இனி தடாலடி வைத்திய முறைகளுக்கு வேலையே இருக்காது

தடாலடி வைத்திய முறைகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், ஆயுர்வேதத்தின் பங்களிப்பு எவ்வாறு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவப் போகிறது?
இனி தடாலடி வைத்திய முறைகளுக்கு வேலையே இருக்காது
Published on
Updated on
3 min read

பழமையான ஆயுர்வேத மருத்துவம், நவநாகரீகமான இளைஞர் சமுதாயத்திற்கு எந்த வகையில் பாதுகாப்பைத் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தப் போகிறது? தடாலடி வைத்திய முறைகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், ஆயுர்வேதத்தின் பங்களிப்பு எவ்வாறு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவப் போகிறது?

 - ராமகிருஷ்ணன் , சென்னை.

இன்றைய இளைஞர் சமுதாயம் மிகப் பெரிய உடல் உபாதைகளுக்கான விதையை தம் உடலில் விதைத்து வருவதை அறியாதிருக்கிறது. ஐம்புலன்களில் மிக முக்கியமான கண்களுக்கும், காதுகளுக்கும் ஓய்வு தராத வகையில் வந்துள்ள நவீனக் கருவிகள் மூலம் ஏற்படும் மூளை மற்றும் மனச்சோர்வை, தம் இளமையின் வாயிலாக அறிய முடியாமல் மகிழ்ச்சி பொங்க அனுபவிக்கும் சுகமானது, அப்புலன்களை நிரந்தர உபாதைகளுக்குக் கொண்டு போய் விடப் போவது நிஜம். ருசி அறியும் நாவினையும் அவர்கள் விடவில்லை. முன் தலைமுறையினர் அறிந்திராத கேடுதரக் கூடிய உணவு முறைகளை கையேந்தி பவனில் நின்று கொண்டு, சுவைத்து மகிழும் இவர்களுக்கு இரைப்பை, தன் பங்கிற்கு தண்டனை அளிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தோல் வனப்பை மெருகூட்ட இவர்கள் எடுக்கும் முயற்சிகளால் தோலில் தொடு உணர்ச்சியும், வியர்வைக் கோளங்களின் செயல்பாடும் பாழ்பட்டுப் போகும் நிலையும் வருவதற்கு நெடுந்தூரமில்லை. பல தரப்பட்ட வாசனாதி திரவியங்களை உடலெங்கும் பீச்சி அடித்து, உடல் துர்நாற்றத்தை மறைக்க முயற்சி செய்யும் இவர்களால், பிறருக்கு ஏற்படும் மயக்கமும், அவர்கள் அருகே செல்வதற்கே ஏற்படும் வெறுப்பையும் உணராத நிலையில், தம் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் அவலத்தை இனி மாற்ற முயற்சித்தால் அது செவிடன் காதில் ஊதிய சங்கிற்குச் சமமாகும்.

வார இறுதியில் கிடைக்கும் விடுமுறை நாட்களையும் நண்பர்களுடன் சேர்ந்து உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் இவர்கள் செய்யும் அட்டகாசங்களின் பின்விளைவுகள் ஆபத்தானவை. இந்த இளைஞர் சமுதாயத்திற்குப் பாதுகாப்பைத் தந்து ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில், புலன் பாதுகாப்பு, மனநலம் காக்கும் வகையில் எண்ணற்ற உபதேசங்கள் மருந்துகளையும் தன்னலமற்ற, தொலைநோக்குப் பார்வை கொண்ட முனிவர்களால் கூறப்பட்டுள்ளன. அவற்றை சரியாகப் பயன்படுத்தினால், தடாலடி வைத்திய முறைகளுக்கு வேலையே இருக்காது. பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்து கொள்ள வேண்டிய வைத்திய முறையை அவர்களுக்கே உரிய அவசரத்தை இதிலும் காட்டினால், எந்தவிதமான நல்ல பயன்களையும் பெற இயலாது.

கண்பாதுகாப்பைத் தரும் திரிபலாதி தைலத்தை, தலைக்குத் தேய்த்துக் குளிப்பதையும், திரிபலா சூரணத்தை இரவு பயன்படுத்துவதையும், பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக் கீரை, பசும்பால், கேரட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்வதையும் செய்து கொண்டு, கண்ணுக்குச் சோர்வைத் தரும் கருவிகளின் பயன்பாட்டைக் குறைத்து கண்களுக்கு நல்ல ஓய்வைத் தரும் வகையில் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். செவிப்புலன் கேடு உறாத வகையில், வெது வெதுப்பாக காதினுள் 4 - 5 சொட்டுகள் மூலிகைத் தைலமாகிய வசாலசுனாதியையோ, கார்ப்பாஸாஸ்தியாதி தைலத்தையோ விட்டுக் கொள்ளுதலும், செவிப்பறைக்கு தன் சக்திக்கு மீறிய அளவில் வேலையைத் தராமல் பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.

நாக்கிற்குச் சுவை அளிக்கும் உணவுகளின் மீது காட்டும் ஆர்வத்தை அடக்கி, வீட்டில் அம்மா தயாரித்துத் தரும் சுகாதாரமான ஊட்டம் தரும் உணவுகளைப் பழக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அன்றைய உடல் நிலை அறிந்து, அதற்குத் தக்கபடி அறிவுரை தரும் ஆயுர்வேத உணவுத் திட்டத்தையும் தாய்மார்களும், மனைவியும் அறிந்திருத்தல் நலம். இதனால், குடும்ப ஆரோக்கியமானது மேம்படும். நாக்கின் சபலத்திற்கு அடிமையாகி, வயிற்றுப் புண், உணவுக்குழாய் எரிச்சல், வாந்தி, பேதி என கஷ்டப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சாட் அயிட்டம்ஸ், கையேந்தி பவன் உணவுகளின் தரம் அறியாமல் சாப்பிட்டு வயிற்றில் நுண்கிருமிகளின் பாதிப்பால், இளைஞர் சமுதாயம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அகற்ற, மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை மாதம் ஒரு முறை சாப்பிட்டு, நீர்பேதியாகி, குடல் கிருமிகளை அழித்து வெளியேற்ற வேண்டும்.

அழகு நிலையங்களில் புருவத்தை நூல் போட்டு "வெடுக் வெடுக்' என பிடுங்குவதும், முகத்திலுள்ள ரோமத்தையும் அகற்ற முயற்சி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் தோல் அலர்ஜியானது பெரும் துன்பத்தை அளிக்கிறது. கஸ்தூரி மஞ்சளின் தொடர் உபயோகத்தால், அதிக ரோமத்தை நீக்க முயற்சி செய்வதே தரம்.

சென்ட் அடித்து வாழ்வதைத் தவிர்த்து, இயற்கையான வாசனையைத் தரும் சந்தனம், அகில், ஜவ்வாது போன்றவற்றைப் பயன்படுத்தி, பிறரது மயக்கத்தைத் தவிர்க்கலாம். இயற்கை வளத்தை மேம்படுத்தும் மரங்களை - அவற்றின் மருத்துவ குணங்களை - ஆயுர்வேதம் மூலம் அறிந்து பயிரிட்டு வளர்த்து தூய காற்றைப் பெறுவதே சமுதாய முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாகும்.

 - பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com