

என் வயது 49. வலது புறம் சாய்ந்த நிலையில் டிவி பார்ப்பது வழக்கம். தற்போது இடது தோள்பட்டையில் வலி எடுக்கிறது. நாற்காலியில் அழுந்த உட்கார்ந்தால் இடது கை முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தடை ஏற்படுகிறது. சில நேரம் அதிகமாக உட்கார்ந்தால் கால் மரத்துப் போய் வலியும் இருக்கிறது. நின்றால் அதுபோல இல்லை. இதற்கு ஆயுர்வேத மருத்துவம் என்ன? சங்கர சுப்பிரமணியன், கோரம்பள்ளம்.
அழுந்த உட்கார்வதால் முதுகுத் தண்டுவட எலும்புகளின் இடையே அமைந்துள்ள வில்லைகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக இரத்த ஓட்டமும் மரத்துப் போகும் வலியும் ஒரு சேர ஏற்படலாம். நிற்கும்போது வில்லைகளில் ஏற்படும் அழுத்தமானது தொய்வடைந்து அவை சீரான நிலைக்கு வருவதால் நன்றாக இருப்பதுபோல தோன்றும். முதுகுத் தண்டுவடத்தை முழுவதுமாக ஙதஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா, அதன் வழியாக இடதுகை முழுவதும் இரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்படுகிறதா? என்பதைத் துல்லியமாக அறியலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும், உணவு ஏற்கும்பொழுதும் வேறு எந்த நிலையிலும் நேராக நிமிர்ந்து அமர்ந்து பாதங்கள் தரையில் நன்றாக அழுந்தும்படி வைத்துக் கொண்டு செய்வதே தண்டுவட உபாதைகளைத் தவிர்க்க உதவும். நேர்சீராக அமர்பவர்களுக்கு செய்யக் கூடிய செயல்களில் சிரத்தையும், அவற்றை திறம்பட முடிக்கக் கூடிய சாமர்த்தியமும் வளரும் என்பது ஆயுர்வேதத்தின் உபதேசமாகும். அதனால் நீங்கள் நேராக நிமிர்ந்து அமர்ந்து செயல்களைச் செய்து ஏற்பட்டுள்ள பல பிரச்னைகளிலிருந்தும் விடுபடலாம்.
ஆவரண வாயு என்ற வாயுவைப் பற்றிய வர்ணனை ஆயுர்வேத புத்தகங்களில் காணப்படுகிறது. எந்நேரமும் நகரக்கூடிய தன்மை கொண்ட வாயுவைச் சுற்றி சூழ்ந்து கொள்ளும் மாமிசம், மேதஸ் போன்ற தாதுக்களாலும், கபம் எனும் தோஷத்தினாலும் வாயுவினுடைய சஞ்சாரம் தடையுறும்பொழுது அது இரத்த ஓட்டத்தை ஒரு பகுதியில் நிறுத்தக் கூடும். உடலை மரத்துப் போகும்படி செய்துவிடும். அப்பகுதியில் கடுமையான வலியையும் உணர்த்தும். இது போன்ற நிலையில் வாயுவை அகற்றக் கூடிய சிகிச்சை எந்தவிதத்திலும் பலன் தராது. அதைச் சூழ்ந்துள்ள மாமிசம், மேதஸ், கபம் போன்றவற்றை அகற்றுவதற்காக மூலிகைப் பொடி ஒத்தடங்களையும், இலை ஒத்தடங்களையும் ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது.
ஒற்றைக் குளம்புள்ள மிருக வர்க்கங்களாகிய குதிரை, கழுதை போன்றவற்றின் சாணியை வெயிலில் உலர்த்தி அவற்றின் நீர்ப்பசையை அகற்றி மூட்டையாக்கி சூடேற்றி ஆவரண வாயு ஏற்பட்டுள்ள பகுதியில் ஒத்தடம் கொடுப்பதால், வாயுவைச் சூழ்ந்துள்ள மாமிசம், மேதஸ் மற்றும் கபம் நீங்கி அதன் மூலம் சிறையிலிருந்து விடுபடும் ஒரு கைதியை போல சுதந்திரமடைந்து வாயுவின் சஞ்சாரம் எளிதாக நடைபெறத் தொடங்கினால் பலவிதமான உடல் வலிகளிலிருந்தும் நம்மால் எளிதாக நிவாரணம் பெற முடியும். அதன் பிறகு வாயுவினுடைய சீரான நடைக்காக மூலிகை எண்ணெய்த் தேய்ப்பு முறைகளைச் செய்யலாம் என்றும் ஆயுர்வேத அறிவுரைகள் கூறப்படுகின்றன.
உத்வர்த்தம், கொட்டஞ்சுக்காதி, ராஸ்னாதி, ஏலாதி, ஜடாமயாதி என்ற பெயர்களிலெல்லாம் விற்கக் கூடிய ஆயுர்வேத மூலிகைப்பொடிகளில் உங்கள் உடல் தன்மைக்கேற்ப தேர்ந்தெடுத்து காடாதுணியில் மூட்டை கட்டி, தவாவில் சூடாக்கி முதுகுத் தண்டுவடம் முழுவதும் இளஞ்சூடாக காலையில் வெறும் வயிற்றில் சுமார் பதினைந்து முதல் இருபத்தைந்து நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுத்துக் கொள்ள இரத்த ஓட்டம் சீராகும். மரத்துப் போன கால் நரம்புகள் சுறுசுறுப்பாகும். உடல்வலி நன்றாகக் குறையும். ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய மஹாராஸ்னாதி, ஸஹசராதி, ராஸ்னா ஏரண்டாதி, ஸப்தஸாரம் போன்ற கஷாயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கிணங்கத் தேர்ந்தெடுத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்களுடைய உடல் உபாதைகள் பெருமளவு குறைய வாய்ப்பிருக்கிறது. உடலின் சதைப்பற்று அதிக அளவில் இல்லாமல் உயரமும் எடையும் சீரான நிலையில் நீங்கள் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
உடலின் சதையைக் கூட்டக் கூடிய உணவுவகைகளை பெருமளவு தவிர்த்தல் நலம். எப்போதும் ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்திருந்து வேலை செய்யாதிருத்தலும், சுறுசுறுப்புடன் கூடிய வாழ்க்கைமுறையும் தங்களுக்கு நலம் பயக்கலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.