்டியை ஓரங்கட்டுங்க!’ என்று போலிஸ் அந்த இளைஞனின் இருசக்கர வாகனத்தை ஓரம் கட்ட, ஐ.டி. கார்டு பார்த்து கம்பெனிக்கு போன் செய்ய இன்னொரு உதவிக்கரம் முயல. ஒரு வயதான பெண் அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறது.

அவுட் பேஷண்ட் பிளாக்கில் சோதித்த டாக்டர் வந்தவர்களிடம் சொல்கிறார் 'பதற்றப்படாதீங்க…..உடல் வறட்சியினாலே மயக்கம்… Dehydration… டிரிப் ஏத்தினா எல்லாம் நார்மலாகிவிடும்’

வந்தவர்கள் பெருமூச்சு விட …'டெய்லியும்  ஒருத்தனாச்சும் மயக்கம் போடறதா பார்க்கிறேன்…!’ என்று புள்ளி விவரம் பேசினார் ஆட்டோக்காரர்.

இந்த சம்பவம் ஒரு சோறு பதம்.

சென்னையில் கொளுத்தும் வெயிலில் இந்த நிகழ்வுகள் சகஜமாகிவிட்டது. காலை பதினோரு மணி முதல் மாலை  நான்கு மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இந்த கட்டுரைய எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வெயிலின் அளவு 107 டிகிரி ஃபாரீன்ஹீட்டை தாண்டி கொளுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் உடல் வறட்சி பற்றிய விழிப்புணர்வும் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகளும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

உடல் வறட்சி என்றால் என்ன ?

உடலின் இயக்கத்திற்கு நீர்ச்சத்து அவசியம் என்பதை அறிவோம். ரத்த ஓட்டமும் அதன் அடிப்படையான காற்றோட்டம் சீராக இயங்க செய்யும் நுரையீரல், இதய ஓட்டமும் ஒரு ஒழுங்கு முறையில் இயங்க உடலில் நீர்ச்சத்தானது போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த நீர்ச்சத்து குறைவாக ஏற்படும் பாதிப்புதான் உடல் வறட்சி. கேட்பதற்கு ஏதோ ஒரு சாதரணமான பாதிப்பு போன்று தோன்றும் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தானது இந்த உடல் வறட்சி. பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீரை நாம் அருந்தவில்லையெனில் இந்த நீர்ச் சத்து குறைப்பாடுகள் ஏற்படும். ஆனால் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து வியர்வையாக அளவுக்கு அதிகமாக நீர் வெளியாவதின் மூலமாக வெயிலில் திரிவதின் காரணமாக 'சன் ஸ்ட்ரோக்’ என்றழைக்கப்படும் பாதிப்பினால் இந்த உடல்வறட்சி அதிகம் ஏற்படுகிறது.

உடல் வறட்சியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் ?

மிக எளிதான அறிகுறிகள் என்றால் தாகம் எடுப்பதுதான். ஆனால் தாகம் எடுக்கும் போது எல்லாம் தண்ணீர் குடிப்பதை தள்ளி போடும் சோம்பேறித்தனம் நம்மிடம் அதிகம் இருக்கிறது. சிலர்  தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமே என்ற நினைப்பிலும் அலட்சியமாக இருக்கின்றனர். இந்த தவறு பல பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுகிறது 

பொதுவான சில அறிகுறிகளை பார்ப்போம்.

பெரியவர்களுக்கான அறிகுறிகளாக  அதீத தாகம், சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது தாமதம். அடர்ந்த மஞ்சல் நிறத்தில் சிறுநீர் போதல், லேசான தலைச்சுற்றல், குழப்பம், மயக்கம், உடல் அசதி போன்றவை இருக்கும்

பெரியவர்களால் இந்த அறிகுறிகளை உணர்ந்து பேச முடியும். சின்ன குழந்தைகளால் இவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாது. அதனால் தாய்மார்கள் தான் குழந்தைகளை கூர்ந்து கவனித்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.  குழந்தைகளுக்கான உடல் வறட்சி அறிகுறிகளானது  உதடுகளும் நாக்கும் வறண்டு காணப்படுவது, அழும் போது கண்களில் நீர் வராது, தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு டயப்பர் ஈரமாகவில்லையெனில் (சிறுநீர் கழிக்காமல் இருக்கும்) கண்களில் சுருக்கம், தலை உச்சியில் தடவி பார்த்தால் மென்மையாக இருத்தல், குழந்தையின் பாவனையில் எரிச்சலும், விட்டு விட்டு அழுவதும் என அறிகுறிகளை உணர முடியும்.

