பேலியோ டயட் பின்பற்றுவோருக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரை

PALIO DIET உணவுப் பொருட்கள் வயிற்றிலுள்ள அமிலத் திரவங்களின் வழியாக செரிக்கப்படும் போது அவற்றிலிருந்து இனிப்பு வெளிப்படாது.
பேலியோ டயட் பின்பற்றுவோருக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரை
Published on
Updated on
2 min read

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

கடந்த இரண்டு மாதங்களாக, நீரிழிவு நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்காக, ஒரு பிரபல அலோபதி நீரிழிவு சிகிச்சை நிபுணரின் ஆலோசனைகளின்படி முழுவதும் அரிசி, கோதுமை, ரவை, சிறு தானியங்கள், இனிப்புகள், கிழங்குகள் எல்லாவற்றையும் அறவே தவிர்த்துவிட்டு, வேகவைத்த பச்சை காய்கறிகள், நிறைய வெண்ணெய், பனீர் (COTTAGE CHEESE) ஆகியவற்றையும், வெள்ளரி போன்றவற்றை உண்டு வருகிறேன். PALIO DIET என்ற இந்த வகை உணவே மருந்து என்ற சிகிச்சை பற்றிய ஆயுர்வேத அடிப்படையில் தங்கள் கருத்து என்ன?

-சுப்ர. அனந்தராமன், சென்னை-40.

நீங்கள் குறிப்பிடும் உணவுப் பொருட்களில் இனிப்பு சுவை மிகக் குறைவு என்பது மட்டுமல்ல காரணம். 


PALIO DIET உணவுப் பொருட்கள் வயிற்றிலுள்ள அமிலத் திரவங்களின் வழியாக செரிக்கப்படும் போது அவற்றிலிருந்து இனிப்பு வெளிப்படாது. மேலும் இது போன்ற உணவின் சத்து தனியே பிரிக்கப்பட்டு ரத்தத்துடன் கலந்த பின்னரும் புலப்படாத அளவிற்கு சிறிய அளவிலேயே இனிப்பு உருவாகும். ஆயுர்வேதம் இவ்வகை உணவுகளை மூன்று ரகமாகப் பிரிக்கிறது. சுவையில் இனிப்பில்லாதவை, சீரண இறுதியிலும் இனிப்பாக மாறாதவை (இதற்கு விபாகம் என்று பெயர்), உணவுச் சத்தாக மாறிய நிலையிலும் இனிப்பை வெளிக்காட்டாதவை (இதற்கு நிஷ்டாபாகம் என்று பெயர் ).

இதற்கு நேர் மாறாக உள்ள கார்போஹைட்ரேட் வகை உணவுகளை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம். சர்க்கரை, மாச்சத்துள்ளவை என. பால், கரும்பு, திராட்சை முதலியவைகளின் இனிப்புப் பகுதி சர்க்கரையாகும். அரிசி, ரவை, கோதுமை, சோளம் முதலியவைகளிலும் ஒரு வகை சர்க்கரை உண்டு. இதை தானிய சர்க்கரை என்பர். இந்த சர்க்கரை ஜீரண காலத்தில் வெளியாகும். அரிசியை வாயிலிட்டுச் சுவைக்கும் போது அரிசிமா உமிழ் நீரில் கலந்துள்ள ஜீரண சக்தி உள்ள திரவத்துடன் கலக்கும் போது அந்த மா சர்க்கரையாகப் பக்குவமடைகிறது. இது PALIO DIET உணவுகள் மூலமாக ஏற்படுவதில்லை.

தானியங்களை முளைகட்டியோ, இட்லி முதலியவற்றுக்கான மாவாக அரைத்துப் புளிக்க வைத்தோ, உடலினுள் நடைபெற வேண்டிய ஜீரணத்தில் ஓரம்சத்தை வெளியிலேயே நடத்திவிடுகிறோம். அதனால் இட்லி எளிதில் ஜீரணமாக கூடியது, ராகிமால்ட் எளிதில் ஜீரணமாகக் கூடியது என்று கூறுகிறோம். அதாவது அவை ஓரளவு ஜீரணிக்கப் பெற்றவை (PREDIGESTED) என்ற கருத்து. ஜீரணம் சரியே இல்லாத பசி மந்த நிலையில் இந்த மால்டுகளும் இட்லியும் நல்ல உணவாகின்றன என்பது இதன் கருத்து.

