புதையல் 22

காட்சிவெளி மற்றும் கற்பனைத்திறன் பற்றி விளக்கிக் கொண்டிருந்த அறிவொளி
புதையல் 22

எல்லாமே உனக்குள் உண்டு!
 
(காட்சிவெளி மற்றும் கற்பனைத்திறன் பற்றி விளக்கிக் கொண்டிருந்த அறிவொளி அதற்கு அவசியமான உற்றுநோக்கும் திறனை வளர்க்கும் பயிற்சிக்காக கார்த்திக் மற்றும் விஷ்ணுவின் கைகளில் ஒரு வெள்ளைத் தாளையும் பென்சிலையும் கொடுத்தார்.)

அறிவொளி: ரெண்டு பேரும் ஒரு நிமிஷம் அமைதியா கண்ணை மூடி உங்க வீட்டை மனக்கண் முன்  கொண்டு வந்து மேசை, நாற்காலி உட்பட ஒவ்வொரு பொருளும் எங்க இருக்குன்னு பேப்பர்ல குறிச்சுக்கோங்க.

(சில நிமிடங்களில் இருவரும் வீட்டின் வரைபடத்தை வரைந்து முடித்தனர்.)

இன்னைக்கு வீட்டுக்குப் போனதும் நீங்க வரைஞ்சது எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க. ஏதாவது தவறுகள் இருந்தா திருத்திக்கோங்க. மறுபடி கண்ணை மூடிக்கிட்டு வரைபடத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, எந்தப் பொருள் மேலும் இடிக்காம நடக்கணும். இடிச்சிட்டா மறுபடி கண்ணைத் திறந்து வரைபடத்தை நல்லா மனசுல பதிய வெச்சுக்கிட்டு பிறகு மறுபடியும் இந்தப் பயிற்சியைத் தொடரனும். இதில் வெற்றியடைஞ்சிட்டா கண்ணைக் கட்டிக்கிட்டு நம்பிக்கைக்குரிய ஒரு நண்பரோட வெளியே போங்க. சுற்றிலும் கேட்கக் கூடிய சத்தங்களை வைத்து எந்த இடத்தில் இருக்கீங்கன்னு சரியா சொல்ல முடியுதான்னு பாருங்க. கண்கள் மூடியிருக்கும் போது மத்த புலன்கள் எவ்வளவு கூர்மையா வேலை செய்யுதுன்னு இந்த மாதிரிப் பயிற்சிகளின் போது தெரிஞ்சுக்க முடியும்.

கார்த்திக்:  கண்ணை மூடிக்கிட்டு எது மேலயும் மோதாம திரும்பி பத்திரமா வீட்டுக்கு வந்து சேர்ந்துட முடியுமா சார்.

சந்தோஷ்:  எதையுமே சந்தேகக் கண்ணோடவே பாக்காதே கார்த்திக். நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்.

கார்த்திக்: சின்ன வயசுல இருந்தே எங்க வீட்டுல இது உனக்கு வராது, அதை உன்னால செய்ய முடியாதுன்னு சொல்லி சொல்லி எனக்கும் அப்படியே பழகிடுச்சு சார். நானும்  மாத்திக்கணும்னு தான் பாக்குறேன், என்ன பண்றதுன்னு தான் தெரியலை.

சந்தோஷ்: உன் வலது கையை பக்கவாட்டில். நீட்டியபடியே கழுத்தை வலது பக்கம் திருப்பி எவ்வளவு தூரம் உன் விரல்  நுனியைப் பார்க்க முடியுதுன்னு குறிச்சுக்கோ. கண்ணை மூடிக்கிட்டு இன்னும் அதிக தூரம் பார்ப்பதா கற்பனை பண்ணிக்கோ. இப்போ மறுபடியும் கண்ணைத் திறந்து வலப்பக்கம் கையை நீட்டி எவ்வளவு தூரம் பார்க்க முடியுதுன்னு பார்.

கார்த்திக்: சார் மொதல்ல விட இப்ப என்னால ரொம்ப தூரம் பார்க்கமுடியுதே எப்படி சார்?