குழந்தைகளை போன்ற முதியோர்களுக்கும் தாகம் எடுத்த உணர்வு அதிகம் இருக்காது என்கிறார் மூப்பியல் மருத்துவ நிபுணர் திரு, நடராஜன். உடல் வறட்சியின் வீரியம் புரிகிறது. சரி இதிலிருந்து எப்படி தப்புவது ?

பாதுகாப்புடன் உடல் வறட்சியை தவிர்க்க பத்து கட்டளைகள் இதோ..

  1. நிறைய தண்ணீர் குடிப்பதுதான் முதல் நடவடிக்கை. தாகம் எடுக்கவில்லை என்று  யோசித்து நிற்காமல் குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். குழந்தைகளோ முதியவர்களோ அவர்கள் கேட்கவில்லையெனினும் போதிய இடைவெளியில் நீர் கொடுத்துக் கொண்டே இருங்கள்.
  2. எளிய காய்கறி சூப் வகைகள் அல்லது பழச்சாறு வகைகளை ஐஸ் இல்லாமலும் சின்ன ஸ்பூன் மூலம் பிள்ளைகளுக்கு தரலாம்.
  3. நிறைய காய்கறிகள் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தர்பூசணி, கிருணி, ஆரஞ்சு போன்ற பழங்கள், முள்ளங்கி, அரைக்கீரை, சிறுகீரை ஆகியவை ஊட்டம் தரும். இஞ்சி, கருப்பட்டி, புதினா கலந்த சாறு உற்சாகமூட்டும்
  4. பொதுவாக சன்ஸ்கீர்ன் லோஷன்களை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் லேசாக பயன்படுத்தலாம். அல்லது தேங்காய் எண்ணெய் சிறப்பு.
  5. உடலுக்கு சத்தும் ஊட்டமும் கிடைக்க மோர், நன்னாரி, பழரசங்கள் உதவும். மோரில் கொஞ்சம் இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் தட்டி போட்டு பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  6. வெயில் காலம் முடியும் வரை எளிய செரிமானம் ஆகக் கூடிய மென்மையான உணவையே உண்ணுங்கள். ஏன் எனில் நமது உணவு கடினமாக இருந்தால் அதனை செரிமானம் செய்ய அதிக வெப்பத்தை உடல் உற்பத்தி செய்யும்.
  7. மது அருந்தும் பழக்கம் இருந்தால் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மது உடலில் எளிதில் நீர் வறட்சியை உருவாக்கும். பீர் குடித்தால் குளிர்ச்சி என்பதற்கு எந்த வலுவான ஆதரமும் இல்லை. மதுவைத் தவர்த்தால் உடல் வறட்சியை தவிர்க்கலாம்
  8. தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் வெளியே செல்லுங்கள். தவிர வெயில் அதிகமாக இருக்கும் பொழுது வெளியில் செல்லாமல் இருப்பது பாதுகாப்பு
  9. மென்மையான் காற்றோட்டமான உடைகளை அணியுங்கள். கண்களில் அதீத வெளிச்சத்தின் பாதிப்பை தவிர்க்க தரமான கண்ணாடிகள் உதவும். தலையில் காட்டன் தொப்பி அல்லது மென்மையான துணிகளை சுற்றிக் கொண்டு செல்லுங்கள்
  10. கையில் எப்பொழுதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். கூச்சப்பபடாமல் குடை எடுத்து செல்வதும் புத்திசாலித்தனம். குறிப்பாக மாதவிலக்கு சமயங்களில் அதிக சக்தி வெளியேறுவதால் பெண்கள் நிறைய திரவ ஆகாரமும் வெளியே செல்லும் போது உரிய பாதுகாப்பும் அவசியம்.

உடல் வறட்சி என்பது வெயில் காலத்தில் சகஜமானது என்று அலட்சியம் வேண்டாம். ஒவ்வொரு முறையும் உடல் வற்றி மீண்டும் திரவத்தை நிரப்பிக் கொள்ளும் போதும் கடுமையான நிலைக்கு சென்று திரும்புகிறது. இந்த உடல் வறட்சியே நாளைடைவில் சிறுநீரக கோளாறுகள், இருதய கோளாறுகள், செரிமான கோளாறுகள் என உள் உறுப்புகள் பிரச்னைகளுக்கு துவக்கமாகிவிடும். நம் உடலே நம் உயிரின் அடிப்படை. உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமுலர். திருமந்திரத்தை தினமந்திரமாக கொண்டு இந்த வெயிலை சமாளிப்போம். உடல் வறட்சியை தவிர்ப்போம் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com