புதையல் - 1

வேலூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் ஓர் அரசு உதவிப் பெறும் பள்ளிதான் நம் கதைக்களம்,
புதையல் - 1

வேலூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் ஓர் அரசு உதவிப் பெறும் பள்ளிதான் நம் கதைக்களம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமான அதன் பழமையை நினைவூட்டும் விசாலமான வகுப்பறைகள், பெரிய சாளரங்கள், சிவப்பு வண்ணம், பரந்த விளையாட்டு மைதானம் என எவரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி, ஒழுக்கத்தில் மிகச்சிறந்த பல வெற்றியாளர்களை உருவாக்கியப் பள்ளி என்று புகழ் பெற்றிருந்த இப்பள்ளி, சாரியான வழிகாட்டுதலின்றி பள்ளி மாணவர் மாணவியரின் ஒழுக்கமும் தேர்ச்சி விகிதமும் ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் மாணவர் சேர்க்கை வீதம் குறைந்து, அதிகப்படியாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யும் சூழல் உருவாகிவிட்டது இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் பிள்ளைகளின் குடும்பப் பின்னனியைக் காரணம் காட்டி, பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், பிள்ளைகளை வீட்டில் படிக்க வைப்பது இல்லை, பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள் என்று பல்வேறுவிதமாகத் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் கல்வியாண்டின் முதல் நாளான அன்று புதிய தலையாசிரியர் பொறுப்பேற்கவிருந்தார். வரப்போகிறவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களிடையே பலவித அனுமானங்கள் இருந்தன. ஆசிரியர்களின் ஓய்வறையில் இதைப் பற்றிய விவாதமே நடந்து கொண்டிருந்தது.

(இடம் - ஆசிரியர் ஓய்வறை)

கலியமூர்த்தி: என்னப்பா நம்ம ஸ்கூல் ரிசல்ட் இந்த வாட்டி இவ்ளோ அடி வாங்கிடுச்சு. தமிழ்நாட்டுலயே நம்ம மாவட்டம்தான் ரொம்ப குறைவான ரிசல்ட். அதிலும் நம்ம பள்ளிதான் ரொம்ப மோசமான ரிசல்ட் போல இருக்கே. கல்வி அதிகாரிங்க வந்து கிழிகிழினு கிழிக்கப் போறாங்க.

இளங்கோவன்: ஒரு காலத்துல நம்ம ஸ்கூல் எப்படி கொடி கட்டிப் பறந்தது தெரியுமா? இங்க அட்மிஷன் வாங்க அமைச்சரின் சிபாரிசுக் கடிதத்தோட வரிசையில காத்துக் கிடந்தாங்க.

ராஜாராம்: ஆரம்பிச்சிட்டாருப்பா காலிப் பெருங்காய டப்பா. பழைய பெருமையப் பேசி இப்ப என்ன ஆகப்போகுது. பசங்க அந்த காலத்துல இருந்த மாதிரியா இப்ப இருக்காங்க! எல்லாம் தறுதலைங்க, படிக்குறதுக்கா வருதுங்க? குடுக்குற இலவசத்துக்காகவும், மதியானம் போடுற சாப்பாட்டுக்காகவும் வருதுங்க, அதுவும் மே மாசம் டீச்சர்ஸ் வீடு வீடா போய் புள்ள புடிக்குற வேலை பாத்தாதான் ஸ்கூல்ல இந்த கூட்டமாவது இருக்கு. இல்லைன்னா நாமளும் கடைய கட்டிட்டு கழனி வேலைக்குப் போக வேண்டியதுதான்.

இளங்கோவன்: (முணுமுணுக்கிறார்) உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் ஆசிரியரா ஆனா கல்வியோட தரமும், மாணவர் சேர்க்கையும் குறையத்தானே செய்யும்.

ராஜாராம்: என்ன ஓய் முணுமுணுக்குறீரு? உலகத்துலயே நீர் மட்டும்தான் நல்ல டீச்சருன்னு நினைப்பு உமக்கு. நினைப்புதான் பொழைப்ப கெடுக்கும். ஞாபகம் இருக்கட்டும்.