சந்தோஷ்:  நம்ப மனசு எதை பார்க்குதோ, எதை நம்புதோ அது கண்டிப்பா நடக்கும்னு சொல்றதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அறிவொளி:  ரொம்ப சரியா சொன்னீங்க சந்தோஷ். நிஜத்தில் நடக்காத ஒரு விஷயத்தை மனக்கண்ணால் பார்த்து அதன் பலனை நிஜ உலகில் கொண்டு வர முடியும். புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் தான் சூரியக் கதிர்கள் மேல பயணிப்பதாக் கற்பனை செய்தப்பதான் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டியைக் கண்டுபிடிச்சாராம். கார்த்திக், விஷ்ணு உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு விளையாட்டு விளையாட ஆசையா?

விஷ்ணு: ஆமா சார்.

அறிவொளி:  கண்ணை மூடி உங்களுக்குப் பிடிச்ச நிறத்துல ஒரு பலூனை மனக்கண்ணில் கற்பனையா பாருங்க. அந்த பலூனைத் தரையிலும், பக்கவாட்டு சுவரிலும் தட்டி விளையாடுவதா கற்பனை செய்துக்கோங்க. 

(இருவரும் இல்லாத பலூனைக் கற்பனை உலகில் கைகளால் தட்டி விளையாடத் தொடங்கினர்)

நீங்க பலூனை பெரிதாவோ, சின்னதாவோ ஆக்கவும் , நிறத்தை மாத்தவும் கூட முடியும். அது மேல ஏறிப் பயணம் போக வசதியா அதோட வடிவத்தையும் கூட மாத்திக்கலாம். சரி, இப்ப அது மேல ஏறி உக்காந்துக்கிட்டு, அது உங்களை எங்கெல்லாம் கூட்டிட்டுப் போகுது, அங்கே என்னென்னப் பாக்குறீங்கன்னு கவனிங்க. 
(இருவரின் முகத்திலும் பலவிதமான உணர்வுகளைக் காண முடிந்தது.)

இப்ப பழையபடி நிகழ்கால உலகத்துக்குத் திரும்புங்க. கற்பனை உலகில் என்னவெல்லாம் பார்த்தீங்க? எது உங்களை ஆச்சர்யப்பட வைத்தது?

கார்த்திக்: இந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்துது சார். பள்ளிக்கூடத்துல பசங்க நாங்க சுதந்திரமா எதையுமே செய்ய முடியாத சூழ்நிலையில பலூனை எப்படி வேணும்னாலும் மாத்திக்கலாம்னு நீங்க சொன்னதே எனக்குப் பெரிய சுதந்திரம் கிடைச்ச மாதிரி இருந்துச்சு. பலூனோட வடிவத்தை எப்படி மாத்தலாம்னு யோசிச்சப்ப கதைகள்ல வர்ற பறக்கும் கம்பளம் தான் என் ஞாபகத்துக்கு வந்தது. உடனே என் பலூனை ஒரு பறக்கும் கம்பளமா மாத்தி அதுமேல உக்காந்து பறக்க ஆரம்பிச்சேன். மேலே மேலே பறந்து மேகங்களுக்குள்ளே போகவும் இவ்வளவு நாள் எனக்குப் பிரச்சனையா இருந்த கீழே உள்ள மனுசங்க சின்னச்சின்ன எறும்பு மாதிரி தெரிஞ்சதைப் பார்த்த பிறகு நாம உயரத்துக்குப் போக வேண்டியது அவசியம்னு புரிஞ்சுது. பிறகு கொஞ்சம் கீழே இறங்கிய கம்பளம் ஒரு பள்ளிக்கூடத்து மேல மெதுவா பறந்துச்சு. சாதாரணமா ஸ்கூலை விட்டு வெளியேப்  போகும்போது தானே பசங்க சந்தோஷமா ஓடுவாங்க! இந்த ஸ்கூல்ல உள்ளப் போகும் போது சந்தோஷமா போறாங்களே என்னடான்னு பார்த்தா பசங்க யாரும் புளிமூட்டை மாதிரி புத்தகங்களை சுமந்துக்கிட்டுப் போகலை. வாத்தியாருங்க எல்லாம் புள்ளைங்களோட ரொம்ப அன்பா இருக்காங்க. வீட்டுப்பாடம் இல்லை, அதனால பசங்க அடிவாங்குறதும் இல்லை. பிள்ளைங்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்குறதால நண்பன் படத்துல வர்ற பசங்க மாதிரி எல்லாரும் ரொம்ப புத்திசாலியா இருக்காங்க. எல்லா ஸ்கூலும் இந்த மாதிரியே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும் இல்ல சார்?

அறிவொளி: ஆமா கார்த்திக், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இந்த மாதிரி மாற நீ பிற்காலத்துல ஏதாவது செய்ய முடியுமான்னு யோசி..

கார்த்திக்: நானே  தமிழ்நாட்டோட முதலமைச்சராவோ அல்லது கல்வி அமைச்சராவோ ஆனாதான் இதெல்லாம் செய்ய முடியும். பேசாம இதையே என் வாழ்நாள் லட்சியமா ஆக்கிக்குறேன் சார்.

அறிவொளி:  வெரிகுட் கார்த்திக், நாம அனுபவிக்காத நல்ல விஷயங்கள் நம்ம எதிர்காலத் தலைமுறைக்காவது  கிடைக்கனும்னு நினைக்குற உன் நல்ல எண்ணம் நிறைவேறட்டும். விஷ்ணு உன்னோட பயண அனுபவத்தைப் பத்தி நீ சொல்லவே இல்லையே?  

விஷ்ணு:  நான் என் பலூனை சிந்துபாத் கதையில வர்ற பெரிய கழுகு மாதிரி மாத்திட்டேன். அதுமேல ஏறி ஊர் ஊரா பறந்து போனேன். ஒரு ஊர்ல எல்லோருமே பெரிய பணக்காரங்களா இருந்தாங்க. அங்க இருந்ததுலயே ஒரு பங்களா ரொம்ப பெருசா, அழகாயிருந்தது. இந்த வீடு நமக்கு சொந்தமானதா இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்னு நான் நினைக்கும்போதே வீட்டு எஜமானி மாதிரி பட்டுப்புடவைக்கட்டி நிறைய நகையெல்லாம் போட்டுக்கிட்டு எங்கம்மா அந்த வீட்டுக்குள்ளே இருந்து வெளியே வந்தாங்க. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு சார்.

அறிவொளி: நிஜம்மாவே உங்கம்மாவை அப்படிப் பார்க்கணும்னு ஆசைப்படுறியா விஷ்ணு?

விஷ்ணு: ஆமா சார்.

அறிவொளி: சரி, அப்படி நிஜத்துல நடக்க நீ என்ன பண்ண முடியும்னு நினைக்குறே?

விஷ்ணு:  நான் நல்லாப் படிச்சி, நல்ல வேலைக்குப் போய், நிறைய சம்பாதிச்சு எங்கம்மாவை ராணி மாதிரி வெச்சுக்குவேன் சார்.

அறிவொளி:  வெரி குட், இந்த மாதிரி ஒரு பெரிய குறிக்கோளை மனசுல பதிய வெச்சுட்டா என்ன தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி குறிகோளிலிருந்து விலகி போகாம சாதிக்க முடியும். பல பிள்ளைகள் குறிக்கோள் இல்லாததால தான் திசை மாறி போறாங்க.

விஷ்ணு:  ஆமா சார் அப்துல்கலாம் கூட சொல்லிருக்கார் குறிக்கோள் இல்லாத வாழ்கை துடுப்பு இல்லாத படகு போன்றதுனு, இனிமே இந்த குறிக்கோளை அடையறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் சார்.

சந்தோஷ்:  இப்ப நீங்க சொல்லித் தந்த வழிமுறை நம்ம மனசுல என்ன ஆசை மேலோங்கி இருக்குன்னு நாமே தெரிஞ்சுக்குறதுக்கும் அதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள்றதுக்கும் நல்லமுறை சார். இடையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் சோர்ந்து போகாம இருக்க என்ன செய்யணும் சார்?  

அறிவொளி: நல்ல கேள்வி சந்தோஷ். முன்னாடி காலத்துல வயசானவங்களுக்கு வந்த முதுகு வலி, முட்டி வலி, தலைவலியெல்லாம் இப்ப உள்ள இளைஞர்களுக்கே வருது. இதுக்கு பெரும்பாலும் மனஇறுக்கம் தான் காரணம்னு மருத்துவர்கள் சொல்றாங்க. யோகா தியானம் போன்றவற்றோட விரும்பும் மனக்காட்சிகளை உருவாக்குவதும் மன இறுக்கத்தைக் குறைச்சி புத்துணர்வைக் கொடுக்கும்.

கார்த்திக்: மனக்காட்சினா என்னது சார்.

அறிவொளி: சொல்றேன், ஒரு மெழுகுவர்த்தியை எரிய வைத்துக் கொஞ்ச நேரம் அதோட ஒளிச்சுடரையே பார்த்துட்டு பிறகு கண்ணைமூடிக்கோ. உன் மனக்கண்முன் அந்த ஒளிச்சுடர் வரும். கொஞ்ச நேரத்துல அது மறைஞ்சதும் மறுபடியும் கண்ணைத் திறந்து ஒளிச்சுடரைப் பார். கண்ணை மூடினாலும் பத்து நிமிஷம் ஒளிச்சுடர் மனக்கண்ணில் தெரியும்வரை இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்யணும். ஒளிச்சுடருக்கு பதிலா இயற்கைக் காட்சி, கடவுளின் உருவம், நமக்குப் பிடிச்சவங்களோட உருவத்தையும் மனக்காட்சியில் பார்க்கலாம். கவலையோட இருக்கும் போதோ, வேலைப்பளுவால டென்ஷனா இருக்கும் போதே இந்தப் பயிற்சியை செய்தா மனசு பாரம் குறைஞ்சு லேசாவதை உணர முடியும். நல்ல நண்பர்கள் கிட்ட மனசுவிட்டு பேசுறதும்  மனபாரத்தை குறைக்கும்.  

சந்தோஷ்: சில நேரம் மன ஆறுதலுக்காக வேற யார்கிட்டையாவது நம்ம பிரச்சனைகளை சொல்லும் போது அவங்க அதை ரகசியமா   வைக்காம மத்தவங்ககிட்ட சொல்லி நம்மை ஒரு கேலிப்பொருளா ஆக்கிடுறாங்களே, என்ன செய்யுறது சார்?
                     
அறிவொளி:
நீங்க சொல்றமாதிரியும் சில நேரம் நடக்க வாய்ப்புண்டு நம்பிக்கைக்குரியவங்கன்னு  நினைக்கிற சில பேர் இப்படி நம்மைக் கஷ்டப்படுத்துறதுண்டு. இப்ப நான் சொல்லித்தரும் பயிற்சி உங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன்.

* உடம்பை நல்லா தளர்வான நிலையில் வசதியா உட்காருங்க.

* கண்களை மூடி நான் சொல்ற விஷயங்கள் உண்மையாவே நடக்குற மாதிரி மனக்காட்சியா பார்கனும்சரியா.

சந்தோஷ்: சரி சார்.

(மூவரும் கண்மூடி அமர்ந்தனர்.)

* நம்ம எல்லோரையும் ஸ்கூல்ல இருந்து ஊட்டிக்கு சுற்றுலா கூட்டிட்டுப்போறாங்க.

* பஸ்ல அவங்கவங்க நண்பர்களோட ஜாலியா அரட்டை அடிச்சிட்டு வர்றீங்க.

* கொஞ்சம் தூரம் போனதுமே சூடு குறைஞ்சு ஜன்னல் வழியா சில்லுன்னு இதம்மா காத்து வர ஆரம்பிக்குது.

