Enable Javscript for better performance
Does smoking marijuana affect your sperm count ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்: ஆய்வு- Dinamani

சுடச்சுட

  

  இந்தப் பழக்கம் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்: ஆய்வு

  By IANS  |   Published on : 17th February 2020 02:05 PM  |   அ+அ அ-   |    |  

  smoking

   

  பல இடங்களில் பரவலாகப் பயிரிடப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு கடத்தப்படும் சட்டவிரோதமான பொருள் கஞ்சா. கஞ்சா சாடிவா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த கஞ்சா, மனோவியல் திரிபுகளை குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவானச் சொல். கஞ்சாவில் உள்ள முக்கியக் கூறு டி ஹெச் சி எனப்படும்.

  நொய்டாவின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரக  மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் துஷ்யந்த் நாடார் இது குறித்து மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

  கஞ்சா மீதான ஈர்ப்பு உலகளாவியது. இது உலகின் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்னையாகும். உலக மக்கள் தொகையில் 2.5 சதவிகிதமான சுமார் 147 மில்லியன் மக்கள் கஞ்சாவை (வருடாந்திர பாதிப்பு) 0.2% கொகெய்ன் மூலமும், 0.2 சதவிகிதம் ஓபியேட்டுகள் மூலமாகவும் உட்கொள்கிறார்கள். கஞ்சாவின் பயன்பாடு சில கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்கூடு.

  கற்றல் திறன் 

  ஒருவரின் அறிவாற்றல் வளர்ச்சியை (கற்றல் திறன்கள்) கஞ்சா பாதிக்கிறது, மூளை ஒருங்கிணைப்பு, கவனம் உள்ளிட்ட பலவகையான செயல்பாட்டு பணிகள் கஞ்சா உட்கொள்வதால்  பாதிப்படைகிறது. 20 மில்லிகிராம் கஞ்சாவை புகைபிடித்த மனிதர்களின் செயல்திறன் 24 மணி நேரம் வரை பலவீனமடையக் கூடும் என்கிறது ஆய்வு. கஞ்சா போதையில் வாகனங்களை ஓட்டும் நபர்களால் சாலை விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

  நுரையீரல் பிரச்னை

  அறிவாற்றலை படிப்படியாகக் குறைத்து, அதன்பின் புத்தியை மந்தமாக்கிவிடும் அபாயம் கஞ்சா புகைப்பவர்களுக்கு உண்டு. அதிலும் பல காலமாக கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கு உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் பாதிப்புக்கள் ஏற்படும். கஞ்சா பழக்கத்தை நிறுத்தாவிட்டால், அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளை பாதிப்படையும். கஞ்சா புகைக்க முடியாத சமயங்களில் கை, கால்கள் நடுக்கம் ஏற்பட்டு புத்தி பேதலிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மேலும் கஞ்சாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் சிலருக்கு ஸ்கிசோஃப்ரினியா எனும் மனவியல் பிரச்னை ஏற்படும். நீண்ட கால கஞ்சா புகைப்பதால் மூச்சுக்குழாயில் காயம் ஏற்படும். நுரையீரல் பலவீனமாவதுடன் சுவாசம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் உயிருக்கே உலை வைத்துவிடும்.

  ஆண் மலட்டுத்தன்மை 

  கஞ்சா 10-15% ஜோடிகளின் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது. மேலும் இந்தப் பிரச்னைக்கு கஞ்சா புகைக்கும் ஆண்கள்தான் காரணம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு இயக்கம் மற்றும் சாதாரண உருவ அமைப்பைக் கொண்ட விந்து உயிரணுக்களின் சதவிகிதம் உள்ளிட்ட பல விந்து அளவுருக்களின் பகுப்பாய்வு மூலம், ஆண் மலட்டுத்தன்மை கண்டறியப்படுகிறது. கஞ்சாவின் ஒருவகையான மரிஜுவானா எனும் போதை வஸ்து, ஆண்களின் இனப்பெருக்கத்தை பாதித்து, உடலியல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் பிளாஸ்மா அளவைக் குறைத்தல், விந்தணுக்களின் குறைபாடு, அசாதாரண உருவத்துடன் விந்தணுக்களின் உற்பத்தி, விந்தணு இயக்கம் மற்றும் உறுதித்தன்மையைக் குறைத்தல் போன்ற பிரச்னைகளையும் அதிகரிக்கச் செய்யும். செமினோமா எனும் கிருமியால் உயிரணுக் கட்டிகள் ஏற்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

  மரிஜுவானா புகைப்பதால் விந்துக்களின் தரம் மற்றும் ஹார்மோன் அளவை பாதிக்கும். இதன் உயிரியல் வழிமுறைகள் முழுமையாக அறியப்படவில்லை. கஞ்சாவிலுள்ள 9-டெட்ரா ஹைட்ரோகன்னாபினோல் எனும் வேதிப் பொருள், மனித கன்னாபினாய்டு ஏற்பிகளான சிபி 1 மற்றும் சிபி 2 உடன் பிணைக்கிறது. இது ஹார்மோன் அளவையும் விந்தணுக்களையும், முதிர்ச்சியடைந்த விந்தணுக்களையும் பாதிக்கச் செய்கிறது. மரிஜுவானாவைப் பயன்படுத்திய ஆண்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சுகாதாரமற்ற நடத்தை அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் குலைக்கிறது.

  அதிகளவில் காஃபின் உட்கொள்பவர்கள், அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள், அதீதமாக மது அருந்துவோர்க்கு பாலியல் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இவர்கள் அடுத்தக்கட்டமாக போதை பழக்கத்துக்கு ஆளாகி கஞ்சா மரிஜுவான உள்ளிட்ட போதை மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai