
பிளாஸ்டிக் அல்லாத ஜூலை மாதம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியிருக்கும் நிலையில், மனிதனின் ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள், தற்போது, கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையில் கூட நுழைந்துவிட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
5 மில்லி மீட்டருக்கும் குறைவான மிகச் சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனித உடலுக்குள் பல்வேறு வழிகளில் ஊடுருவி, மிக முக்கிய உடலுறுப்புகளுக்குள் அத்துமீறி நுழைகின்றன. இது மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
ஏற்கனவே, மனித ரத்தம் மற்றும் சுவாசித்தல் மூலம் நுரையீரலில் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மனித குலத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் மூளை, கருமுட்டை, நஞ்சுக்கொடி, தசைப் பகுதியிலும் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் ஊடுருவி விட்டதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
இதன் மூலம், மனிதர்கள் நரம்பியல் மாற்றங்கள், புற்றுநோய், கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மை அறியாமல் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலம், பிளாஸ்டிக் நுண்துகள்கள் நமது உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து, அது முக்கிய உடலுறுப்புகளுக்குள் நுழைகிறது. இதுவரை, பிளாஸ்டிக் இல்லாத உலகம், பிளாஸ்டிக் இல்லாத வீடு என்றளவில் இருந்த விழிப்புணர்வு, இனி நமது உடலையும் பிளாஸ்டிக்கிலிருந்து காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்கள், ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும் என்றும், பேக் செய்யப்பட்டு வரும் பொருள்களை சாப்பிடவே வேண்டாம் என்றும், குழந்தைகளுக்கும் அதுபோன்ற பொருள்களைக் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்கள்.
பாட்டில், ஸ்டீல் போன்ற கோப்பைகளில் தண்ணீர் அருந்துவது, உணவு சாப்பிடுவதை மேற்கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தாலும் பிளாஸ்டிக் பொருள்களில் உணவு சாப்பிட வேண்டாம் என்றும் இது மிகச் சிறிய முயற்சிதான், ஆனால் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள்.
ஜூலை மாதம் முதல் செய்யத் தொடங்க வேண்டியது என்னவென்றால்...
கையில் எப்போதும் துணிப் பை வைத்திருப்போம். பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்ப்போம்.
குடிநீர் பாட்டீல்களையும் கண்ணாடி பாட்டில் அல்லது ஸ்டீல் பாட்டில்களாக மாற்றுவோம்.
பாக்கெட் செய்யப்பட்ட உணவு தானியங்கள் வாங்குவதைத் தவிர்ப்போம்.
பிளாஸ்டிக் ஸ்டிராக்களை தவிர்த்துவிடுவோம்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பொருள்களுக்கு மாற்று யோசிப்போம்.
வீட்டில் உணவுப் பொருள்களையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைப்பதை நிறுத்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.