சமூக வலைதளத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? தீவிர நோய்!!

சமூக வலைதளத்தை கொஞ்ச நேரம் கூட பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றால் அதுவும் நோய்தான்.
தொழில்நுட்பம் எனும் தீவிரம்
தொழில்நுட்பம் எனும் தீவிரம்
Published on
Updated on
2 min read

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்திலும் அல்லது ஏதேனும் ஒன்றில் தீவிரமாக இருக்கிறீர்கள், பார்க்காமல் இருக்கவே முடியவில்லை என்றால் அதுவும் ஒரு தீவிர நோய்தான் என்கிறார்கள்

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இயங்குபவர்களாக இருந்தால், அதில் வரும் லைக், பதில்களுக்காக எப்போதும் நீங்கள் செல்ஃபோனைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அல்லது புகைப்படங்களை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போதும், அலுவலக கூட்டத்திலும், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நேரிடலாம். நேரிடும் என்கிறது தரவுகள்.

வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் போடுபவர்கள் பலருக்கும், அதனை ஒவ்வொரு நிமிடத்துக்கும் சென்று யார் யார் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கும் வழக்கமும் உள்ளது. எத்தனையோ பேர் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகியிருக்கும் நிலையிலும் கூட, இன்னும் நம்முடன் பலரும் ஸ்டேட்டஸ் வைப்பதையே ஸ்டேட்டஸ் குறைச்சலாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு மனிதன் செயல்படுவதால், மனிதனின் இரண்டு மூளையின் இடையே உள்ள செயல்பாட்டுத்திறன் சமநிலையில் இருக்காது என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியொன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பயன்பாடோ அந்தளவுக்கு அதிகமான பாதிப்புக்கள் நிகழக் கூடும். அது அவர்களின் சிந்தனையோட்டத்திலும் அதனை தொடர்ந்து செயல்பாடுகளிலும் வெளிப்படும்.

சமூக ஊடகங்களில் அதிக நேரம் இருக்கும் 341 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர் ஆராய்ச்சியாளர்கள். முதல் செமஸ்டர் முடிந்த நிலையில் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர்கள் ஒவ்வொரு மாணவரின் படிப்பு மற்றும் மதிப்பெண்களை அதன்பின் தொடர்ந்து ஒருவருடம் முழுவதும் கண்காணித்தனர்.

ஆராய்ச்சியின் முடிவில் அதிகமாக சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் மாணவர்களின் மூளையில் நடந்த மாற்றங்களால் நுண் உணர்வுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதில் 76 சதவிகித மாணவர்கள் சமூக ஊடகங்களை வகுப்புகளிலும், 40 சதவிகிதத்தினர் வாகனம் ஓட்டும் போதும்கூடப் பயன்படுத்தியிருந்தனர். தொடர்ந்து சமூக ஊடகத்தில் மூழ்கி தன்னை மறந்த நிலையில் அவர்களின் நடத்தையிலும் பல மாற்றங்கள் இருந்தன.

அறிவாற்றலிலும் பலவீனமான கூறுகள் ( இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மூளையின் இரண்டு பகுதிகளுக்கான ஒத்திசைவு குறைந்துவிட்டதால், மாணவர்கள் சமன் நிலை இழந்து, பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கவனிக்கும் திறன் குறைவது, இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைந்து அவர்களின் படிப்பும் சமூகத்தில் பழகும் தன்மையும் பாதிக்கப்படுகிறது என்றார் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓஃபிர் டூரில்.

மாணவர்களின் நிலை இதுவென்றால், மற்றவர்களில் 63 சதவிகித மக்கள் ஒருவருடன் மற்றவர் உரையாடிக் கொண்டிருக்கும்போது தவிர்க்க முடியாமல் தங்கள் மொபைலை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். 65 சதவிகிதத்தினர் அலுவலக வேலை நேரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய வேலை செய்வதற்கு பதில் சமூக ஊடகத்தைப் பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வுபூர்வமாக தெரிந்துவிட்டதால் அவற்றை அளவாக பயன்படுத்தும் படி மக்களுக்கு ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வு அறிக்கை ஜெர்னல் ஆஃப் மேனேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ளது. அதாவது, இந்த சமூக ஊடகப் பாதிப்பு அதிகம் மக்களை தாக்காமல் இருக்கும்போது, வந்த ஆராய்ச்சி. நிச்சயம் தற்போது இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளியாகியிருந்தால், ஆய்வு முடிவு பேரதிர்ச்சியை அளிக்கலாம்.

இனி அடுத்த முறை சமூக ஊடகத்தைத் திறந்து, எத்தனை லைக்ஸ், எவ்வளவு ஷேர்ஸ், எத்தனை புதிய நட்புக் கோரிக்கை என்று பார்துக்கொண்டே இருக்காதீர்கள். ஒரு நாளைக்கு இத்தனை முறை மட்டுமே பார்க்க வேண்டும் என் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். செல்போன் போன்ற டிஜிட்டல் ஊடகங்களுக்கு அடிமையாகாமல், மனக் கட்டுப்பாட்டுடன் அவற்றை உங்கள் தேவைகளுக்காகவும் தொழில்நுட்பமாக மட்டுமே பயன்படுத்தினால் அது வளர்ச்சிக்கான பாதையில் அழைத்துச் செல்லும் என்பது உண்மையிலும் உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com