கான்கிரீட் காடுகள் மறைந்து பச்சைப்பசேலுன்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இயற்கை காட்சிகள் தெரியுது. ஒரு இடத்திலே பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி இரைச்சலோட விழுந்துக்கிட்டிருக்கு, அதோட சாரல் உங்க மேல் பட்டதும் உடம்பெல்லாம் சிலர்க்குது.

(அறிவொளி சொல்லச்சொல்ல அந்தக் காட்சிகளைத் தம் மனக்கண் முன் பார்த்து அனுபவிக்கிறார்கள் என்பதை அவர்களது முக பாவனையும் உடல்மொழியும் உணர்த்தியது)

போகும் வழியெல்லாம், மான், முயல் எல்லாம் அங்குமிங்கும் ஓடிக்கிட்டிருக்கு. ஒரு இடத்தில் மயில் ஒன்று தோகையை விரிச்சு நடனமாடிக்கொண்டிருக்கு. இந்தக்  கண் கொள்ளாக் காட்சிகளைப் பார்த்து ரசித்து மனசில் உள்ள பாரம் எல்லாம் குறைஞ்சி லேசாகிடுச்சு. கொஞ்சதூரம் போனதுமே ஒரு பெரிய பூங்கா பக்கத்தில் பஸ் அங்கே நிற்கவே எல்லோரும் இறங்கி பூங்காவுக்குள்ளே போறோம். பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க, பழ மரங்கள் ஆசையைத் தூண்ட, இயற்கையை ரசிக்க ஒவ்வொருவரும் தனித்தனியா பிரிஞ்சு போறாங்க. நீங்க மட்டும் தனியா அங்க இருக்கும் ஒரு மரபெஞ்சு மேலப் போய் உட்கார்ந்திருக்கீங்க. சுற்றி இருப்பதெல்லாம் ரொம்ப சந்தோசம் தரக்கூடியதா இருந்தாலும் அதை முழுசா அனுபவிக்க முடியாம எதோ ஒரு பாரம் மனசுல அழுத்திக்கிட்டே இருக்கே என்ன செய்யுறதுன்னு நீங்க யோசிக்கும் போதே யாரோ ஒருவர் உங்களை நோக்கி நடந்து வர்றதைப் பார்க்கறீங்க.  

இதுவரை அவரைப் பார்த்ததே இல்லை.ஆனாலும் அவரது தோற்றமே நாம பேசுறதை அவர் வேற யார்கிட்டேயும் சொல்ல மாட்டார் என்ற ஒரு மரியாதையையும் நம்பிக்கையும் அவர் மேல ஏற்படுத்துது. உங்கப் பிரச்சனைக்கு அவராலே தீர்வு கொடுக்க முடியும்னு தோணுது. அவர் கிட்ட வந்து உங்கப் பக்கத்துல உட்காருறார். அவரோட கனிவான பார்வையும், அனுபவமுள்ள முகத்தோற்றமும் உங்க பிரச்சனையை அவரோட பகிர்ந்துக்க வைக்குது. ரொம்ப அக்கறையோட கவனமா நீங்க சொல்றதையெல்லாம் கேட்குறவர் உங்க பிரச்னைக்குரிய நடைமுறைத் தீர்வு என்ன என்பதை ரொம்பத் தெளிவா விளக்குறார். அதைக் கேட்க கேட்க உங்க மனஅழுத்தம் குறைஞ்சு கவலையெல்லாம் காணாமப் போச்சு. உங்க முகம் தெளிவானதைப் பார்த்த அவர் உனக்கு எப்பப்ப என் உதவி தேவைப்படுதோ என்னைக் கூப்பிடு, நான் கண்டிப்பா வர்றேன்னு உங்க கையைப் பிடிச்சு சொல்லிட்டு காணாமப் போயிட்டார். அவர் பிடிச்ச அந்தப் பிடியோட அழுத்தத்தை உங்களாலே உணர முடியுது. அந்த அழுத்தம் உங்களால எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்குது. அந்த நம்பிக்கையோட எழுந்து நடந்து பூங்காவை விட்டு வெளியே வந்து பேருந்துல ஏறி உட்காருறீங்க. பேருந்து கிளம்பி வந்த வழியே மறுபடியும் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்துடுறோம். இப்ப இந்த இடத்தோட தட்ப வெப்பத்தை உங்களால உணர முடியுது. சுத்தியிருக்கும் சத்தத்தை கேட்க முடியுது, மெதுவா கண்ணைத் திறங்க.

