16.பேய்க்கு மருந்தா? நோய்க்கு மருந்தா?

‘பாம்பு என்றால் எனக்குப் பயமே இல்லை’ ‘பாம்பு பார்ப்பதற்கு ரொம்ப வாளிப்பாக, அழகாக இருக்கும்!’ ‘பாம்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்!’ என்று பாம்பைப் பற்றி சிலாகித்துப் பேசினார்
16.பேய்க்கு மருந்தா? நோய்க்கு மருந்தா?
Published on
Updated on
3 min read

‘பாம்பு என்றால் எனக்குப் பயமே இல்லை’ ‘பாம்பு பார்ப்பதற்கு ரொம்ப வாளிப்பாக, அழகாக இருக்கும்!’ ‘பாம்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்!’ என்று பாம்பைப் பற்றி சிலாகித்துப் பேசினார் 53 வயது பெண்மணி. பாம்பு என்றால் படையும் நடுங்கலாம். ஆனால் இவருக்கு துளியளவு பயமும் இல்லை. அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரின் மனைவி. இரண்டு மகன்கள், ஒரு மகள். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி நல்ல நிலையில் உள்ளனர். மகள் இறந்துவிட்டார்.

நாள்பட்ட மனநோயாளியான அவரை முழுமையாக ஆய்வு செய்வது சிரமமாக இருந்தது. இரண்டு வருட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மனநலச் சிகிச்சை பெற்றும் முன்னேற்றமில்லை. இரவுகளில் தூங்குவதேயில்லை. ஆர்ப்பாட்டமான விதவிதமான ஓயாத பேச்சு, பொருட்களை எறிதல், திடீரென பாடுதல், திடீரென உணர்ச்சிவசப்பட்டு அருகில் உள்ளவரை அடித்தல் என்று அவரது பலவித தர்க்கப் பொருத்தமற்ற, காரண காரியமற்ற இயல்புக்கு மாறான பலவித நோய் அறிகுறிகளை அவரது கணவர் பட்டியலிட்டார்.

சற்று நேரம் வரவேற்பறையில் காத்திருந்த அம்மையார் திடீரென காணவில்லை. கணவர் பதறி வெளியே சென்று தேடினார். அடர்ந்த வேலிகளினூடே வேகவேகமாகச் சென்று, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து ஏதோ ஓர் இலக்கு தேடிப் போய்க் கொண்டிருந்தவரை கணவர் மறித்து, சற்று கடுமை காட்டி திரும்பவும் அழைத்து வந்தார். எதுவும் நடக்காதது போல மீண்டும் எனது அறையில் வந்து அவர் அமர்ந்து கொண்டார்.

நீண்ட காலத்துக்கு முன் இறந்துபோன தாயாரும், சமீபத்தில் எதிர்பாராத நோயில் இறந்துபோன மகளும் அடிக்கடி கனவிலும், நேரிலும் (!?) வந்து போவதாகக் கூறீனார். கனவுகளில் சில விநோத நிகழ்வுகள் நடப்பதாக விவரித்துக் கூறினார். தன் தலையை வெட்டி ஒருவன் தன்னிடமே காட்டுவதாக ஒரு கனவில் நடந்தது என்று தெரிவித்தார். காளியம்மன், கருப்பசாமி, முனியசாமி கோவில்களுக்கு இருள் கவிழும் அந்தி நேரங்களில் போவதும், அங்கே பலத்த காற்று வீசி அவரை விரட்டுவதும் அல்லது தவளை, ஆடு, நாய் போன்றவை விரட்டியடிப்பதும் உண்டு என்றார். தொடர்ந்து வெவ்வேறு தகவல்களை ஒன்றுக்கொன்று தொடர்பற்று சொல்லிக் கொண்டே போனார்.

அவரது கணவர், ‘பத்து ஆண்டுகளுக்கு மேலாக செக்ஸ் உறவே எங்களுக்கு இடையில் கிடையாது. ஆனால் இப்போது என் அருகில் படுத்துக் கொண்டு பாலுறவுக்கு அழைப்பதும் செக்ஸ் விஷயங்களைப் பேசுவதும் எனக்கு ரொம்ப தர்மசங்கடமாக உள்ளது!’ என்று கசந்த மனத்துடன் தெரிவித்தார்.,

அம்மையார் உடையாடிய விதமும், அவரது விசித்திர கனவுகளும், பாம்புகளை அவர் விவரித்த விதமும் என்னை ஆழமாய் சிந்திக்கத் தூண்டின. அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ‘ஸ்டிரமோனியம்’ அல்லது ‘ஹையாசியாமஸ்’ மருந்துகள் தேவைப்படுமோ என தோன்றியது. ஆனால் இறுதியில் ‘லாச்சஸிஸ்’ தான் கொடுக்கப்பட்டது. ‘லாச்சஸிஸ்’ அவரை அமைதிப்படுத்தியது; அவரைத் தூங்கச் செய்தது; இயல்பான வாழ்க்கையை நோக்கி திருப்பியது. சிலமாத காலத்தில் முழுநலம் பெற்ற அவரும் அவரது குடும்பத்தினரும் நேரில் வந்து நன்றி பாராட்டினார்.

**

உலகின் முதல் மனநல சிகிச்சை மையத்தை துவங்கியவர் ஹோமியோபதியின் தந்தை டாக்டர் ஹானிமன் அவர்களே. ஆங்கில மருத்துவம் உளவியல் துறையில் இன்றுவரை எட்டமுடியாத சாதனைகளை 1792-லேயே சாத்தியமாக்கியவர் ஹானிமன்.

ஆதிகாலத்தில் மனநல பாதிப்புகள் உலகெங்கும் துர்தேவதைகளின் பேய் பிசாசுகளின், காத்து கருப்புகளின் விளைவு என்றே நம்பினர். மனநலச் சிக்கல்கள் மட்டுமின்றி அம்மை போன்ற கொள்ளை நோய்கள் கூட மாரியம்மனின் விளையாட்டு என்ற நம்பிக்கை இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. நோய்கல் கடவுளின் தண்டனை என்றும் மருந்தளிப்பது. சிகிச்சை பார்ப்பது கடவுளின் பணியில் குறுக்கிடுவது என்றும் கடவுளிடம் மண்டியிடுவதே சரி என்ற கருத்தும் காலம் காலமாய் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சி இன்றளவிலும் ஒருசில மதப்பிரிவினரிடம் காணப்படுகிறது. பின் உருவான வைதீக எதிர்ப்பு மதங்கள் மருத்துவத்தையும் ஒரு கடமையாகக் கொண்டனர். புத்த, சமணத் துறவிகள், சித்தர்கள் போன்றவர்கள் இந்த வழியில் வந்தவர்கள்.

ஒவ்வொரு சாதாரண நோயிலும் கூட மனநிலையில் மாற்றங்களும் திரிபும் ஏற்படுகின்றன. நோயுற்ற மனிதரை ஆய்வு செய்யும்போது உடல்சார்ந்த குறிகளுடன் மனக்குறிகளையும் கவனத்தில் கொண்டு மொத்தக் குறிகளையும் ஒருசேர நலமாக்குவதே முழுநலம் என்பது ஹோமியோபதியின் அணுகுமுறை. மனநலம் குறித்து மாமேதை ஹானிமன் அவர்கள் தந்து புகழ்பெற்ற ‘ஆர்கனான்’ நூலில் 21 மணிமொழிகளில் விவரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனமும், அதிலிருந்து கிளைக்கும் சிந்தனைகளும் வாழ்க்கையை மூல ஊற்றாகக் கொண்டவை அதன் தொடர்பான சிக்கல்கள் சமூக மற்றும் மனித உறவுகளின் சிடுக்குகளிலிருந்தும் அவற்றின் மீதான தனித்துவ எதிர்வினை, உள்ளார்ந்த ஆற்றலின் வடிவத் திரிபுகளை அடிப்படையாகக் கொண்டவை.