வேக வைத்த காய்கறிகளை நீங்கள் சாப்பிடும் போது, ஜீரணதிரவங்களுக்கு அவற்றை செரிக்கவைப்பதில் கஷ்டமிருக்காது. ஆனால் அவற்றை இட்லிமாவு போல, புளிக்கவைத்து, ஜீரணிக்க அனுப்பி வைக்கும் சிறப்பை நீங்கள் இழப்பதால், சீரண கேந்திரங்களுக்கு ஏற்படக் கூடிய நெய்ப்பு, வழுவழுப்பு, நீடித்த நிலைப்பு போன்ற நன்மை தரும் பல குணங்களும் கிட்டாது போகின்றன. 

மாவுப்பண்டங்களையும், நீங்கள் குறிப்பிடும் PALIO DIET வகைகளையும் ஜீரணிக்கும் சக்தி உமிழ் நீரிலும் அக்னியாசயம் எனும் பாங்கிரியாசில் சுரக்கும் ஜீரண திரவங்களையும் சார்ந்தே இருக்கிறது. இந்தத் திரவங்களின் சக்தி குறைந்தால் இரைப்பையினுள் சென்று அங்குள்ள புளிப்பான ஜீரண திரவங்களின் வசப்பட்டு, புளிப்பு எல்லை மீறும் போது வயிற்றுவலி, வேக்காளம் முதல், யூரீமியா என்ற ரத்தப் புளிப்பு நிலைவரையிலுள்ள நிலைகளுக்குக் காரணமாகிறது. செரிமான இயந்திரங்களைச் சுறு சுறுப்பாக வைத்திருக்க உதவும் பெருங்காயம், சீரகம், ஓமம், கடுகு, சோம்பு, கிராம்பு, சுக்கு, மிளகு, குண்டுமிளகாய், ஏலக்காய் போன்ற பொருட்கள் PALIO DIET இல் இருக்கிறதா? இருந்தால் கால ஓட்டத்தில், செரிமானக் கோளாறுகள் ஏதும் ஏற்படாமல், உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

வேக வைக்காத வெள்ளரி, வெங்காயம், தக்காளி போன்றவை பச்சையாக உட்கொள்வதாக கூறுகிறீர்கள். அவை உரம் போடாமல் இயற்கையாக வளர்க்கப்பட்டவையா? அவற்றினுள் உரமிருந்தால் திறந்திருக்கும் பாத்திரத்தில் வேகவைக்கும் போது அவை வெளியேறக் கூடும். பச்சையாகச் சாப்பிட்டால் உரம் வயிற்றினுள் சென்று ஏற்படுத்தும் கெடுதிகளை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். உளுந்தும், சோளமும் கடலைப்பருப்பும் சற்று கனமான உணவுப் பொருட்கள். அவை எளிதில் ஜீரணமாவதற்காகச் செய்யப்படும் பாகங்களே ஊற வைத்தும் , புளிக்க வைத்தும் ஆவியில் வேக வைத்தும் சுட்டும் செய்யப்படும் பாக முறைகள். ஆகவே அவை எளிதில் செரிக்கின்றன. நிறைய வெண்ணெயும், பனீரும் (COTTAGE CHEESE) சாப்பிடும் நீங்கள், அவற்றை ஜீரணிக்கும் சக்தியற்ற நிலையிலிருந்தால், சர்க்கரை அதிகரிக்காது. ஆனால் அவை செரிமானமாகாமல், ரத்தத்திலும் உடல் உட்புறக் குழாய்களில் படிவங்களாலும் மாறி துன்பத்தை ஏற்படுத்தும்.

உமிழ் நீரிலிலுள்ள ஜீரணத்திரவம் நெருப்பில் வெந்த அல்லது சுட்ட பதார்த்தங்களைத் தான் ஜீரணிக்க முடியும். ஆனால் இந்த அக்னியாசய திரவம் நெருப்பில் பக்குவமாகாததைக் கூட ஜீரணித்துவிடும். அதனால் நீங்கள் எந்த வகையான DIET சாப்பிட்டாலும், செரிமானத்தினுடைய சக்தியை இழக்காத வரையில் ஆரோக்கியத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். சர்க்கரையின் அளவையும் கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com