பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!

மூளையை பாதிப்புறச் செய்யும் ஒரு வகை வாதநோய் இதுவென்பதாலும், அதன் சீற்றத்தை அடக்கி, மூளையிலுள்ள நரம்புகளை வலுப்பெறச் செய்து, அங்குள்ள சுரப்பிகளின் குறைபாடுகளைச் களைய வேண்டியிருப்பதாலும்,
பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!
Published on
Updated on
2 min read

என் மனைவிக்கு வயது 65. கடந்த ஆறு ஆண்டுகளாக பார்க்கின்ஸன்ஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலிருந்து எழும் போது, நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். SYNCAPONE 100 எனும் ஆங்கில மாத்திரை சாப்பிட்டால் அரை மணி நேரம் கழித்து இயல்பான நிலைக்கு வருகிறார்கள். இந்த உபாதை நீங்க, கட்டுப்பாட்டுக்குள் இருக்க வழி என்ன?

-மா. தமிழ்மணி, திருநெய்ப்பேர், 
திருவாரூர் (மா)
 

மூளையை பாதிப்புறச் செய்யும் ஒரு வகை வாதநோய் இதுவென்பதாலும், அதன் சீற்றத்தை அடக்கி, மூளையிலுள்ள நரம்புகளை வலுப்பெறச் செய்து, அங்குள்ள சுரப்பிகளின் குறைபாடுகளைச் களைய வேண்டியிருப்பதாலும், மருத்துவத்தில் சில கடுமையான சிகிச்சை முறைகளான - மூலிகை நெய், தைல மருந்துகளைப் பருகுதல், நசியம் எனும் மூக்கில் மருந்து விடும் முறை, அனுவாஸன வஸ்தி எனும் ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலங்களை மலப்பையினுள் செலுத்துதல், அதனால் ஏற்படும் வாயுவினுடைய விடுபட்ட நிலையை நன்கறிந்து, கஷாயவஸ்தி எனும் மூலிகை கஷாயங்களை ஆசனவாய் வழியாக, மலப்பையினுள் செலுத்தி, அதை அவ்விடம் விட்டு வெளியேறச் செய்தல், தலை மற்றும் உடல் பகுதிகளில் மூலிகைத் தைலங்களை வெது வெதுப்பாகத் தேய்த்து ஊற வைத்து, நீராவிப் பெட்டியினுள் உட்கார வைத்து, வியர்வையை ஏற்படுத்துதல், சித்தாமுட்டி வேர்க் கஷாயத்தை, நவர அரிசியுடன் வேக வைத்து, பால் கலந்து மூட்டைகட்டி உடலெங்கும் தேய்த்துவிடும் சிகிச்சை முறை என்றெல்லாம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு அவர் ஆட்பட்டுவிடுகிறார். மருந்துவனிடம் என்னை நீ அவ்வளவு எளிதாக சரி செய்து விட முடியுமா? என்று சவால் விடும் நோய் இதுவாகும்.

மூளையை வலுப்படுத்த, இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை சுமார் 15 - 20 மி.லி. நீராவியில் உருக்கி, காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் விதார்யாதி எனும் நெய் மருந்தை, 15 - 20 மி.லி. நீராவியில் உருக்கி வெறும் வயிற்றில் குறைந்தது 21 நாட்களாவது சாப்பிட வேண்டிய அவசியமிருக்கிறது. அதிக பட்சம் 48 நாட்கள் சாப்பிடலாம். ஒவ்வொரு முறையும் நெய் மருந்தை சாப்பிட்டதும், சிறிது வெந்நீர் அருந்த வேண்டும். இதனால், மருந்தானது விரைவில் செரித்து, குடல் வழியாக உறிஞ்சப்பட்டு, அதன் வீர்யமானது மூளையை வேகமாகச் சென்றடையும். நெய் மருந்தினுடைய முழு வீரியமும் உடலினுள் வந்தடைந்துள்ள விபரத்தை, அறிந்து கொள்ளக் கூடிய உபாயங்களையும் ஆயுர்வேதம் கூறியுள்ளது. பசி தீவிரமாக எடுத்தல், குடல் அழுக்குகள் முழுவதுமாக நீங்குதல், உடல் உட்புற உறுப்புகள் நன்கு வலுவடைதல், உடல் நிறம் தேறுதல் போன்றவை ஏற்படத் தொடங்கும்.

அதன் பிறகு, பசியினுடைய தன்மை சீராக இருப்பதாக அறிந்தால், எளிதல் செரிக்க முடியாததும், நாடி நரம்புகளை வலுப்படுத்தக் கூடிய மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், காலையிலும் இரவிலும், உணவிற்குப் பிறகு, தசமூலரஸôயனம் எனும் லேகிய மருந்தை 1 - 2 ஸ்பூன் (5 - 10 கிராம்) அளவில் நக்கிச் சாப்பிட வேண்டும். தலைக்கு ,க்ஷீரபலா தைலம் பயன்படுத்தலாம். தலைக்குக் குளித்த பிறகு, ராஸ்னாதி சூரண மருந்தை, ஏலாதி சூரண மருந்துடன் சிறிது கலந்து, உச்சந் தலையில் பூசலாம்.
இந்த உபாதைக்கு என்ன தான் சிகிச்சையை வளைத்து வளைத்துச் செய்தாலும் குணம் காண்பது என்பது முழுவதுமாகக் கிடைப்பதரிதாகவே இருக்கிறது. மூளை - இதயம் - சிறுநீரகங்கள் ஆகிய மூன்று பகுதிகளுக்கு "த்ரிமர்மீயம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. ஆக மொத்தமுள்ள நூற்றியேழு உடல் மர்ம ஸ்தானங்களில், இம் மூன்று மட்டுமே மிகவும் முக்கியமானது. எளிதில் நோய் தாக்காதவாறு அவை நன்கு மறைக்கப்பட்டிருப்பதன் ரகசியமே, அவற்றின் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

உணவில் காரம் - கசப்பு - துவர்ப்புச் சுவை குறைத்து இனிப்பு - புளிப்பு - உப்புச் சுவைகளை மிதமாகச் சேர்க்கலாம். தலைக்குக் குளிர்ந்த நீர் பயன்படுத்துவதை நிறுத்தி வெது வெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தலே நலம். 

ஏசி அறையில் அதிக நேரம் படுத்து உறங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஓமம், சீரகம் , சுக்கு ஆகியவை தட்டிப்போட்டுக் காய்ச்சிய வெந்நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்தலாம். 

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com