சளியை விரட்டும் மருந்துகள்!

பிறந்த குழந்தை முதல் 8 வயது குழந்தைகள் வரை அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்துவிட்டால் உடனடி நிவாரணத்திற்கு
சளியை விரட்டும் மருந்துகள்!
Published on
Updated on
2 min read

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

பிறந்த குழந்தை முதல் 8 வயது குழந்தைகள் வரை அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்துவிட்டால் உடனடி நிவாரணத்திற்கு ஆங்கில மருத்துவத்தையே நாட வேண்டியுள்ளது. அவர்கள் ஆன்ட்டிபயாடிக் கொடுத்து விடுகிறார்கள். இதற்கு மாற்றாக, என்னென்ன மூலிகை மருந்துகள் கொடுக்கலாம்? பெரியோர்களுக்கும் வீட்டு(அ) நாட்டு மருந்துகள் உள்ளனவா?

ந.த. சுரேந்தர்,
வேளச்சேரி,சென்னை.

முதலில் பெரியோர்களுக்கான சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம். சித்தரத்தை வேர் நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும். ஒரு சிறிய துண்டை நசுக்கி வாயில் அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை அவ்வப்போது விழுங்கினால் போதும். தொண்டைக் கரகரப்பு நீங்கும். சளி எளிதாகக் கரைந்து வெளியே வந்துவிடும். குரல் கம்மலும் குணமாகும். அதிமதுர வேரையும் இது போலவே பயன்படுத்தினாலும் குணம் கிடைக்கும். கடுக்காயைத் தணலிலிட்டுச் சுட்ட பிறகு, அதன் தோலை சிறிதளவு வாயிலடக்கிக் கொண்டிருந்தால், சளி, இருமல் குறைவதோடு,தொண்டையில் சதை வளர்ந்தோ அல்லது அழற்சியும் புண்ணும் ஏற்பட்டிருந்தால் அவையும் குணமாகும். ஆடாதோடையின் வேர், முசுமுசுக்கையின் இலை, சித்தரத்தை, அதிமதுரம், ஜடாமாஞ்சில் இவற்றை சம அளவாக எடுத்து, பெருந்தூளாக இடித்து வைத்துக் கொள்ளவும். இந்தத் தூளில் 50 கிராம் எடுத்து, அத்துடன் 300 மிலி தண்ணீர் சேர்த்து, சிறு தீயில் காய்ச்சி, 120 மி.லி. ஆனதும் இறக்கி, கஷாய மருந்துகளை நன்றாகக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி, வேளைக்கு 15 மி.லி. முதல் 30 மி.லி. வரை தினம் 3 அல்லது 4 வேளை சாப்பிட்டுவர, ஜலதோஷம், சளி, இருமல், காய்ச்சல் குணமாகும்.

இதே மருந்துகளைக் கொண்டு தயாராக்கிய கஷாயம் 500 மி.லி. எடுத்து, அதில் 250கிராம் சீனா கற்கண்டைக் கரைத்து, மறுபடியும் வடிகட்டி, அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். தேன் பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும். இந்த சிரப்பை 5 மி.லி. முதல் 10 மி.லி. வரை, தினம் 3-4 வேளை சாப்பிட்டு வந்தாலும், ஜலதோஷம், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

சிலருக்கு சளியுடன் ரத்தம் கலந்து வரும். அவர்கள், ஆடாதோடையின் இலையை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, பிட்டு (அ) இட்லி போல ஆவியில் வேக வைத்து, சூடாயிருக்கும் போதே பிழிந்து, 50 மி.லி. சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 15 மி.லி. தேனை விட்டு நன்றாகக் கலந்து, 10 மி.லி. அளவு தினம் 4 முதல் 6 வேளை சாப்பிட, நல்லகுணம் பெறலாம்.

சளி முறிவதற்கும், உலர்வதற்கும், சளி முட்டிக் கொண்டு முகமெல்லாம் புடைத்து வீங்கிக் கொண்டு சகிக்க முடியாத தலைவலியும், காய்ச்சலும் குணமடைவதற்கும் வெற்றிலைக்காம்பு, லவங்கம் (அ) கிராம்பு, ஏலக்காய் விதை இவற்றை சம எடையில் எடுத்து, கொஞ்சம் பால் சேர்த்து அம்மியிலிட்டு அரைத்து, சிறுவில்லைகள் தட்டி, வெய்யிலில் உலர்த்தியதை, பாலிலேயே கரைத்துச் சூடாக்கி, களிபோல் கிண்டியதை, நெற்றி, உச்சந்தலையில் பற்றுப் போடுவதால் விரைவில் குணமடைவார்கள். மிளகை நெய்யில் வறுத்துப் பொடித்து வெல்லப்பாகில் கலந்து உருட்டி வைத்துக் கொள்ளவும். இதில் ஒன்றை வாயில் அடக்கி, உமிழ்நீரை விழுங்க, ஓட்டை வெங்கலத்தின் தொனியில் இருக்கும் இருமல் குணமாகும்.

1-12 வயது குழந்தைகளுக்கு- வசம்பைச் சட்டியிலிட்டுச் சுட்டு சாம்பலாக்கிய பொடியை, ஒரு சிட்டிகை எடுத்து தேனுடனோ, தாய்ப்பாலில் குழைத்தோ நக்கச் செய்வது நலம். குங்குமப்பூவைத் தாய்ப் பாலுடன் அரைத்து நெற்றிப் பொட்டுகளில் பற்றிடலாம். அது உலர, உலர மேன்மேலும் பற்றிடலாம். கடுகரோஹிணி என்னும் மருந்தைச் சூரணமாக்கி, உச்சந்தலையில் தேய்த்து ஊதிவிட, சளியின் முட்டல் குறையும்.

1 1/2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெற்றிலைச் சாற்றுடன் சிறிது தேனும் கூட்டி, சிறிய அளவில் 2-3 வேளை நாக்கில் தடவலாம். துளசி இலைகளை அவித்து, பிழிந்தெடுத்த சாற்றுடன் சிறிது தேனும் கூட்டிக் கொடுக்கலாம். இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆடாதோடை இலை, துளசி இலை, கருந்துளசி இலை, வெற்றிலை இவற்றின் சாறு பிழிந்து கற்கண்டு கூட்டிக் காய்ச்சிய சிரப் பயன்படுத்தலாம்.

வியாக்ரயாதி கஷாயம், தசமூலகடுத்ரயம் கஷாயம், பலாஜீரகாதி கஷாயம், நயோபாயம் கஷாயம், வாஸாரிஷ்டம், கனகாஸவம், ஹரித்ராகண்டம், வியோசாதிவடகம், ஆசால்யாதிகுடிகா போன்ற தரமான மருந்துகள் விற்பனையாகின்றன.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com