புதையல் 8

வாழ்நாளில் மறக்க முடியாத ஆசிரியர் யாராவது நினைவுக்கு வருகிறார்களா என்று
புதையல் 8

நீங்க  ஜீவாவா? தனசேகரா ?

(வாழ்நாளில் மறக்க முடியாத ஆசிரியர் யாராவது நினைவுக்கு வருகிறார்களா என்று அறிவொளி கேட்டதும் பலருடைய முகத்திலும் நூறு வாட்ஸ் பல்பு எரிந்தது.)

அறிவொளி :  எல்லோருமே வாழ்க்கையில் நிறைய ஆசிரியர்களைக் கடந்து வந்திருப்போம். ஆனா எல்லோருக்குமே  மறக்க முடியாத ஆசிரியர்கள் யாராவது ஒருத்தராவது கண்டிப்பா இருப்பாங்க இல்லையா? ஏன் அவரை உங்களால மறக்க முடியலைன்னு சொல்ல விரும்புறவங்க  சொல்லலாம்.

சந்தோஷ்: என் வாழ்க்கையில மறக்கவே முடியாதவங்க ரெண்டு ஆசிரியர்கள். ஒருத்தர் மேல எனக்கு  அளவுகடந்த வெறுப்பு இருக்கு. இன்னொருத்தர் இன்னைக்கு நான் மனுஷனா, ஒரு ஆசிரியரா இருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம். எனக்கு ஒரு  வயசு இருக்கும் போதே எங்கம்மா இறந்துட்டாங்க. என்னைப் பாத்துக்க முடியலைன்னு எங்கப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. வழக்கமான சித்தி கொடுமைகளை எல்லாம் நான்  நிறைய அனுபவிச்சேன். சந்தோஷ்னு பேரு வெச்ச எங்கப்பா  என்னை சந்தோஷமா வெச்சுக்கிட்டதேயில்ல. என் சித்தி சொல்றத கேட்டுகிட்டு நான் செய்யாத தப்புக்கெல்லாம் என்னை பெல்ட்டால அடிப்பாரு. வீட்டு வேலை, தம்பி தங்கச்சிகளை பாத்துக்குற வேலை எல்லாம் முடிச்சிட்டு பாடம் படிக்கவோ, வீட்டுப்பாடம் எழுதவோ நேரமே இல்லாம நெறைய நாட்கள் ஸ்கூல்லயும் அடிவாங்குவேன். என் தெருவிலேயே குடியிருந்த ஜீவானந்தம் சார் தான் எங்கப்பாவை கூப்பிட்டு அறிவுரை சொல்லறது எனக்கு ஹோம்ஒர்க் செய்ய, படிக்க  உதவுறதுன்னு ரொம்ப ஆறுதலா இருந்தாரு.

பத்தாவது படிக்கும்போது  தனசேகர்னு ஒரு கணக்கு  வாத்தியார் வீட்டுப்பாடம் முடிக்காத பசங்கள  ரொம்பக் கொடூரமா அடிப்பார், காலால எட்டிஉதைப்பார், கெட்ட வார்த்தையால திட்டுவார். பசங்க அவர பழிவாங்க வாய்ப்பு கிடைக்குமான்னு காத்துக்கிட்டிருந்தாங்க.

ஒருநாள் கணக்கு வகுப்புல வீட்டுப்பாடம் முடிக்காதவங்கள எல்லாம் எழுந்து நிக்கச்சொல்லி அடிச்சுக்கிட்டிருந்தார். வீட்ல திட்டு வாங்கின கடுப்புல நான் ஏதோ யோசனைல இருந்தேன். நான் உட்க்கார்ந்துக்கிட்டிருக்குறதைப் பார்த்து பக்கத்தில் வந்தவர், என்ன துரை ஹோம்ஒர்க் முடிச்சுடீங்களா, எப்பவும் வீட்ல இருக்க சித்தியப் பத்தியே யோசனை போலருக்கேன்னு என்னை சித்தியோட சேத்து வெச்சு  தப்பா பேச ஆரம்பிச்சார். என்னை எவ்வளவு அடிச்சாலும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசாத நான் அவர் பேசிய கேவலமான வார்த்தைகளால் கோபம் தலைக்கு ஏற அவர் சட்டையை பிடிச்சு மூஞ்சியில ஓங்கி ஒரு குத்துவிட்டுட்டு அங்கேர்ந்து ஓடிட்டேன். அவர் ஹெட்மாஸ்டரிடம்போய் வீட்டுப்பாடம் செய்யாததைக் கேட்டதுக்கு  அடிச்சுட்டான்னு புகார் பண்ணவும் என்னைப் பள்ளியைவிட்டு பத்து நாளுக்கு இடைநீக்கம் பண்ணிட்டாங்க.