‘கனவுகள் ஆழ்மனத்துக்குப் போகும் ராஜவீதி’ என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். கனவுகளையும் விஞ்ஞானபூர்வமாக அணுகுவதாக கூறிக் கொள்ளும் ஆங்கில மருத்துவ மனநலத்துறை எந்திரங்களையும் ரசாயன மருந்துகளையும் மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது. நவீன கருவிகளுக்கு அவர்கள் தரும் மதிப்பு மரியாதையை கனவுகளுக்கு உணர்வுகளுக்கும் தருவதில்லை. அவற்றுக்கு பிரதான இடம் தருவதில்லை. ஆனால் ஹோமியோபதி மருத்துவர்கள் உடல்சார்ந்த வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கும்போதும் கூட மனநிலை மாற்றங்களுக்கு கனவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஹானிமன் பாதை சரியானது என்பதால் நோயாளி முழுநலம் அடைகிறார். மனநோயாளிகள் கூட புதிய வார்ப்புகளாக, பொறுப்புள்ள சமூக பிரஜைகளாக மாற்றப்படுகின்றனர்.

மேலும், ‘ஹோமியோபதி மருந்தான வெராட்ரம் ஆல்பத்தை மனநோயாளிகளுக்கான விடுதியில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் நிச்சயமாக குணமடைவார்கள்’ என்பது ஹானிமனின் அனுபவப் பதிவு. இது குறித்து ஹோமியோ நிபுணர் கே.சி.பாஞ்சா தனது ‘Master Key to Homoeopathic Materia Medica’ நூலில் ‘That is Veratrum, which Hahnemann says is potent enough to promote a cure of almost one-third of Insane in the Lunatic asylums (at all events as a homeopathic intermittent remedy)’ என்று குறிப்பிடுகின்றார்.

மனநல பாதிப்புக்குள்ளான அம்மையாரை நலப்படுத்திய ‘லாச்சஸிஸ்’ எனும் மருந்து பாம்பின் கொடிய விஷத்தினை வீரியப்படுத்தி அணுசக்தியாக மாற்றி ஹெர்ரிங் என்ற ஹோமியோ மேதையால் உருவாக்கப்பட்ட மருந்தாகும். அவரைப் பற்றிய ஒரு சுவையான தகவல். ஆங்கில மருந்து நிறுவனங்கள் டாட்கர்.ஹெர்ரிங் அவர்களை சம்பளத்துக்கு அமர்த்தி ஹோமியோபதி மருத்துவம் குறித்து ஆழமாய் ஆய்வு செய்து அதன் அறிவியலுக்கு புறம்பான மற்றும் எதிர்மறை அம்சங்களை எடுத்துச் சொல்ல பணித்திருந்தது. ஆங்கில மருத்துவராக இருந்த ஹெர்ரிங் ஹோமியோபதியின் அடிப்படை கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் கற்றுத் தெரிந்தபின் அதிலுள்ள உண்மைக்ளையும் மருந்தாற்றலையும் கண்டு வியந்து ஹோமியோபதி மருத்துவராகவே மாறி…. லாச்சஸிஸ் உள்ளிட்ட பல ஹோமியோபதி மருந்துகளை கண்டறிந்து புகழ்பெற்றார்.

மேஜம், தி.சா.ராஜூ அவர்கள், கடலின் ஆழம் கானச் சென்ற உப்பு பொம்மையைப் போல, ஹோமியோ கடலில் இரண்டறக் கலந்து கரைந்து போனதாக டாக்டர்.ஹெர்ரிங் அவர்களைப் பற்றி உவமித்துக் கூறியுள்ளது சிந்தனைக்கும் ரசனைக்கும் உரிய கருத்தாகும்.

••••

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com