Enable Javscript for better performance
Beauty tips | முக அழகுக்கு கைகொடுக்கும் ஆயுர்வேதம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முக அழகுக்கு கைகொடுக்கும் ஆயுர்வேதம்!

    By   |   Published On : 18th November 2019 03:29 PM  |   Last Updated : 18th November 2019 03:29 PM  |  அ+அ அ-  |  

    MINT-LEAVES-FACE-MASK

    face mask

    என் மகள் வயது 18. BODY SPRAY என்ற பெயரில் விற்கப்படும் பல வகையான சென்ட்களைப் பயன்படுத்துகிறாள். முகத்திற்கு பல பூச்சுகளையும், உதட்டிற்குச் சாயமும் பூசாமல் வெளியே செல்வதில்லை. இதனால் உடல் நாற்றம், பருக்கள் தெரியாது என்கிறாள். இவை கெடுதல், வேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. அவளை எப்படித் திருத்துவது?
    -கல்யாணி, சென்னை.

    நாகரீகத்தின் வினையால் வந்து நம்மை அடிமை கொண்டுள்ள முகமினுக்கிப் பூச்சுகளையும், உதட்டுச்சாயமும் பூசி, தலைவிரி கோலமாக, மால்களில் நடக்கும் இளம் பெண்களில் சிலரைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. இவ்வகை முகப்பூச்சுகளில் பலவும் முகத்தின் சருமத்தில் ஒரு செயற்கை நிலையை உண்டாக்கவும், அதைத் தொடர்ந்து பருக்கள் மிகவும் அதிகமாகவும் காரணமாகின்றன. முடிவில் நிரந்தரமான முகத்தின் அழகு கெட்டுப்போன நிலைதான் ஏற்படுகிறது. அறுபது வயது கடந்த பெண்மணிகளும் தலைக்கு டை அடித்து அசிங்கமாக தோல் சுருக்கத்துடன் காணப்படும் நிலை, சென்னை நகரில் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது. நம் நாட்டு சீதோஷ்ண நிலைமைக்கும், நமது உணவுக்கும் இவை சற்றும் ஒத்து வருவதில்லை. ஆனால் மேல்நாட்டு நாகரீகம் இங்கு இவ்விஷயத்தில் பெரிதும் வளர்ந்துள்ளது.
    பருக்கள் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த, "புனுகு" பூசுவதையும், மஞ்சள் மற்றும் குங்குமம் சேரும் இயற்கையான மூலிகைப் பூச்சுகளையும் பயன்படுத்திப் பார்க்கலாம். பிண்ட தைலம் எனும் ஆயுர்வேத தைல மருந்தை பஞ்சில் முக்கி, பருக்களின் மீது தடவினாலும் நல்லதுதான். 

    பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் முகப்பூச்சுகளை ஆயுர்வேதம் பரிந்துரைத்திருக்கிறது. அவை குறிப்பிடும் மூலிகைப் பொருட்கள் இன்று தரமாகக் கிடைக்கிறதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதால், அவை பற்றிய விவரம் பிறகு குறிப்பிட்டு, நல்லதரமான ரீதியில் தயாரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும் சில மூலிகை விவரங்களால் வாசகர்கள் பயன் பெறக் கூடும். 

    முன் பனி, பின்பனிக்காலத்தில் முகத்திற்கும் உடலுக்கும் ஏலாதி கேர தைலத்தைப் பயன்படுத்துவதையும், அதன் பிறகு வரக் கூடிய வசந்தம் எனும் பருவகாலத்தில், முகம் மற்றும் உடலுக்கு சந்தனாதி தைலத்தையும், கோடையில் தூர்வாதி கேரதைலத்தையும், மழைக்காலத்தில் பிண்ட தைலத்தையும், இலையுதிர் காலத்தில் நால்பாமராதி கேர தைலத்தையும் பயன்படுத்தி, முகம் மற்றும் உடல் அழகைக் கெடா வண்ணம் இயற்கையாக காப்பாற்ற முயற்சிக்கலாம்.

    மூக்கினுள் விடப்படும் குங்குமாதி தைலம், தோலை நன்கு பதப்படுத்தி நோய் தாக்காமல் பாதுகாக்கக் கூடிய தினேசவல்யாதி கேர தைலம் ஆகியவற்றை என்றென்றும் பயன்படுத்தலாம்.

    பகல் உறக்கம், அதிகமான பேச்சு, பிரசங்கம், நெருப்பின் அனல், வெய்யில், கண்ணீர்விட்டு துக்கப்படுதல், கோபம் போன்றவை முகப்பூச்சு பயன்படுத்தும் நாட்களில் தவிர்க்க வேண்டியவை.

    ஜலதோஷம், அஜீரண உபாதை, மூக்கில் மருந்துவிட்டுக் கொண்டவர், ருசியின்மை, முதல் நாள் ராத்திரி கண்விழித்தவர் முகப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாதவர்களாகும். உடல் துர்நாற்றம், பித்தம் சம்பந்தமில்லாமல் ஏற்படாததால், காரம், புளி, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து, இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் பயன்படுத்தல் மூலம் தவிர்க்கலாம். நாவல் இலைகளை நன்கு அரைத்து வியர்வை வரக் கூடிய இடங்களில் நன்கு தேய்த்து குளித்து வந்தால், துர்நாôற்றம் நன்கு விலகிவிடும். 

    இலந்தை விதையின் உட்பருப்பு, ஆடாதோடையின் வேர், வெள்ளிலோத்திப்பட்டை, வெண்கடுகு இவற்றைத் தண்ணீரில் அரைத்து முன்பனிகாலத்தில் முகப்பூச்சாக உபயோகிக்கலாம். அவ்வாறே, கண்டங்கத்திரியின் வேர், எள், மரமஞ்சளின் (வேர்ப்)பட்டை, உமி நீக்கிய பார்லி இவற்றை அரைத்த பூச்சை பின்பனியிலும், தர்ப்பத்தின் வேர், வெண்சந்தனம், வெட்டிவேர், வாகைப்புஷ்பம், சதகுப்பை, சம்பா அரிசி இவற்றை அரைத்த பூச்சு வசந்த காலத்திலும், தாமரைக்கிழங்கு, அல்லிக்கிழங்கு, அறுகம்புல், அதிமதுரம், சந்தனம் இவற்றை வெய்யில் காலத்திலும், அகில்கட்டை, எள், வெட்டி வேர், ஜடாமாஞ்ஜி, தகரைவேர், செம்மரம் ஆகியவற்றை மழைக்காலத்திலும், தாளீசபத்ரி, புல், கரும்புவேர், அதிமதுரம், நாணல்வேர், தகரைவேர், அகில்கட்டை ஆகியவற்றை இலையுதிர்காலத்திலும் முகப்பூச்சாக உபயோகிப்பது நலம்.

    முகத்தைத் தண்ணீரில் அலம்பித் துடைத்த பின் பூச்சு மருந்தை பூசிக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு முகத்தைக் அலம்பித் துடைத்து பிண்டதைலம் போன்ற ஒரு தைலத்தை இலேசாகப் பூசி விட வேண்டும். பின் குளிக்கும்போது பயற்ற மாவைக் கொண்டு முகத்தை அலம்ப வேண்டும்.

    கிரமப்படி உபயோகிக்கப்படும் இந்த முகப்பூச்சு பருக்கள், வடுக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் முதலிய நிற பேதங்களையெல்லாம் போக்கும். 

    பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
    ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
    நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
    செல் : 94444 41771

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp