Enable Javscript for better performance
புதையல் 31- Dinamani

சுடச்சுட

  
  knowthyself

  நம்மை நாமே கண்டறிவோமா!

  (பிறருடன் கலந்து பழகுவதால் ஏற்படும் நன்மைகளையும் அத்திறனை வளர்த்துக் கொள்ளத் தேவையானப் பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தபின்  'தன்னைத்தான் அறியும் திறன்' பற்றி விளக்க ஆரம்பித்தார் அறிவொளி.)

  அறிவொளி:  கார்த்திக், விஷ்ணு மற்ற எல்லா உயிரினங்களையும் விட மனிதன் சிறந்தவனாயிருக்க காரணம் என்ன சொல்லுங்க பார்க்கலாம்.

  கார்த்திக்:  மனிதனோட சிந்திக்கும் திறமை தானே சார் காரணம்?

  அறிவொளி:  ரொம்ப சரி கார்த்திக். சிந்திக்கும் திறனும், அதன் விளைவாக  எழும் தேடலும்தான் மனித வர்க்கத்தோட விஞ்ஞான, மெய்ஞான வெற்றிகளுக்கெல்லாம் காரணம்.

  'ஆப்பிள் ஏன் மேலிருந்து கீழே விழுகிறது?' என்ற நியூட்டனின் கேள்விக்கும் 'நான் யார்?' என்ற பட்டிணத்தாரின் கேள்விக்கும் 'தேடும்' மனோபாவமே காரணம். பணம், புகழ், பதவி, புதிய கண்டுபிடிப்புகள் என ஒரு சாரார் தேடலைத் தொடரும் அதே நேரத்தில் இன்னொரு சாரார் , மனம் என்றால் என்ன? அதற்கு என்னென்ன சக்திகள் உண்டு? மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் என்ன சாதிக்க முடியும்? என்று ஆராய்ந்து கொண்டிருக்காங்க .

  சந்தோஷ் : உண்மை தான் சார் அதனாலே தான் நாளுக்கு நாள் தியான மையங்களும், 'வாழும் கலை', ' வாழ்க வளமுடன்'  போன்ற பயிற்சி மையங்களெல்லாம் அதிகமாகிக்கிட்டு இருக்கு. ஒரு சிலர் வியாபார நோக்கோட இதை செய்தாலும் சிலர் கொடுக்கும் அகத்தாய்வுப் பயிற்சிகள் மக்களுக்கு சுய விழிப்புணர்வை உண்டாக்கி, மனதைப் பண்படுத்தவும், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக உதவுது.

  விஷ்ணு : உடற்பயிற்சி  செய்தா போதாதா சார்? நீங்க சொல்ற அகத்தாய்வு பயிற்சிகள் என்னன்னு புரியலையே ? 

  சந்தோஷ் : உடற்பயிற்சி மூலம் உடலை உறுதிப்படுத்தறது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் மனப்பயிற்சிகள் மூலம் மனதை வலிமையாக்குவது. மகாத்மா காந்தியோட உடம்பில் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக் கூடு மட்டும் தான் இருந்தது . ஆனால்  ஆங்கில அரசரோட துப்பாக்கியும், பீரங்கியும் அவரைப் பார்த்து பயந்தது எப்படி? அதுக்கு அவரோட மனபலம் தான் காரணம். எலும்பு, தசைகளோட சக்தியும், உபயோகமும் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனா பயிற்சிகள் மூலம் வலிமை பெற்ற மனதோட வலிமை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை விட அதிக சக்தி வாய்ந்தது. 

  கார்த்திக் : நேத்து எங்க மாமா ஒரு வீடியோ காட்டினார் சார். அதுல ஒரு ஆள் தன்னோட தலைமுடியில பஸ்ஸையே கட்டி இழுத்தார். எப்படி இவரால மட்டும் முடியுதுன்னு கேட்டதுக்கு உடல் பலம் மட்டுமில்ல அவரோட மனபலமும் அதிகமா இருக்கிறதாலதான் இது முடியுது. இதுக்கு வருஷ கணக்கா மனதை ஒருமுகபடுத்தும் பயிற்சி எடுத்திருப்பார்னு எங்க மாமா சொன்னார்.

  அறிவொளி : உங்க மாமா ரொம்ப சரியா சொல்லியிருக்கார் கார்த்திக். பஸ்ஸை இழுக்க மட்டுமில்ல பரிட்சையில் நல்ல மார்க் எடுக்கவும், வாழ்க்கையில் தன் குறிக்கோளை அடையவும் மனதை ஒரு முகப்படுத்துறது ரொம்ப முக்கியம்.

  கார்த்திக் : ஆமா சார், படிச்சதெல்லாம் எக்ஸாம் நேரத்தில மறந்து போயிடுறதுதான் என்ன மாதிரி பசங்களுக்குப் பெரிய பிரச்சனையே நாங்க இதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார்.

  அறிவொளி : படிச்சது மறந்து போறதுக்கு முக்கிய காரணம் படிக்கும் போது மனதை சிதற விடுவதும் , படிப்பில் ஆர்வம் இல்லாததும் தான். மூச்சு, உடல், மனம் இந்த மூன்றையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க தெரிந்தவர்களுக்கு கைவராத வித்தைகளே கிடையாது. உடலை வலுவாக்க யோகப்  பயிற்சிகளும் மனதை வலுவாக்க தியானப்  பயிற்சிகளும் எல்லோருக்கும் ரொம்ப அவசியம்.

  கார்த்திக் : உடற்பயிற்சி, யோகா எல்லாம் ஸ்கூல்லயே சொல்லித் தராங்க.  தியானம் எப்படி செய்யணும்னு சொல்லுங்க சார்.

  அறிவொளி : சரி சொல்றேன் .

  (வட்டமாக இருக்கும் பூமியின் படம் ஒன்றை எடுத்து சுவரில் மாட்டினார்)

  முதல் ஒரு வாரத்திற்கு இந்த மாதிரி வட்டமாக இருக்கும் ஏதாவது ஒரு படத்தை பயிற்சிக்குப்  பயன்படுத்திக்கோங்க. வசதியான ஒரு இடத்தில்  கண் மூடி அமர்ந்து ஆழ்ந்து மூச்செடுத்து உடலையும் மனதையும் முழுசா தளர்த்திக்கோங்க. மூச்சு சீர் அடைந்தால்  நாடி, இதய துடிப்பு சீரடையும். உடல் அமைதியாகும். இந்த அமைதி மனதிலும் பரவும். இப்ப கண்ணைத்திறந்து படத்தை உற்று பாருங்க. படத்தைப்பற்றிய எந்த விதமான ஆராய்ச்சி கண்ணோட்டமும் இல்லாமல் , வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் பார்வையையும், மனதையும் படத்தில் நிலைக்க வையுங்க. வேறு சிந்தனைகள் சில நேரம் வரக்கூடும் பரவாயில்லை. காத்தடிக்கும் போது நீர்க்குமிழிகள் காணாமல் போவது போல இந்த சிந்தனைகளும் தானே மறைந்து போகும். மனதை மறுபடியும் படத்தில் ஒருமுகப்படுத்துங்க. பத்து நிமிடம் இந்த பயிற்சியை செய்த பிறகு பழைய நிலைக்குத் திரும்புங்க. ஆரம்பத்தில் இது கொஞ்சம் சிரமமா இருந்தாலும் நாள் போகப் போக மனம் உங்கள் வசப்படும். ஒரு வாரத்துக்குப் பிறகு படத்துக்கு  பதிலா ஒரு வெண்கல மணியை அடித்து, அந்த ஒலியில் மனதை நிலைக்கச்  செய்யுங்க. அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீது மனதை ஒருநிலைப்படுத்தி பயிற்சி செய்யுங்க .

  விஷ்ணு : இதனால என்ன பயன் சார்?

  அறிவொளி : இந்தப்பயிற்சியால் மனதை ஒரு முகப்படுத்தும் திறன் அதிகமாவதால் செய்யும் வேலையில் தவறுகள் குறைந்து , படிப்பிலும் அன்றாட வாழ்விலும், செய்யும் தொழிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .

  சந்தோஷ் : இப்ப  ' முழுமனதுடன் இருத்தல்'  (mindfulness ) பயிலரங்குகள் நடத்துறோம்னு நிறைய விளம்பரம் வருது சார். முழுமனத்துடன் இருத்தல்னா  என்ன அர்த்தம்?

  அறிவொளி : நாம செய்யும் எந்த செயலையும் எண்ணச் சிதறல்கள் இல்லாம முழுமையான விழிப்புணர்வுடன் செய்வதும், மூன்றாம் நபர் நிலையிலிருந்து நம்மை நாமே சீர்தூக்கிப் பார்ப்பதுமே 'முழு மனதுடன் இருத்தல்' என்பதன்  அர்த்தம்.

  சந்தோஷ் : நாம எடுத்த முடிவு சரியான தப்பான்னு நமக்கே சில நேரம் சந்தேகம் வரும் போது என்ன செய்யுறது சார் ?

  அறிவொளி : உணர்ச்சி வசப்பட்டு நாம எடுக்க கூடிய சின்னத் தவறான முடிவு கூட நம் வாழ்க்கையையே திசை திருப்பி விடக்  கூடும்.  அதனால உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ அல்லது மனம் சோர்வா இருக்கும் போதோ எந்த முடிவும் எடுக்காம கொஞ்சம் ஆறப் போடுறது நல்லது. நாம செய்த இதே காரியத்தை வேற யாரவது செய்திருந்தா அதை நாம எப்படி விமர்சனம் செய்வோம்னு யோசிக்கணும். அப்ப  நாம எடுத்த முடிவு சரியா, இல்லை மாற்று வழி ஏதாவது இருக்கான்னு யோசிக்கத் தோணும். எப்படி நிழல் நம்மோடு ஒட்டாமலும்,ரொம்ப விலகிப் போகாமலும் இருக்கோ அதே மாதிரி, மனதளவில் நம்மை விட்டு நாமே கொஞ்சம் விலகி நின்னு, நம் செயலை உற்று நோக்கி சுயவிமர்சனம் செய்யப் பழகணும்.

  கார்த்திக் :  அது எப்படி சார் நம்மை விட்டு நாமே விலகி நின்னுப் பார்க்க முடியும்? சினிமாவில் தான் மனசாட்சி பேசுவதை அப்படிக்  காட்டுவாங்க.

  அறிவொளி : சினிமாவில் காட்டுவது போல உனக்குள்ளே இருந்து இன்னொரு கார்த்திக் வெளியே வந்து உனக்கு எதிரா நின்னு பேசலைன்னாலும், நீயே அப்படிக்  கற்பனை செய்துக்கலாம். தினசரி செய்யும் வேலைகளான பல் துலக்குவது, வீட்டை ஒழுங்கு படுத்துவது, சாப்பிடுவது போன்ற ஏதாவது ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்துக்கோங்க. வேற ஒருத்தர் இந்த வேலையைச்  செய்யும் போது அவரை எப்படிப் பார்ப்பீங்களோ அதே மாதிரி உங்களை நீங்களே மனக்கண்ணால் உற்றுப் பாருங்க. இந்த வேலை எப்ப முடியும்ன்னோ அல்லது இது முடிஞ்சப்பிறகு அடுத்த வேலை என்ன செய்யணும்னோ வேற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காம, ஒவ்வொரு அசைவையும், அது உங்க உடம்பில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் கவனமா உற்றுப் பாருங்க. செய்த வேலை முடிஞ்சதும் இத்தனை நாளா நீங்க கடமையா நினச்சு செய்த வேலைக்கும், இப்ப அணுஅணுவா கவனித்து செய்த வேலைக்கும் உள்ள வித்தியாசத்தை யோசித்துப் பாருங்க.

  சந்தோஷ் :  ஏதாவது ஒரு உதாரணம் சொல்லுங்களேன் சார்.

  அறிவொளி : சரி, நீங்க பசியோட சாப்பிட உட்காருவதா நினைச்சுக்கோங்க. உங்க எதிரில் தட்டில் சுவையான உணவைப் பார்த்த மூளையின் கட்டளையால்  உடனே நாக்கில் எச்சில் சுரப்பதையும், அந்த உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதையும், அதனால் பசி அதிகமாவதையும் உணருவீங்க. பிறகு உணவு பற்களால் அரைக்கப்பட்டு கூழ்நிலையில் உணவுக்குழல் வழியா இரைப்பை உள்ளே சென்று சீரண நொதிகளால் சீரணிக்கப்படுவதையும், ஆற்றல் வெளிப்படுவதையும் உணர முடியும். இதனால் பசிக்காக சாப்பிடுவதற்கும், ருசிக்காக சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் புரியும். உடலில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாக உணர முடிவதால் உடலுக்கு ஏற்ற உணவை மட்டும் சாப்பிட்டு உணவே மருந்தாக நோயற்ற வாழ்வு வாழலாம்.

  சந்தோஷ் :  சாப்பிடும்போது ஏன் பேசக்கூடாது, டிவி பார்க்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்கன்னு இப்பத்தான் புரியுது சார்.

  அறிவொளி : ஆமா சந்தோஷ், பேசிக்கிட்டோ, டிவி பார்த்துக்கிட்டோ சாப்பிடும்போது என்ன சாப்பிடுறோம், எவ்வளவு சாப்பிடுறோம் என்ற விழிப்புணர்வே இருக்காது. இது ஒரு சின்ன உதாரணம்தான். இதே மாதிரி நம் தினசரி நடவடிக்கைகள் முதல், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கியமான வேலைகள் வரை ஒவ்வொரு செயலையும் முழு மனத்துடன் உற்று நோக்கி விழிப்புணர்வோடு செய்தால், அந்த செயலின் சாதக பாதக விளைவுகளை உணர்ந்து தவறுகளைச் சரி செய்து நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள முடியும். வேலை முடிந்த பிறகு நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியக் கேள்விகள்,

  1. எந்த எதிர்பார்ப்புடன் என்னிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டதோ அதை நான் முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கின்றேனா?

  2. இந்த வேலை இன்னொரு முறை என்னிடம் கொடுக்கப்பட்டால்  வேறு என்னென்ன மாற்றங்களை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்?

  3. அதற்கு யார் யாருடைய உதவி தேவைப்படும்?

  என்று நம்மை நாமே பார்த்து கேள்வி கேட்டு குறைகளைக் களைந்து நிறைகளைக் கூட்டி செயல்பட்டால் நமது திறன்களை மெருகேற்றிக் கொள்ளவும் முடியும், நம் முந்தைய  நிலையை விட  மேம்பட்ட நிலையை நாம் அடையவும் முடியும்.

  (தம்மைத்  தாமே அறிதிறனால் 

  அணுகா, அகலா நிழல் போல 

  நம்முடன் நாமே அணுகாமல்  

  நம்மை விட்டு நாமே  அகலாமல் 

  நம்மை நாமே விமர்சித்து 

  நம்முடன் நாமே போட்டியிட்டு 

  நம்மிலும் நாமே மேம்படுவோம் ! )

  தொடரும்...

  பிரியசகி 

  piriyasahi20673@gmail.com

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai