புதையல் 35

இப்படித்தான் இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் அவசரப்புத்தி உள்ளவர்களா
புதையல் 35

எண்ணங்களே வாழ்வை வண்ணமயமாக்கும் !

(எட்டு விதமான அறிவுத் திறன்களைப் பற்றியும் அவற்றை வளர்த்துக் கொள்ளத் தேவையான பயிற்சிகள் பற்றியும் மிகத் தெளிவாக விளக்கிய அறிவொளிக்கு கார்த்திக், விஷ்ணு, சந்தோஷ் ஆகிய மூவரும் நன்றி கூறினர்.)

விஷ்ணு : கரடுமுரடான கல்லே ஆற்று நீரின் ஓட்டத்தில் உருண்டு உருண்டு வழவழப்பான கூழாங்கல்லாக மாறுவது போல, எங்க வாழ்க்கையிலும் இப்ப இருக்கக் கூடிய பிரச்னைகளே எங்களை முதிர்ச்சி உள்ளவங்களா மாத்தும்னு  புரிய வச்சதுக்கு நன்றி சார்.

அறிவொளி : ஆமா விஷ்ணு வறுமை எப்பவுமே முன்னேற்றத்துக்குத் தடை இல்லை. அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற அதிபர்களாக விளங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், பிரெஞ்சுப் புரட்சியின் ஆன்மாவான ரூசோ, தன்னோட ஆராய்ச்சிகளுக்காக இரு முறை நோபல் பரிசு பெற்ற கியூரி அம்மையார், ரஷ்யாவின் சதர்மபுரட்சிக்குக் காரணமான லெனின், மாபெரும் அறிஞர் சாக்ரடிஸ், நம் தேசிய கவி பாரதி எல்லோரும் வறுமையில் வாழ்ந்த போதும் தங்களோட லட்சியப் பயணத்துக்குத் தடைக்கல்லா வறுமையை என்னைக்குமே நினைச்சதில்லை. ஏன் நம்ம முன்னாள் ஜனாதிபதியும் இளைஞர்களின் ஊக்க சக்தியுமா இருந்த அப்துல் கலாமே ஏழை படகோட்டியின் மகன்தானே. தளராத நெஞ்சுறுதி தான் அவங்களை வெற்றிப் பாதைக்கு வழி காட்டியது .

கார்த்திக் : விஷ்ணு மாதிரி வறுமை மட்டும் தான் பிரச்சனைன்னா பரவாயில்லை, எனக்கு படிப்பும் வரலைன்னு எல்லோரும் கிண்டல் பண்ணும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும் சார். 

அறிவொளி : மற்றவங்களோட விமர்சனங்களுக்காக நாம மனம் சோர்ந்து போக வேண்டியதுதில்லை. கார்த்திக் பள்ளிக்கூட பரிட்சையில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையோடு வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில்லை. எழுத்துலக மேதை டால்ஸ்டாய் ஆயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா எடிசன், தன் இயற்பியல் ஞானத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன், அரசியல் மேதை வின்ஸ்டன் சர்ச்சில், நம் தேசத்தந்தை மஹாத்மா காந்தி இவங்க எல்லோருமே பள்ளி நாட்களில் மந்த புத்தி உடையவங்களாத்தான் இருந்தாங்க. அவங்களெல்லாம் அவமானங்களைக் கடந்து வந்ததால தான் வாழ்க்கையில் ஜெயித்து இன்னைக்கு வரலாற்றுல இடம் பிடிச்சிருக்காங்க.

சந்தோஷ் : திறமையும், பொறுமையும் இருப்பவங்க நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிப்பாங்க. கொழுத்த மீன் வரும் வரை ஒத்தைக்காலில் காத்திருக்கும் கொக்கு, மீன் வந்த பிறகு தவறாம பிடிக்கிறது போல நமக்குரிய வாய்ப்பு வரும் வரை காத்திருந்து கிடைத்த வாய்ப்பை நழுவ விடாம நம் திறமையை நிரூபிக்கணும்.

ஒரு முறை வகுப்புல மாணவர்களுக்கு இயற்கை மேல ஆர்வத்தை ஏற்படுத்த ஒவ்வொருத்தரும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்கணும். மரம் வளர்க்க இடமில்லைன்னா தொட்டியிலாவது செடி நட்டு வளர்க்கணும்னு சொன்னேன் . ஒரு பையன் எழுந்து, 'சார் நானும் எத்தனையோ தடவை செடி வளர்க்கணும்னு முயற்சி பண்ணிட்டேன். நான் விதைக்குற விதை ஒன்னு கூட முளைக்கவே மாட்டேங்குதுன்னான். விதை விதைச்சியே தண்ணி ஊத்துனியாப்பான்னு கேட்டேன் . ஓ ! ஒரு நாளைக்கு எட்டு வாளி தண்ணி ஊத்துனேன்னான் .

கார்த்திக் : அடப்பாவி எட்டு வாளி தண்ணி ஊத்தினா விதை அழுகிப் போயிடுமே! அப்புறம் எப்படி முளைக்கும் ?

சந்தோஷ் : நானும் இதே கேள்வியைத் தான் கேட்டேன் .  ஆனா ஒரு விதை கூட அழுகிப் போகலைன்னு  எனக்கு  நிச்சயமா தெரியும்னான். எப்படிடா இவ்ளோ உறுதியா சொல்றேன்னு கேட்டா நான் தான் விதை முளைச்சிருக்கான்னா அப்பப்ப எடுத்துப் பார்ப்பனேன்னான் .

விஷ்ணு : அடக்கடவுளே ! இப்படிக்கூடவா அறிவாளிங்க இருக்காங்க .

சந்தோஷ் : இப்படித்தான் இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் அவசர புத்தி உள்ளவர்களா இருக்காங்க. உடனடி காப்பி மாதிரி எல்லாத்துலயும் உடனடி பலன் எதிர்பார்க்குறாங்க. அவசர புத்தியைக் கைவிட்டு இலக்கை நோக்கி பொறுமையா உழைச்சா வெற்றி நிச்சயம்.

அறிவொளி : ஆமா இலக்கில்லாத பயணம் துடுப்பில்லாத படகு போன்றது. சின்ன வயசுல இருந்தே ஒரு குறிக்கோளை மனதில் நினைத்து அதை அடையத் தேவையான திறமைகளை எல்லாம் வளர்த்துக் கிட்டா நிச்சயம் நினைச்சதை சாதிக்கலாம். ரிச்சர்ட் எவலின் பயர்ட் என்பவர் 1900 ஆம் ஆண்டு தன்னோட டைரியில் 'நான் தான் வட துருவத்தை முதலில் அடையும் மனிதனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்' என எழுதினார் அப்போது அவருக்கு வயது பன்னிரெண்டு. அன்றைய தினத்திலிருந்து தன்னை  அதுக்காகத் தயார்படுத்த தொடங்கினார். கடைசியில் இரு துருவங்களிலும்  பறந்த  முதல் மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத் தனைய துயர்வு .

என்ற குறளின் படி நம்மோட எண்ணங்களே நம் வாழ்வை மேம்படுத்தும்.

விஷ்ணு : நீங்க ஏற்கனவே சொல்லிக்கொடுத்த மாதிரி நான் வாழ்க்கையில் பெரிய ஆளா ஆகணும், நிறைய சம்பாதிச்சு எங்க அம்மாவை நல்லா வைச்சிக் காப்பாத்தணும்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேதான் இருக்கேன் சார். இதை நிச்சயம் அடைவேன்னு நம்பிக்கை இருக்கு.

அறிவொளி : நிறைய பணம் சம்பாதிச்சு அம்மாவைக் காப்பாத்தணும் என்பது நல்ல விஷயம் தான் விஷ்ணு ஆனா குறிக்கோள் என்பது இப்படி குறுகியதா, சுயநலம் சார்ந்ததா மட்டும் இருக்க்கக்கூடாது .

கார்த்திக் : வேற எப்படி இருக்கணும் சார் ?

(கார்த்திக்கின் கேள்விக்கு அவனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே பயனுள்ளதாக அமைந்த அறிவொளியின் விளக்கத்தை அடுத்த வாரம் காண்போம்)

தொடரும் 

பிரியசகி

priyasahi20673@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com