(எல்லோரும் கண்ணைத் திறக்கிறார்கள்)

சந்தோஷ் இப்ப மணி என்ன ஆச்சு?

சந்தோஷ்:  மணி  ஏழாகுது சார்.

அறிவொளி:  கார்த்திக் மத்தியானம் என்ன சாப்பிட்ட?

கார்த்திக் :  சாம்பார் சாதம் சார்.

அறிவொளி: விஷ்ணு உனக்கு பிடிச்ச நிறம் என்ன?

விஷ்ணு:  நீலம் சார்.

அறிவொளி: என்னடா சம்மந்தமே இல்லாம ஏதேதோ கேக்குறானேன்னு நினைக்குறீங்கன்னு புரியுது. இவ்வளவு நேரம் கற்பனை உலகத்துல இருந்த உங்களை மறுபடியும் நிஜஉலகத்துக்குக் வர்றதுக்காகத் தான் இது. சரி இப்ப சொல்லுங்க, இந்த அனுபவம் எப்படி இருந்துது?

கார்த்திக்:  சார், நெஜம்மாவே ஊட்டிக்குப் போயிட்டு வந்த மாதிரியே இருந்துச்சு சார். பச்சைப் பசேல்னு மலை, கலர், கலரா எவ்ளோ பூ,  மான், மயில்னு ரொம்ப அழகா இருந்துது சார். அருவித் தண்ணி உண்மையாவே மேலப் பட்டா மாதிரி உடம்பெல்லாம் சிலிர்த்துடுச்சு சார்.

விஷ்ணு:  புதுசா வந்த அந்த நண்பரோடப் பேசுனது ரொம்ப நல்லாயிருந்துச்சு சார். அவர் இன்னும் என் கையைப் பிடிச்சுக்கிட்டிருக்க மாதிரியே இருக்கு.

சந்தோஷ்: ஆமா சார், நம்ப மனசுல இருப்பதை மறைக்காமப் பகிர்ந்துக்க நம்பிக்கையான ஒருவர், அதுவும் நம்மப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக்கூடிய அனுபவமுள்ள ஒருவர் நண்பரா கிடைக்கிறது ரொம்பப் பெரிய வரம். இந்த அனுபவத்தைக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார். 

அறிவொளி:  மகிழ்ச்சிப்பா, உளவியல்ரீதியா பார்த்தா அந்த நபர் நமக்குள் இருக்கும் மனசாட்சி தான். 'நான்' என்ற நிலையிலிருந்து பிரச்சனையை அணுகாமல் கொஞ்சம் விலகி, மூன்றாம் நபர் நிலையிலிருந்து அணுகினால் எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காண்பது எளிது. அந்த மூன்றாம் நபர் நிலைதான் மனக்காட்சியில் நாம் பார்த்த நபர். கவலை இல்லாத வாழ்க்கையைத்தான் நாம எல்லோரும் விரும்பறோம். நம் எல்லா கவலைகளுக்குமானத் தீர்வு நமக்குள்ளேயே தான் இருக்கு. அதைத் தனக்குள்ளே உணர முடியாதவங்க தான் வெளியே கோவில்களிலேயோ அல்லது மத்த மனுஷங்ககிட்டயோ தேடுறாங்க. பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடாம நேர்மறையான மனோபாவத்தோட, சரியான அணுகுமுறையோட இருந்தா வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமானதா மாறிடும். 

(நம்ம வாழ்க்கையையே மாத்திப் போடுற மாதிரி இவ்ளோ நல்ல விஷயங்களை சொல்லும் இவர் இன்னும் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலோடு அறிவொளியைப் பார்த்துக் கொண்டிருந்தனர் சந்தோஷ், கார்த்திக்,விஷ்ணு மூவரும். நாமும் காத்திருப்போம். )

தொடரும்...

பிரியசகி 
priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com