

வளர்ந்து வரும் நாடுகளின் மிக முக்கிய உடல்நலப் பிரச்னை வயிற்றுப்போக்கு. இதனால் ஒவ்வொரு நிமிடமும் ஆறு பிஞ்சுக்குழந்தைகளை உலகம் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு முப்பதாயிரம் குழந்தைச் செல்வங்கள் வயிற்றுப் போக்கினால் அகால மரணமடைகின்றனர். இத்தகைய மனித இழப்புகள் எளிதில் தவிர்க்கக் கூடியவை. ஆனால் வறுமை, சுகாதாரமின்மை, அறியாமை, சத்துக்குறைபாடு, வயிற்றுப்போக்கு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக இந்தியா போன்ற நாடுகளில் வயிற்றுப் போக்குச் சாவுகள் வாடிக்கையாகிவிட்டன.
இயல்பான நிலையில் (Normal consistency) இரண்டு மூன்று முறை மலம் கழித்தாலும் கூட வயிற்றுப்போக்கு எனக் கூற முடியாது. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு மலம் சற்று இளக்கமாகவே இருக்கும். அதை வயிற்றுப்போக்காகக் கருத வேண்டியதில்லை. ஒரே நாளில் தொடர்ந்து பலமுறை நீர்த்த நிலையில் (watery) மலப்போக்கு ஏற்பட்டால் அதை வயிற்றுப் போக்காகக் கருத வேண்டும். பொதுவாக ஆறுமாத வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தாய் சேய் இருவரின் உணவிலும் தவறுகள், தாய்மார்கள் குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமாகவும், அடிக்கடியும் உணவூட்டுதல், இடமாற்றம், அதிக வெயில், அதிக மழை, தட்பவெப்பநிலை மாற்றம், சுகாதாரக் குறைபாடுகள் போன்ற காரணங்களால் குழந்தைகள் எளிதில் வயிற்றுப்போக்குக்கு ஆளாகின்றனர். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், ஈ மொய்த்த பண்டங்கள், கழுவப்படாத காய்கறிகள், பழங்கள், சுகாதாரமில்லாத பானங்கள், பாதுகாக்கப்படாத கரண்டிகள், பாத்திரங்கள், சுத்தமின்மை, தாய்சேய் இருவரின் விரல் நகங்களில் அசுத்தம் , உடல் சுத்தம், உரிய கழிப்பிட வசதிகள் இல்லாமை அல்லது இருந்தும் பயன்படுத்தாமல் தெருவோரம் மலங்கழித்தல் தூய்மையற்ற இடங்களில் விளையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு காரணமாக அதிகளவு நீர்ச்சத்தும், தாது உப்புக்களும் வெளியேறி விடுகின்றன. உடல் வறண்டு விடுகின்றது. நோய்க்கிருமிகள் சூழ்கின்றன. மூளை, இருதயம், சிறுநீரகங்கள் சோர்வடைகின்றன. கண்கள் குழிவிழுகின்றன. நாடி தளர்கின்றது (உடல் அதிகளவு குளிர்ச்சியடைந்திருப்பதும், உதடுகள் நீலநிறமாக மாறியிருப்பதும் உடல்நிலை மோசமடைந்து விட்டதைக் காட்டும் அறிகுறிகள்) பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை கோவில் குளங்களுக்கு அல்லது மருத்துவ செலவும் ஏற்படுகின்றது. இதுவே நோய்க்கு சிகிச்சையாக மருந்தாகக் கருத முடியாது.
உலக நல நிறுவனமும், பல்வேறு அறிவியல் ஆய்வு நிறுவனங்களும் வாய்வழித் திரவச் சிகிச்சையை (Oral Rehydration Therapy) சிபாரிசு செய்கின்றன. இது எளிமையானது, அவசியமானது. சிறந்த பலனளிக்க கூடியது. இதைச் சரியாகப் பயன்படுத்தினால் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இளந்தளிர்களின் மரணத்தை 90% முதல் 95% வரை தடுத்து நிறுத்த முடியும். Elecotral Powder எனவும் Electrolytes எனவும் O.R.S எனவும் பாக்கெட் வடிவில் விற்கப்படும் உப்புப் பொருட்கள் வாங்கிச் சுத்தமான நீரில் கரைத்துக் கொடுக்கலாம். அல்லது உப்பு ஒரு பங்கும் சர்க்கரை நான்குபங்கும் கலந்த நீரை (கை குழந்தைக்கு எனில் சிறிய நுனியளவு உப்பும் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் போதும்) அடிக்கடி புகட்டலாம். அல்லது தேவைக்கேற்ப அடிக்கடி கொடுக்கலாம். இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 100 ml, 150 ml அளவும் இக்கரைசல் நீரைக் கொடுக்கலாம். இந்த உப்புச் சர்க்கரைக் கரைசலை உயிர்காக்கும் திரவம் என்று சொன்னால் மிகையாகாது.