வழக்கம் போல எங்கப்பா என்னை எதுவும் விசாரிக்காமல் ஸ்கூல்ல சொன்னதைக் கேட்டுட்டு  பெல்ட்டால அடிக்கவும் எனக்கு ரொம்ப ஆத்திரம் வந்து அவர் கையை பிடிச்சி தடுத்து,  நான் எதுக்கு அவரை அடிச்சேன்னு தெரியுமா உங்களுக்கு? எதுவுமே தெரியாம என்ன அடிக்க மட்டும் கையை ஓங்கிட்டு மொத ஆளா வந்துடுவீங்களான்னு கேட்டேன். இத்தனை வருஷமா புள்ளபூச்சி போல இருந்தவன் இப்ப  எதிர்த்து கேள்வி கேக்குறதை அவரால தாங்கிக்க முடியல .  எப்ப நீ பாடம் சொல்லிக்குடுக்குற வாத்தியார அடிக்கற அளவு, பெத்த அப்பன கையை மடக்குற அளவு வளந்துட்டியோ இனிமே உனக்கு இந்த வீட்ல இடம் இல்ல, வெளிய போடா நாயேன்னு என்னைக் கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளிட்டார்.

கையில காசு இல்லை, மாத்த துணி இல்லை, எங்க போறது, என்ன பண்றது எதுவுமே புரியல. காலைல இருந்து  சாப்பிடாதது பசி வயித்த கிள்ள வெயில் மண்டைய பிளக்க தலை சுத்தி  மயக்கம் வந்து கீழே விழுந்த வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு. . முழுச்சிப் பாத்தா ஜீவா சார் வீட்ல படுத்திருந்தேன்.

நடுரோட்ல விழுந்து கிடந்த என்னை அவரு தன்னோட வீட்டுக்குத் தூக்கிட்டுப் போய் மயக்கத்தை தெளியவெச்சி  சாப்பாடு குடுத்தார். அப்பா வீட்டை விட்டுத் துரத்திட்டாரே என்ற கோபம், அவமானம், எதிர்காலத்தைக் குறித்த கவலை எல்லாம் சேர்ந்து துக்கம் தொண்டையை அடைக்க சாப்பிடமுடியாமல் தேம்பித்தேம்பி அழுத என்னைத் தன் மடியில் சாய்த்து தலையைத் தடவிக் கொடுத்தார். பிறந்ததிலிருந்து அப்படி ஒரு பாசமானத் தொடுதலை உணராத நான்,  ஒரு தந்தையோட உண்மையான அன்பும் அரவணைப்பும் எப்படி இருக்கும்னு அன்னைக்குதான் உணர்ந்தேன். 

‘சந்தோஷ் நல்லா படிக்கக் கூடிய அறிவும் திறமையும் உள்ள மாணவன் நீ. உன் சூழ்நிலை சரியில்லாம தான் நீ இப்படி இருக்கேன்னு எனக்குத் தெரியும். இங்கே இருந்தா உன் எதிர்காலமே வீணாகிடும். நான் உன்னை சென்னைல ஒரு பள்ளியில சேர்த்துவிடுறேன். நல்லா படிச்சு நீ நிறைய பேருக்கு உதவி செய்யக்கூடிய நிலைக்கு வரணும்னு ஆசைப்படுறேன். போய்ப் படிக்குறியான்னு  கேட்டதும் கடவுளே நேர்ல வந்து பேசுற மாதிரி இருந்துச்சு. சொன்ன மாதிரியே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சென்னையில இருந்த ஒரு விடுதியோட கூடிய பள்ளியில சேர்த்து விட்டார். கூட தங்கியிருந்த மாணவர்கள் எல்லாவிதமான ஒழுக்கக்கேடான பழக்கங்களும் கொண்டிருந்ததோட எனக்கும் அதைப் பழக்கப்படுத்த முயற்சி செய்தாங்க.  ஆனா ஜீவா சார் என்மேல வெச்ச நம்பிக்கையக் காப்பாத்தணும்னு எந்தவித சபலங்களுக்கும் இடம் குடுக்காம நல்லா படிச்சேன். பன்னிரெண்டாவது முடிச்சதும் மெடிக்கல், இன்ஜினியரிங் இரண்டுமே கிடைச்சாலும் ஜீவா சார் மாதிரி ஒரு நல்ல ஆசிரியரா தான் நான் ஆகணும்னு உறுதியோட  இருந்ததால இன்னைக்கு உங்க முன்னாடி ஒரு ஆசிரியரா நிக்குறேன். 

என் மாணவர்கள் சோர்ந்துபோன முகத்தோட படிக்காம வீட்டுப்பாடம் முடிக்காம வந்தா என்னோட சின்ன வயசு அனுபவங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். அவங்களைக் கூப்பிட்டு பேசி காரணம் என்னன்னு பாத்து என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யுறேன்.

(பேசி முடித்து சந்தோஷ் அமர்ந்த பிறகும் கைதட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆனது.

ஆனந்த் : சந்தோஷ் சார் உங்களுக்குள்ள இவ்ளோ அழுத்தமான, ஆழமான கதை இருக்குறது இத்தனை வருஷமா தெரியாமப்  போயிடுச்சே! நீங்க வகுப்பறையைத் தாண்டியும் பிள்ளைகளுக்காக நிறைய நேரம் செலவு பண்ணும் போது  நான் கூட இவர் ஏன் இப்படி ஓவரா சீன் போடுறாரேன்னு நினைச்சிருக்கேன். அதுக்கான காரணம் இப்பதான் புரியுது.  

சந்தோஷ்: இத்தனை வருஷம் இதையெல்லாம் சொல்ல அவசியம் வந்ததில்லை. இன்னைக்கு நம்மால மறக்க முடியாத ஆசிரியர்கள் பத்திய பேச்சு வந்ததால் ஆசிரியர்கள் யாரும்  தனசேகர் சார் மாதிரி இருக்கக் கூடாது, ஜீவா சார் மாதிரி இருக்கணும்னு சொல்லத் தோணுச்சு. அதான் சொன்னேன்.

அறிவொளி: உங்க வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சந்தோஷ் சார்.

எந்தக் காரணமும் இல்லாம எந்த மாணவனும் வேணும்னே படிக்காம இருக்கிறதோ, மோசமா நடக்கிறதோ இல்லை. கண்டிப்பா அதுக்குக் காரணம் இருக்கும். காரணத்தைக் கண்டுபிடிச்சி சரிசெய்தால் அவர்களும் சரியாகி விடுவார்கள் என்பதை ரொம்ப எளிமையா அழகா சொல்லிட்டிங்க. உளவியலில் நடத்தை மாற்ற சிகிச்சையின் அடிப்படையே இதுதான். இந்த நுணுக்கத்தை புரிஞ்சுக்கிட்டா ஆசிரியர்களுக்கு எந்த மாணவனையும் கையாள்வது எளிது.

அதேபோல நீங்க சொன்னதுல ரொம்ப முக்கியமான விஷயம், ஜீவா சார் உங்கமேல வெச்ச நம்பிக்கைதான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்துச்சுன்னு சொன்னீங்க பாருங்க அதுதான். இந்த நம்பிக்கையை தான் உளவியலில் ‘பிக்மாலியன் விளைவு’னு சொல்றாங்க. உன்னால இதை செய்ய முடியும்னு நான் உறுதியா நம்புறேன்னு சொல்லும்போதே அது அவங்களுக்குள்ளே நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த நம்பிக்கையை காப்பாத்த அவங்க எடுக்கும் முயற்சிகள் நல்ல விளைவுகளைத் தரும். இதுக்கெல்லாம் நேரிடை சாட்சியா நம்ம சந்தோஷ் சாரே இருக்கார். அவர் இன்னைக்கு  ஜீவா சாரை நினைச்சு பாக்குறா மாதிரி  நம் மாணவர்கள் பிற்காலத்தில் நம் பேரை நினைச்சுப் பார்த்தங்கன்னா அதுதான் நம்முடைய வெற்றி. அதுக்கான வழிமுறைகளை வகுப்பதற்கும்  செயல்படுத்தவும் ஒன்றிணைந்து திட்டமிடுவோம். இந்த நேர்மறை சிந்தனைகளோடு இன்றைய கூட்டத்தை நிறைவு செய்வோம். இன்றைக்குப் பேசிய விஷயங்கள் பற்றியோ அல்லது பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பயன் தரக்கூடிய எந்த விஷயமானாலும் நீங்க எப்ப வேணாலும் என்னிடம் வந்து பேசலாம். நன்றி.

(உதவித் தலைமை ஆசிரியர் நன்றி உரை கூற, தேநீரோடு எல்லோரும் இருவர் மூவராய் பேசியவாறு கலைந்து சென்றனர். எல்லோர் மனதிலும் ஏன் அந்த அறை முழுவதுமே நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருந்தது. இதைப் படிக்கும் ஆசிரியப் பெருமக்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி நான் ஜீவாவா? தனசேகரா? என்பது தான்.)

தேடலாம்..

- பிரியசகி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com