
25 வயது இளைஞன் நல்ல உயரம். ஆனால் கம்பீரம் இல்லை. ஒடுங்கிய விழிகள், ஒட்டிய முகம், ஒல்லியான உடல்வாகு. சில ஆண்டுகள் முன்பு வரை ஆரோக்கியமாகவும், பலத்தோடும் இருந்து இப்போது பலவீனம் அடைந்திருக்கிறான். வாழ்க்கையே வெறுத்து, யாருடனும் சேரப்பிடிக்காமல் வீட்டில் அறையில் தவசி போல தனிமையிலே நாட்களை கழித்து வந்திருக்கிறான். இவனது பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் பேசி விவாதித்த போது கடும் ஞாபக மறதி காரணமாக ஒவ்வொரு பழைய அனுபவத்தையும் சிரமப்பட்டு யோசித்து யோசித்து தயங்கித் தயங்கி ஆழ்ந்தடங்கிய குரலில் தெரியப்படுத்தினான். அவனைப் பற்றிய விவரங்கள்….
பள்ளிப்பருவத்தில் 12 வயதில் விடுதியில் தங்கி படித்திருக்கிறான். ஆங்கிலப்பாடம் புரியவில்லை. ஆர்வமில்லை. ஆங்கில ஆசிரியர் எல்லோர் மத்தியிலும் அவனைத் திட்டுவதும், அடிப்பதும் அவமானப்படுத்துவதுமாக இருந்திருக்கிறார். அதே போல் உடற்பயிற்சி ஆசிரியர் மைதானத்தில் பலர் முன்பு இவரைத் திட்டுவதும் அடிப்பதும் இவரை மிகவும் பாதித்துவிட்டது. இந்த இரண்டு ஆசிரியர்களின் அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்ட மாணவ நண்பர்கள் விடுதி அறைகளில் இருக்கும்போது ஆசிரியர்களின் கோபமும் கொச்சைத்தனமும் மிக்க வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள். ஆனாலும் இரவின் அமைதியில் பகல்நேர அவமானங்கள் தலைவிரித்தாடுவதைத் தடுக்க முடியவில்லை. இதற்கு வடிகாலாக சுய இன்பப் பழக்கமும், ஒருவரோடு ஒருவர் நெருங்கி பாலுறவு இன்பம் பெறும் (Home Sexual) பழக்கமும் அவர்களுக்குள் உருவாகிவிட்டது. ஆசிரியரிடம் அடிபடும் நாட்களில் இவர்கள் நிச்சயமாக சுய இன்பத்திலோ அல்லது நண்பருடன் உறவு கொள்வார்.
வாழ்க்கைக்கு உதவாத, வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்க உதவாத, கசப்பான கல்வியும், திணித்தல் முறையில் நடைபெறும் கற்பித்தலும், ஆசிரியர் சிலரின் அன்பற்ற தவறான அணுகுமுறைகளும் என்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்பதற்கு இவனும் ஓர் உதாரணம். பள்ளி நாட்களிலேயே தவறான பாலியல் பாடங்களைப் படித்து முடித்தபின் இவனது உடலிலும், மனத்திலும் வேக வேகமான மாற்றங்கள். +2 முடித்தபின் மேற்கொண்டு படிக்க வாய்ப்பின்றி ஓரிராண்டு காத்திருந்து சென்னை சென்றான். தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு நேரக் காவல் பணியில் சேர்ந்தான்.
தூங்காத இரவுகள் துயரங்களைக் கூட்டின. பாழாய்ப் போன வீட்டு நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாமல் வட்டமிட்டுக் கொண்டே வந்தன (பள்ளிப்பருவ விடுதி வாழ்க்கையில் கூட இவ்வளவு வீட்டு ஞாபகம், ஊர் ஞாபகம் வந்ததில்லை) இரவு ஒரு முறை இருமுறை அல்ல, பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. சில நாட்களில் 10 நிமிடத்துக்கு ஒரு முறை சிறுநீரில் பால் கலந்தது போல் வெள்ளைத்தன்மை இருந்தது. இரவு விழித்துப் பணி புரிவதால் காலை 9 மணி முதல் 12 மணி வரைதான் தூக்கம். ஆனால் எழமுடியாத அளவு அசதி. தூக்கத்தில் அதிகளவு விந்து வெளிப்பாடு, உறுப்பு விரைத்தல், இரவில் விழித்திருக்கும் வேளையிலும் தன்னையறியாமல் விந்து வெளி வருவதுண்டு. இதனைத் தொடர்ந்து பகலில் களைப்பும் பலவீனமும் தாக்கும் தொந்தரவுகள் அனைத்தும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் நரம்பியல் நிபுணர் ஒருவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினார்.
ஆறு மாத சிகிச்சையில் உடல் ஆரோக்கியத்தில் திருப்திகரமான மாற்றங்கள் ஏற்படவில்லை. பாலியல் தூண்டல்கள் குறையவில்லை. இன்னும் அவ்வப்போது (Penis Erection) உறுப்பு விறைப்பும், உயிர்நீர் வீணாவதும், சிற்றின்பக் கனவுகளின் ஆக்ரமிப்பும் கடுமையான ஞாபக மறதியும், எதிலும் யாருடனும் கலக்க முடியாத தனிமை மனநிலையிலும் மாற்றமில்லை. வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டான். வேலைக்குப் போக மனமில்லை. ஒவ்வொரு நாளும் இனம் புரியாத துக்கத்துடன் கடும் மனச்சோர்வுடன் கழிந்து கொண்டிருந்தது.
என்னிடம் வந்த போது அவருக்கு ஹோமியோ மருந்துகளின் ஆற்றல் பற்றித் தெளிவுபடுத்தி நம்பிக்கையூட்டினேன். அவரது இயல்புகள், கனவுகள் பற்றி விசாரித்தேன். வழக்கமாக சிற்றின்பக் கனவுகள் அதிகம் வரும் என்றும் சமீப காலமாக பிறருடன் சண்டை போடுவது போலவும், பள்ளி ஆசிரியர்கள் அடிப்பது போலவும், கிணற்று நீரில் தலைகீழாக விழுவது போலவும் கனவுகள் வருவதாகக் கூறினார்.
இவருடைய உடல், மனக் குறிகளைக் கொண்டு Phos Acid 1M (வாரம் 1 Dose வீதம்) 2 dose-ம் தொடர் மருந்துகளும் கொடுத்தனுப்பினேன். சுமார் 20 நாட்கள் கழித்து மீண்டும் வந்தார். இப்போது அவரது சொற்களில் நம்பிக்கை தொனித்தது. இரவு அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்னை இப்போது இல்லை என்றும் அடிக்கடி விந்து வெளியேறுதல் பாதிக்குமேல் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். உடல் அசதி நீடிப்பதாகச் சொன்னார். ஆனால் முன்பு படுத்தால் எழ முடியாதளவு அசதி இருந்தது. இப்போது பரவாயில்லை என்றான். அவனது தினசரி நடவடிக்கைகளிலும் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதையும் கூறினார். மீண்டும் PHOS ACID 1M DOSE கொடுத்தனுப்பினேன். அடுத்த 2 வாரங்களில் அவரது உடல் மனநிலைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. PHOS ACID 10M 1 DOSE-ம் இரு மாதத்திற்கான தொடர் மருந்துகளும் அளிக்கப்பட்டது. அவர் முழுநலம் பெற்றார்.
**
மாதவிலக்கு தொல்லைகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி மீண்டும் ஒருமுறை வந்தாள். மிகவும் தயக்கத்துடன் உள்ளடங்கிய குரலில் தனது தோழிக்கு அதிக காம உணர்வுத் தொல்லைகள் உள்ளதாகவும் அதனால் பலவிதங்களில் சுய இன்பங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அது குறித்து அவள் வேதனைப்படுவதாகவும் கூறினாள். தோழியை நேரில் அழைத்து வரமுடியவில்லை என்றும் ஆனால் சிகிச்சை பெற ஒத்துழைப்பாள் என்றும் தெரிவித்தாள். மருந்து கொடுத்தனுப்பினேன்.
ஒரே மாதத்தில் தோழியிடம் மாற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்த பெண் 2வது மாதமும் 3வது மாதமும் சிகிச்சைக்கான மருந்துகளை வாங்கிச் சென்று விட்டு 4வது மாதம் வந்து புதிய தகவல் ஒன்றைச் சொன்னாள். தனக்குத் தான் அப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டதாகவும் சொல்வதற்கு வெட்கப்பட்டதால் தோழிக்கு என்று சொல்லி மருந்து வாங்கியதாகவும் தற்போது உடல், மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு நல்ல நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறி நன்றிப்பெருக்கில் கண் கலங்கினாள். இவளுக்கு உதவிய மருந்துகள் கலாடியம், ஓரிகானம்.