வயிற்றுப்போக்கு தாக்கிய நிலையில் குழந்தைகளைப் பட்டினி போட்டுவிடக் கூடாது. தாய்ப்பால் மற்றும் எளிதில் ஜீரணமாகக் கூடிய திரவ உணவுகளை (கஞ்சி, மோர்க்கஞ்சி, ஆராரூட் கஞ்சி, குளுகோஸ்) கொடுக்க வேண்டும். வயிற்றுப் போக்கினால் எளிதில் உடல்வறட்சியும் கடுமையான பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் அதிகளவு எச்சரிக்கை தேவை. தாமதம் செய்தாலோ, கவனக்குறைவாக நடந்து கொண்டாலோ, அறிவுக்கு புறம்பான பழக்கங்களைக் கையாண்டாலோ பல இளம் உயிர்கள் பலியாக நேரிடும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கழுத்தில் தாயத்து அல்லது புலி நகத்தைக் கட்டுவதால், கைகால்களில் கயிறு கட்டுவதால், மசூதிகளில் ஓதுவதால் வயிற்றுப்போக்கு எப்படி நிற்கும்? தண்ணீர் தண்ணீராக மலப்போக்கு இருப்பதால் குடிப்பதற்கு நீரோ, திரவ உணவுகளோ கொடுத்தால் மேலும் அதிகளவு வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று தவறாக எண்ணும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாங்களே மரணம் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள். இது பரிதாபக்குரியது.
வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய ஓய்வு, திரவ உணவுகள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்றவையே மிகச் சிறந்த முதலுதவியாக அமையும். சிலமணி நேரங்களில் முழு நிவாரணம் பெறவில்லையெனில் உரிய மருத்துவம் தேவைப்படும். சிசுக்கள் முதல் சிறுவர்கள் வரை வயிற்றுப்போக்கு தாக்கும் போது ஹோமியோபதி சிகிச்சையை நாடினால் எளிதில் விரைவில் பூரண நலம் பெற முடியும். கீழ்க்காணும் ஹோமியோபதி மருந்துகள் வயிற்றுப்போக்குக் குறிகளுக்குச் சிறப்பாகப் பயன்பட்டு குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமளிப்பதோடு முழுநலத்தையும் அளிக்கக் கூடியவை.
போடோபைலம் – பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்கு நீர் போன்ற துர்நாற்றமுள்ள ஏராளமான வயிற்றுப்போக்கு.
சமோமில்லா – பல் முளைக்கும் பருவத்தில் வயிற்று வலியுடன் வயிற்றுப் போக்கு; சில சமயம் பச்சை நிறமான, துர்நாற்றமுள்ள வயிற்றுப் போக்கு. குழந்தை அமைதியற்று, எரிச்சலைடைந்து, அழுது கொண்டிருக்கும். தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்லும்.
ரியூம் – மிகுந்த புளிப்பு நாற்றத்துடன் ஏற்படும் வயிற்றுப் போக்கு, மலம் கழிப்பதற்கு முன் குழந்தை அழும்.
மெக்னீஷியம் கார்ப் – வயிற்றுவலியைத் தொடர்ந்து, பச்சை நிற, நுரையுள்ள சளி கலந்த வயிற்றுப்போக்கு, பாலருந்தும் குழந்தைகளுக்கு ஜீரணமாகாமல் பால் சிறுகட்டிகள் போல் தோன்றும்.
ஆர்சனிகம் ஆல்பம் – கெட்டுப்போன அல்லது விஷத்தன்மையுள்ள உணவை உண்டதால், அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, வாந்தியும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி ஏற்படக்கூடும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் குடித்தபின்பும் குறிகள் அதிகரிக்கும்.
ஏதுஸோ – பால் ஜீரணமாகாமல் தயிர் போன்று வாந்தியாவதுடன் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
அகோனைட் – தாகம், குளிர் உணர்வு, காய்ச்சல் போன்ற குறிகளுடன் கோடைகால வயிற்றுப் போக்கு.
ஆலோ – தன்னுணர்வின்றி மலப்போக்கு; நிற்கும்போது, நடக்கும்போது, படுத்திருக்கும் போது கூட உணர்வின்றி மலம் கழிந்துவிடும். குடல்களில் இரைச்சலும், ஆசனவாயில் எரிச்சலும் காணப்படும்.
அர்ஜண்டம்நைட்ரிகம் – இனிப்பு உண்பதால், பயத்தால், உணர்ச்சி வசப்படுவதால்.
காரிகா பாப்பையா – செயற்கை உணவு அல்லது பவுடர் பால் அருந்தும் குழந்தைகளுக்கு அஜீரணம் காரணமாக அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, பால் அல்லது உணவு உண்டதும் மலப்போக்கு ஏற்படும்.
••••
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.