கலியமூர்த்தி: சரி விடுங்கப்பா. மொத நாளே ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க.

(வெளியே வருகின்றனர். அங்கே ஆசிரியைகள் இருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர்)

ஆனந்தி: பிருந்தா மிஸ், வரப்போற ஹெட்மாஸ்டர் பத்தி ஏதாவது தெரியுமா?

பிருந்தா: அவர் ரொம்ப நல்லவரு, அதிர்ந்து கூடப் பேச மாட்டாருன்னு ஒரு சிலர் சொல்றாங்க. இங்கிலீஷ் மாஸ்டரா இருந்தாலும் எஜிகேஷனல் சைக்காலஜியில டாக்டர் பட்டம் வாங்கியிருக்காரு. மல்டிபிள் இண்டெலிஜென்ஸ் (Multiple Intelligence), நியூரோ லிங்விஸ்டிக் புரோக்ராம் (Neuro linguistic programme) என நிறைய படிச்சிருக்காராம். அதையெல்லாம் இங்கே நடைமுறைப்படுத்தி பள்ளியை சீர்திருத்தப் போறேன்னு டீச்சர்ஸ்யை நிறைய வேலை வாங்குவாருன்னும் சிலர் பேசிக்குறாங்க.

லஷ்மி: ரெளடிங்க அட்டகாசம் அதிகமான ஊருக்கு அதிரடியான என்கவுண்டர் காவல்துறை அதிகாரியைப் போடுறா மாதிரி நம்ம ஸ்கூலை உருப்படியா மாத்தணும்னு இவரை அனுப்பியிருக்காங்களோ?

ராஜாராம்: ஏன் டீச்சர் போட்டு ரொம்பக் குழப்பிக்கிறீங்க. நம்ம சர்வீஸ்ல பாக்காத ஹெட்மாஸ்டரா! வரட்டும் பார்த்துக்கலாம். புதுத் துடைப்பம் நல்லா பெருக்கும்ங்குறா மாதிரி கொஞ்ச நாள் அப்படித்தான் ஏதாவது பண்ணுவாங்க. கொஞ்ச நாள்ல அவரையும் நம்ம வழிக்குக் கொண்டு வந்துடலாம் விடுங்க.

ஆனந்தி: நீங்க சொல்றதும் உண்மைதான் சார். (மணி அடிக்கிறது) பாருங்க மணி கூட அடிக்குது.

(ஹா, ஹாவென சத்தமாய் அவர்கள் சேர்ந்து சிரித்ததும் ஆங்காங்கே நின்றிருந்த மாணவ மாணவியர் திரும்பி வேடிக்கைப் பார்த்தனர். அப்பக்கம் வந்த உதவித் தலைமை ஆசிரியர் 'என்ன இங்கக் கூட்டமா நின்னு அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க" எனக் கடிந்து கொள்ளும் விதமாய் முறைத்ததும் காலை வழிபாட்டுக்கு என அவரவர் வகுப்பு மாணவ மாணவியர் நிற்கும் இடத்தருகில் சென்று நின்றனர். இரண்டாம் மணி அடித்ததும் உடற்கல்வி ஆசிரியர் மேடை மீதிருந்த ஒலிப்பெருக்கி அருகில் சென்று சலசலப்புடன் இருந்த கூட்டத்தை அமைதிபடுத்தி, வழிபாட்டிற்காக ஆயத்தப்படுத்தினார். அப்போது உதவி தலைமை ஆசிரியர் மேடையில் ஏற, அவரைத் தொடர்ந்து மற்றொருவரும் ஏறவே, ‘இவர்தான் புதுத் தலைமை ஆசிரியரா?’ என்ற சலசலப்பு சிறு அலை போல் எழுந்து மீண்டும் அடங்கியது. வழக்கமான தமிழ்த்தாய் வாழ்த்து, தினம் ஒரு திருக்குறள், செய்திகள் வாசித்தல், தேசியக் கொடி ஏற்றியதும் தேசிய கீதம் பாடல ஆகிய நிகழ்வுகளுக்குப் பின், உதவித் தலைமை ஆசிரியரின் வரவேற்புரையில் புதிய தலைமை ஆசிரியரைப் பற்றி மேலும் பல நல்லத் தகவல்களைக் கூறி அவரை அறிமுகப்படுத்தி விட்டு பேசும்படி அழைத்தார்.

தன் இருக்கையை விட்டு எழுந்து ஒலிப்பெருக்கி அருகில் வரும் அவரை வரவேற்கும் விதமாக பிள்ளைகளின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அதற்குக் காரணம் வெறும் வரவேற்கும் சம்பிரதாயம் அல்ல. மிகவும் பிரச்சனைக்குரிய கல்வித் தரத்தில் அடிமட்டத்தில் உள்ள பள்ளி என்பதால் வேறு எவருமே இங்கு வரவிரும்பாத சூழலில் ஏழை எளிய மாணவ மாணவியரின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென தானே விரும்பி சென்னையிலிருந்து இங்கு மாற்றல் கேட்டு வந்துள்ளார் என்று உதவித் தலைமை ஆசிரியர் கூறியதுதான் இந்தக் கைத்தட்டலுக்குக் காரணம்.

ஆறடி உயரம், கண்ணியமானத் தோற்றம், தலைமை ஆசிரியர் என்றாலே கடுகடுப்பான முகத்துடன்தான் இருப்பார் என்ற மரபினை உடைத்தெறியும் விதமான புன்னகையுடன் கூடிய முகம், ஞானத்தை வெளிப்படுத்தும் தீட்சண்யமானக் கண்கள் என் எதிரே இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வண்ணமாய் வந்து நின்ற தலைமை ஆசிரியராம் அறிவொளி, கணீர் என்றக் குரலில் பேசலானார்)

அறிவொளி: நூறாண்டு கால பாரம்பரியம் கொண்ட பெருமை மிகுப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரே, அக இருள் போக்கும் அருமை ஆசிரியப் பெருமக்களே, எதிர்காலத் தூண்களாம் எனதருமைக் கண்மணிகளே! அனைவருக்கும் அன்பு வணக்கம். பல மேதைகளையும், பிரபலங்களையும் உருவாக்கிய சிறப்புமிகு இப்பள்ளியில் உங்களனைவருடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிட்டியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிறர் வரவிரும்பாத பொறுப்பேற்க விரும்பாத இடத்திற்கு நான் வந்திருப்பதாகக் கூறினார்கள். எல்லோரும் நடக்கும் பாதையிலேயே நாமும் நடப்பதால் நமக்கென்ன சிறப்பு? பாதையே இல்லாத காட்டு வழியில் ஒற்றையடிப் பாதையாவது உருவாக்குபவனே சாதனையாளன். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளுமுள்ள சாதனையாளர்களை அடையாளம் காணச் செய்வதே இப்பள்ளியில் எனக்கானப் பணியாகக் கருதுகின்றேன். தனக்குள் மறைந்திருக்கும் ஆற்றலெனும் அற்புதப் புதையலைக் கண்டுபிடிப்பவாரின் பெயர்களே சாரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்படும். அதற்கு ஆணிவேராய் இருப்பது உங்கள் எண்ணங்கள். படிப்பறிவற்ற தன்னுடைய மகன் பலருடைய அறிவுக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியராக ஆக வேண்டும் என்ற ஆசையினாலேயே என் தந்தை எனக்கு அறிவொளி எனும் பெயர் வைத்தார். அந்த எண்ண அதிர்வுகளே என் வாழ்க்கைப் பயணத்தை ஆசிரியப் பணியின் பக்கமாய் வழிநடத்தியுள்ளதாய்க் கருதுகிறேன்.