**
உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள் பெண்கள் பலரிடமும் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்பே சிறுபிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட 40, 50 வயதுக்குப் பிறகும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது. தற்செயலாகத் துவங்கும் இப்பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீளமுடிவதில்லை.
‘சுய இன்பம் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல்நலத்துக்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. சிறிய பலவீன உணர்வு மட்டும் ஏற்படலாம். ஓய்வுக்குப் பின் அதுவும் சரியாகிவிடும். சிறுநீர் கழிப்பது, உமிழ்நீரைத் துப்புவது போல விந்து வெளியேற்றத்திலும் எந்தவித பாதிப்பும் இல்லை. பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்வது தவறானது என்பன போன்ற கருத்துக்களை ஆங்கில மருத்துவர்கள் மற்றும் பாலியல் உளவியல் நிபுணர்களும் கூறுகின்றனர். அது மட்டுமட்டுமின்றி சில மருத்துவர்கள் இப்பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.
அது என்ன அளவு? உச்சி வெயில் நேரத்தில் நிர்வாணத் திரைப்படங்களைப் பார்த்து உஷ்ணமேறித் திரியும் நரம்பு நோயாளிகளுக்கு அது எந்த அளவுக்குத் தேவை? சிறுநீர் போல, எச்சில் போல விந்துவும் கழிவுதான் என்று வாதிடுவது தவறான வாதம். பிறந்த குழந்தைக்கும் எச்சில் சுரக்கும், ஆனால் விந்து சுரக்க 15,16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விந்து இனப்பெருக்க ஆற்றலுள்ளது. விந்தினை எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?
விரசங்களும் ஆபாசங்களும் எல்லை மீறி வீட்டின் வரவேற்பறையில் காணொளிக் காட்சிகளாய் வந்து இயற்கைக்கு மாறாக இளம் பருவத்தினரின் பாலுணர்ச்சி அடிக்கடி தூண்டப்படுகிறது. வெளிச்சத்திலே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளைய பாரத்தின் பாதங்களை ஆக்கபூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்குப் பங்கில்லையா?
ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, மலர் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மாற்றுமுறை மருத்துவங்களிலும் சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமைத்தனத்திலிருந்து வெளி வரவும், பின் விளைவுகளிலிருந்து மீளவும் ஏராளமான மருந்துகள் உள்ளன. இவை பற்றி மாற்று மருத்துவர்கள் பேசினால், எழுதினால், விளம்பரம் செய்தால் ‘அவை எல்லாமே விஞ்ஞான விரோதமானவை’ என்றும் ‘பொய்கள்’ என்றும் ‘இளைஞர்கள் ஏமாற வேண்டாம்’ என்றும் ஆங்கில மருத்துவர்கள் கடுமையாக விமரிசனம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆங்கில மருந்துவத்தில் உயர்பட்டம் பெற்று டாக்டர் ஹானிமன் MD அவர்களால் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மாற்றுமருத்துவ முறை ஹோமியோபதி. இது நவீன அடிப்படைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டது. மனிதனின் உடலையும் மனத்தையும் முழுமையாக ஆய்வு செய்து நிரந்தர குணமளிக்கும் பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறை. ஹோமியோபதியில் சுய இன்பப் பழக்கத்திலிருந்து மீளவும், பின் விளைவுகளிலிருந்து மீளவும், இதர ஆண் பெண் பாலியல் நலப் பிரச்னைகளிலிருந்து மீளவும் 200க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. பிக்ரிக் ஆசிட், அனகார்டியம், கோனியம், சைனா, ஸ்டாபிசாக்ரியா, அக்னஸ் காஸ்டஸ், பிளாட்டிஸா, கலாடியம், மூரக்ஸ், ஹையாசியாமஸ், ஓரிகானம், அபிஸ்மெல், நேட்ரம்மூர், ஜெல்சிமியம் போன்றவை முக்கியமான மருந்துகளாகும்.
சுய இன்ப பழக்க அடிமைத்தனத்தில் மூழ்கித் தவிக்கும் இளைஞர்களும், மாணவ மாணவியரும் தயக்கமின்றி ஹோமியோ மருத்துவ நிபுணர்களை அணுகி புத்துணர்வுமிக்க புதுவாழ்வு பெறலாம்.
••••
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.