

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
என் வயது 56. சில ஆண்டுகளாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. ஒரு நாளில் ஒரு தடவை போனால்கூட மலம் தண்ணீராகப் போகும். சில நாள்களில் மூன்று தடவை ஆகிவிடும். உடல் சோர்வு, பலவீனம், காய்ச்சல் உணர்வு, தளர்ச்சி, தலை சுற்றல் இவை இருக்கும். ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். வயிறு சூடாக இருக்கிறது. வயிற்றில் பூச்சிகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். இவற்றிற்கான தீர்வு என்ன?
எம்.பாத்திமா, உறையூர், திருச்சி.
வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்களை மாதவ நிதானம் எனும் ஆயுர்வேத நூல் கீழ்க்காணும் வகையில் விவரித்துக் கூறுகிறது. எளிதில் செரிக்காத உணவுப் பொருள்களை அதிக அளவில் சாப்பிடுதல், நெய்ப்பைத் தரும் உணவாகிய நெய், எள், தேங்காய்ப்பால், பால் பொருட்களை அதிகம் உண்ணுதல், வறட்சி, சூடு, திரவம், குளிர்ச்சி போன்ற குணங்களைக் கொண்ட உணவு வகைகளை அதிகம் பயன்படுத்துதல், ஒன்றோடொன்று அநேக உணவுப் பொருள்கள் சேர்ந்து வயிற்றில் விஷத்தன்மையடைதல், அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், முன் உண்ட உணவு செரிமானமாகாமலிருக்கையிலேயே மீண்டும் சாப்பிடுதல், ஒரு நியமமுமில்லாமல் சொற்ப அளவிலும், அகாலத்திலும் உணவை உண்ணுவதாலும், விஷங்களாலும், கடும் பயத்தினாலும், மனத் துயரத்தினாலும், கெட்டுப்போன தண்ணீரை அருந்துவதாலும், பிறவியிலேயே உடலுக்கு அனுகூலமல்லாத உணவையும், பிற்காலத்தில் பழக்கத்தினால் பழகிக் கொண்ட உணவும் ஒத்துக்கொள்ளாத நிலை வரும்போதும், அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்றவையல்லாத பதார்த்தங்களாலும், தண்ணீரில் அதிக நேரம் நீச்சலடித்துப் பழகுவதாலும், இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர், குடல் காற்று, கண்ணீர், தூக்கம், பசி போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குவதாலும், குடலிலுண்டாகும் பூச்சிகளாலும், இதர நுண்ணுயிர்களாலும் உற்பத்தியாகும் குடல் பாதிப்புகளாலும், மலம் நீர்த்து பேதியாகக் கூடும்.
நீர்மயமான அன்னசாரம், சிறுநீர், வியர்வை, கொழுப்பு, கபம், பித்தம், ரத்தம் போன்றவை மேற்குறிப்பிட்ட காரணங்களால் சீற்றமடைந்து, ஜாடராக்னி எனும் பசித்தீயை மிகவும் மந்தமாக்கி மலத்துடன் கலந்து, அபான வாயுவினால் கீழ்நோக்கித் தள்ளப்பட்டு, திரவமாக அதிகமாய் வெளிப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட காரணங்களை நீங்கள் தவிர்த்து, வெளியேறிக் கொண்டிருக்கும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைத் தடுத்து நிறுத்தி, பசித்தீயைத் தூண்டிவிடும் வகையிலும், அபான வாயுவின் சீற்றத்தை அடக்கி, தன் இருப்பிடம் நோக்கித் திரும்பும் வகையிலும் மருந்துகளைச் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தாடிமாஷ்டகம் எனும் சூரண மருந்தை ஐந்து கிராம் வீதமெடுத்து, பத்து மி.லி. தேனுடன் குழைத்து - காலை மாலை வெறும் வயிற்றில் சுமார் பதினான்கு நாள்களுக்குச் சாப்பிடவும். அதன் பிறகு, தூடிமாதி கிருதம் எனும் நெய் மருந்தை உருக்கி, சுமார் பதினைந்து மி.லி. காலை, மாலை வெறும் வயிற்றில் இருபத்தியொரு நாள்கள் சாப்பிடவும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்து, பசியை நன்றாகத் தூண்டிவிட்டு, அபான வாயுவின் சீற்றத்தை மட்டுப்படுத்தி, மலத்தையும் இறுக்கச் செய்யும் இந்த நெய் மருந்து, பெண்களுக்கான மாதவிடாய்க் கோளாறுகளையும் குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும்.
உணவில் - வில்வப்பிஞ்சு, கோரைக்கிழங்கு ஆகியவற்றை பத்து கிராம் வீதமெடுத்து, முந்நூறு கிராம் பச்சரிசியுடன் சேர்த்து, இரண்டரை லிட்டர் தண்ணீர் விட்டு, கஞ்சி பதத்திற்குக் காய்ச்சி வடிகட்டி, சிறிது மோர் மற்றும் இந்துப்பு கலந்து காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. மதியமும் இரவும் மோரையே முக்கிய உணவாகக் கொண்டு பச்சரிசி சாதத்துடன் சாப்பிடலாம். மைதா, எண்ணெய் பொருட்கள், பிரெட், சாஸ் வகைகள், புலால் உணவு ஆகியவற்றைத் தவிர்க்கவும். ஒரு வாரத்திலேயே நல்லதொரு மாற்றத்தை இந்த பத்திய உணவு ஏற்படுத்தித் தரும். தண்ணீரை அதிக அளவில் குடிப்பதைத் தவிர்க்கவும். படுக்கும்போது இடது பக்கமாகச் சரிந்து படுக்கவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.