இன்று காலை நான் சற்று முன்னதாக வந்துவிட்டபடியால் இங்கிருந்த மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆறாம் வகுப்பு மாணவன், ‘சார் எங்கப்பா ஒரு கூலித்தொழிலாளி. குடிகாரர். அம்மா நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சு சம்பாதிக்குற காசுல ரொம்ப கஷ்டப்பட்டுதான் என்னப் படிக்க வைக்குறாங்க. நான் நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து எங்கம்மாவை நல்ல படியா பாத்தக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா இந்தப் பள்ளியில் படிச்சா நல்ல மார்க் எடுக்க முடியாது. வாழ்க்கைல முன்னேற முடியாதுன்னு வெளிய பேசிக்குறாங்க. நான் என்ன பண்றது சார்’ என்று கேட்டான்.

ஓர் ஆறாம் வகுப்பு மாணவன் இவ்வளவு தெளிவாக இருப்பது எனக்கு சந்தோஷம். ஆனால் மற்றவர்கள் நம் பள்ளியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட நாம் என்ன நினைக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். இங்குள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் இது பெருமை மிகுந்த பள்ளி, இப்பள்ளியால் நான் பெருமையடைகிறேன், இப்பள்ளி என்னால் பெருமையடையும்படி நான் நடந்து கொள்வேன் என்று எண்ண வேண்டும். ஒத்த எண்ண அதிர்வுகள் ஒருமித்து சேரும்போது அது நிஜமாவதற்கான சாத்தியக் கூறுகள் தானாகவே உருவாகும்.

நம் பள்ளியின் நிலை தற்போது சற்று தொய்வு கண்டிருக்கலாம். அதையும் ஒரு அனுபவம் எனக்கருதி பாடம் கற்றுக் கொண்டால் மீண்டு வந்து விடமுடியும். இதற்கு ஒன்றே ஒன்றுதான் தேவை.

(தன் பேச்சை சற்றே நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தினார். தான் என்ன சொல்லப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் உற்று கவனிப்பதைக் கண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்)

‘இங்கே, இப்போதே’ என நாம் நிகழ்காலத்தில் வாழ ஆரம்பிக்க வேண்டும் என்பதே இன்றைய அவசர, அவசியத் தேவை. எப்படி இருந்த நம் பள்ளி இப்படி ஆகிவிட்டதே என இறந்த காலத்தைப் பற்றி எண்ணி வருந்துவதாலோ, எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என எண்ணிப் பயப்படுவதாலோ ஒரு பயனும் இல்லை. நிகழ்காலத்தில் வாழ வேண்டும் ஒவ்வொரு விநாடியும் நாம் செய்ய வேண்டிய  கடமைகளை முழு சந்தோஷத்தோடு செய்தால் நமக்கு வர வேண்டியப் பலன் தானாக வந்துசேரும். இதை நீங்கள் புரிந்து கொள்ளக் குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு பரம்பரை விவசாயி தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய உதவியாய் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றிப் போனதால் வேறொரு இடத்தில் கிணறு வெட்டிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரம் தோண்டிவிட்டு தண்ணீர் வரவில்லையென சோர்ந்து போய் உட்கார்ந்து விடுவான். ஒருநாள் அப்படி விரக்தியால் புலம்பிக் கொண்டிருந்த போது, ‘கடவுளே பத்தாண்டுக்கு முன்னாடி முப்போகம் விளைஞ்ச பூமி இப்படித் தரிசா கிடக்கே, கருணை காட்டு,’ எனக் கடவுளை வேண்டினான்.

கடவுளும் மனம் இரங்கி அவனுக்கு காட்சி கொடுத்தார். உனக்கு என்ன வேண்டும் சொல் என்றார். உடனே விவசாயி "கடவுளே! ஏதாவது மந்திரம் பண்ணி என்னைப் பணக்காரனா மாத்திடு" என்றான்.

‘சரி, இங்கே இப்போதே’ என்ற மந்திர வார்த்தையை நீ சரியான விதத்தில் சந்தோஷமா பயன்படுத்தினா பெரிய பணக்காரனா ஆகிடலாம்’ அப்படின்னு சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

உடனே விவசாயி கடவுள் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை விதம்விதமா நூறு தடவைக்கு மேல் சொன்னான். ஒண்ணும் நடக்கவில்லை. என்ன தப்பு செய்கிறோம் என யோசித்துப் பார்த்தான். சந்தோஷமா சொல்லச் சொன்னது நினைவுக்கு வந்ததும் ஆடிப்பாடி சந்தோஷமா மந்திரத்தை சொல்லிப் பார்த்தான். அப்பவும் எதுவும் மாறவில்லை. ஒருவேளை கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரோ என நினைத்தவன் அடுத்த விநாடி, ‘சே, சே கடவுள் அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டார்’, எனத் தன்னைத் தேற்றிக் கொண்டான். கடவுள் என்ன சொன்னார் எனத் திரும்பவும் யோசிச்சுப் பார்த்தான்.

‘இங்கே, இப்போதே’ என்ற மந்திர வார்த்தையை சாரியான விதத்தில் சந்தோஷமாய் பயன்படுத்தினா பணக்காரனா ஆகிடலாம் என்றார்.

சந்தோஷமாப் பயன்படுத்தியாச்சு. ஒண்ணும் மாறலை, சரியாப் பயன்படுத்துறதுன்னா என்னன்னு யோசிச்சான். பணக்காரனாக என்ன செய்யணும். தண்ணீர் இருந்தாத்தான் நான் விவசாயம் பண்ண முடியும். அதுக்கு ‘இங்கே, இப்போதே’ நான் செய்ய வேண்டியது என்ன அப்படின்னு யோசிச்சதும் அவனுக்குப் பொறி தட்டியது.

கடப்பாறையும், மண்வெட்டியையும் எடுத்துக் கொண்டு சந்தோஷமா பாதியில் நின்று போயிருந்தக் கிணறைத் தோண்டத் துவங்கினான். ஒரு அடி தோண்டியதுமே ணங், ணங் என சத்தம் வரவே கையால் மண்ணைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் பெரிய பெட்டி நிறைய தங்கமும், வைரமுமான புதையல் இருந்தது. கடப்பாறையைக் கொண்டு பக்குவமா அதைத் தூக்கியதுமே அடைபட்டிருந்த நீர் ஊற்று சுரந்து குபுகுபுவென தண்ணீர் வரத் தொடங்கியது. அப்போதுதான் அவனுக்கு ‘இங்கே, இப்போதே’ என்ற மந்திர வார்த்தையின் வல்லமை புரிந்தது. அதன் பின் அவன் எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்தான்.

என அருமை மாணவக் கண்மணிகளே! ஆசிரியப் பெருமக்களே நீங்களும் சந்தோஷமான மனநிலையுடன் ‘இங்கே, இப்போதே’ என நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையான நிறைவுடன் செய்தால் உங்களுக்குள் மறைந்திருக்கும் புதையலைக் கண்டுபிடித்து வளமான எதிர்காலத்தை அடையலாம். என்ன செய்யலாமா? நாமும் அந்த மந்திர வார்த்தையைப் பயன்படுத்தலாமா? என அறிவொளி கேட்டதும் மாணவ மாணவியர் ‘ஓ கே சார்’ என கோரஸாகக்  கத்தினர். எங்கே அந்த மந்திர வார்த்தையை மூன்று முறை சொல்லுங்க பார்ப்போம் என்றதும், ‘இங்கே, இப்போதே, இங்கே, இப்போதே இங்கே, இப்போதே’ என்ற பிள்ளைகளின் ஒருமித்தக் குரலில் பள்ளிக் கட்டிடமே அதிர்ந்தது. அந்த விநாடி முதல் அங்கிருந்த ஒவ்வொருவாரின் உடல் அணுக்களிலும் நேர்மறை எண்ண அதிர்வுகள் பரவத் தொடங்கின, ராஜாராம் என்ற ஒருவரைத் தவிர.

தேடலாம்….

- பிரியசகி

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com